Monday, October 19, 2015

தென்னிந்திய நடிகர் சங்க வரலாறு தெரியுமா?

நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்து வந்தவர் சோமசுந்தரம்.  இவர் நடிகர்களுக்காக ஒரு சங்கம் அமைத்து நாடக நடிகர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.சக்தி நாடக சபாவில் நடித்து வந்த கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சுப்பையா, நம்பியார், சிவாஜிகணேசன் உட்பட பலர் அந்த அமைப்பில் உறுப்பினர் ஆனார் கள். மயிலாப்பூர் ஜம்மி பில்டிங் எதிரில் ஒரு அறையில் சக்தி நாடக சபா குழுவினர் ஒத்திகைப் பார்ப்பார்கள். அங்குள்ள ஒரு சிறு அறையில் நடிகர் சங்க அலுவலகம் செயல்படத் துவங்கியது.

பிற்காலத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இடம் பெற்ற இந்த நடிகர் சங்கம் முதலில் ஒரு சாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்டது என்பது முக்கியமான விஷயம்.ஆரம்பத்தின் அதன் நிதி இருப்பு பூஜ்ஜியம்தான். உறுப்பினர் கார்டு அச்சிட இருபது ரூபாய் கூட இல்லாமலிருந்ததாம்.சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோக் கள் சேலம். கோவை. போன்ற இடங்களில்தான் இருந்தன. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கோவை பட்சிராஜா ஸ்டுடியோ, என சில ஸ்டுடியோக்கள் பிரபலமாக விளங்கின. அங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அங்கேயே போய்த் தங்கி நடிப்பார்கள் நடிகர்கள்.

ஸ்டுடியோக்கள் சென்னை வந்த பிறகுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கும் நடிகர், நடிகைகள் சென்னையில் தங்கினார்கள். திரைப்படக் கலைஞர் களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் எடுத்த முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது.

கே.சுப்ரமணியம் அவர்களைத் தொடர்ந்து, டி.வி.சுந்தரம், சித்தூர் வி.நாகைய்யா, என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., அஞ்சலிதேவி, ஆர்.நாகேந்திரராவ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.வி. சாமிநாதன், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் என புகழ் பெற்ற பல கலைஞர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்திய இந்த சங்கத்திற்கு இப்போது தலைவராக தேர்வாகி இருக்கிறார் நாசர். இதுவரை பதினான்கு தலைவர்களை சந்தித்துள்ள நடிகர் சங்கத்திற்கு பதினைந்தாவது தலைவராக நாசர் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே இப்போது திரைப்படத்தையும், அது சார்ந்த சங்கத்தையும் கிழி கிழி என்ரு கிழிக்கும் போக்கு நிலவுகிறது.ஆனால் தமிழ் சினிமாவை அதன் ஆரம்ப வருடங்களில் எந்தன் பத்திரிகை களும் கண்டு கொள்ளவே இல்லை. 1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ். கே. வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான இதழ். (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935 இல் தான் முதல் தமிழ் திரைப்பட இதழ் சினிமா உலகம் பி. எஸ். செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் “சில்வர் ஸ்கிரீன்” என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : பாலன் ஜர்னலிஸ்ட்.

No comments:

Post a Comment