Tuesday, July 14, 2015

ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி வாட்ஸ்‬ அப்பில் வந்தது....!


“உடல் நலக்குறைவு என்று இப்போது ஜெயலலிதா ஆடி வரும் இந்த நாடகம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சதித் திட்டமேயன்றி வேறு இல்லை. கடந்த வருடம் செப்டம்பர் 27ல் தண்டிக்கப்பட்டபோது இருந்த அனுதாப அலை, இப்போது இல்லை என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் போன்ற விவாதங்கள் அனைத்தும், உடல் நிலை சரியில்லை என்றால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும் என்பது ஜெயலலிதா நன்றாக அறிந்ததே. 1984ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் சென்று, மருத்துவமனையில் இருந்தபடியே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு முறை அதே போன்ற வெற்றியை ஈட்டலாம் என்ற திட்டமே தற்போது நடந்து வருவது.

மிக மிக கவனமாக திட்டமிட்டே இந்த நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார். மே 11 தீர்ப்பு வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், இந்த மேடை நாடகத்தின் காட்சிகளே. பதவியேற்பு விழாவை சுருக்கமாக முடித்தது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் காணொலி காட்சிகளுக்கு பத்திரிக்கையாளர்களை அழைக்காமல் விட்டது, சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்தாமல் இருப்பது, பார்வையாளர்கள் யாரையும் சந்திக்காமல் இருப்பது, இப்தார் விருந்தை ரத்து செய்தது உள்ளிட்ட அனைத்தும், ஓரங்க நாடகங்களே. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறும் நபர் அல்ல ஜெயலலிதா.

இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லத் தவறிய ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை நாம் கவனமாக பார்க்க வேண்டும். “அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.”

“விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன” என்பது போன்ற நாடகத்தனமாக வசனங்களையெல்லாம் பேசும் நபர் அல்ல ஜெயலலிதா. மேலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால், அதற்காக மெனக்கெட்டு செய்தி அனுப்பும் வழக்கமும் ஜெயலலிதாவிடம் கிடையாது. முதன் முறையாக “திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால்” என்ற வாசகத்தை நாம் கவனமாக பார்க்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், கவனமாக தலைமுடிக்கு கருப்புச் சாயம் பூசி, உதட்டுச் சாயத்தோடு பங்கேற்கும் ஜெயலலிதா, தன்னுடைய உடல் நலன் குறித்து இப்படியெல்லாம் வெளிப்படையாக கூறும் நபர் அல்ல. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய வாசந்தி என்ற எழுத்தாளருக்கு எதிராக தடையுத்தரவு பெற்று, அந்த புத்தகத்தையே வெளிவராமல் செய்த நபர்தான் இந்த ஜெயலலிதா. தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு கூட, பார்வையாளர்கள் யாரும் இல்லாமலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெயலலிதாவா தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவார் ?

ஜெயலலிதா சிறுநீரகம் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை என்ற பெயரில் ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகையில், இந்த உடல்நிலையை காரணம் காட்டி, தண்டனை குறைவு அல்லது, விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா ?

தன்னுடைய நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஜெயலலிதா தன் உடல்நிலை குறித்த தகவல்கள் மிக மிக கவனமாக பரப்பப்படுகிறார். போயஸ் தோட்டத்துக்கு உள்ளே சென்று வரக்கூடியவர்களில் பலர், தங்களுக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்களை அழைத்து, இந்த செய்திகளை தெரிவிக்கின்றனர். மாநில உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், இந்த பொய்யை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

கடந்த ஏழாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், பேசிய கலைஞரும் ஜெயலலிதாவின் நாடகத்துக்கு பலியாகி வெளிப்படையாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசினார். அதன் பிறகு, இன்று வெளிப்படையாக விவாதங்கள் தொடங்கி உள்ளன. இந்த வியாதியா, அந்த வியாதியா என்று பரபரப்பாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா நினைத்தால் ஒரே ஒரு அறிக்கை மூலமோ, பத்திரிக்கை செய்தி மூலமோ இந்த விவாதங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இந்த விவாதங்களை மிக மிக ஆனந்தமாக ஜெயலலிதா ரசித்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் அவரது உடல்நிலைக்கு என்ன என்று பேசிக்கொண்டிருக்கையில், மீண்டும் முதல்வராக நினைக்கும் தனது மாஸ்டர் ப்ளானை நினைத்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்த நாடகம், 1984 எம்ஜிஆர் வென்றதைப் போன்று, தேர்தலிலும், வழக்கிலும் வெற்றிக் கனியை ஈட்டித்தருமா அல்லது, திரை மூடப்பட்டு, நாடகம் கடும் தோல்வியை அடையுமா என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும்.