Saturday, October 25, 2014

மோடி மீது காப்பிரைட் புகார்!

இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் போட்டோக்கள் குறித்த சர்ச்சை எப்போதும் ஓய்வது இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் குரங்கு ஒன்று தன்னை செல்பியாக படம் எடுக்க, அந்தப் படம் பல இடங்களுக்குச் சுற்றி கடைசியாக விக்கிபீடியாவுக்குச் சென்றது. விக்கிபீடியா குரங்கு செல்பியை பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டது. இதற்கு அந்தக் கேமராவின் உரிமையாளரான அமெரிக்கர், குரங்கு எடுத்த செல்பிக்கு நான்தான் உரிமையாளர் என்று விக்கிபீடியா மீது வழக்கு போட்டார். இதனால், போட்டோகிராபர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த வரிசையில் பிரதமர் மோடியையும் வம்புக்கு இழுத்துள்ளார் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த போட்டோ கிராபரான பிமல்நேபாள்.

சர்வதேச புகழ் பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் சேனல் மற்றும் ஹார்வார்டு மீடியா உட்பட பல நிறுவனங்களுக்கு பிமல்நேபாள் போட்டோகிராபராக உள்ளார். இந்நிலையில், தான் எடுத்த புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடி, சிறிது உல்டா செய்து, தனது முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும், இதன் மூலம் தனது காப்பி ரைட் உரிமையை அவர் மதிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி மீது பிமல்நேபாள் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பிமல் நேபாள் தனது முகநூல் பக்கத்தில் ”இந்திய பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக என் படத்தை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அந்தப் படத்தை முழுமையாக பயன்படுத்தாமல், சிறிது மாற்றம் செய்து, அதில் தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்து, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உண்மையில், இந்தப் படத்தை கடந்த ஆண்டு நான் என் வீட்டில், என் மகள் உதவியுடன் கிளிக் செய்தேன். தீபாவளி நாளில் என் வீட்டினுள் உள்ள அறையில் மகள் அபீனா வரிசையாக தீபம் ஏற்ற, நான் அதை போட்டோவாக பதிவு செய்தேன்.

இதன் பின்னர் இந்தப் போட்டோக்களை நான் கூகுளில் பதிவேற்றம் செய்தேன். இப்படிப்பட்ட என் படத்தை, எனது அனுமதியின்றி இந்திய பிரதமர் மோடி தன் முகநூல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் காப்பிரைட் உரிமையை அவர் மீறியுள்ளார். ஆனாலும், மோடி பக்கத்தில் என் படம் பயன்படுத்தப்பட்டது மூலம் நான் உலகப் பிரசித்திப் பெற்ற போட்டோகிராபராக மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

பிமல் நேபாளின் இந்தக் கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில், ”கூகுளில் பதிவேற்றப்பட்டது உங்கள் படம் என்று நிச்சயம் மோடிக்கு தெரியாது. அந்தப் படத்தை அவர் தேர்வு செய்து, சிறிது மாற்றம் செய்து, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உங்கள் பெயர் குறிப்பிட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை” என்று சிலரும்,

”இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். காப்பி ரைட் சட்டத்தை தெரிந்து கொண்டு, அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கலாம். எப்படி இருந்தாலும், மோடியால் நீங்கள் பிரபலம் ஆகிவிட்டீர்கள்”என்று சிலர் ஆதரவுமாக கருத்து பதிவு செய்துள்ளனர்.

Monday, October 20, 2014

போனசாக பிளாட், கார், நகைகளை வழங்கிய நிறுவனம்!

தீபாவளி என்றதும் தொழிலாளிகள் கண்களுக்கு முதலில் தெரிவது போனஸ்தான். கிடைக்கும் போனசை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு புதுத் துணிகள், பலகாரங்கள் வாங்குவதில் தொடங்கி, அந்த பணத்தைக் கொண்டு சிறிய அளவில் நகைகள் வாங்குவது வரை பல்வேறு நிலைகளில் போனசுக்கு செலவுகள் காத்திருக்கும். இந்த வகையில் பார்த்தால் அதிகபட்சம் 30 அல்லது 40 ஆயிரம் ரூபாய் வரை வெகு அரிதாக சிலருக்கு போனஸ் கிடைக்கலாம்.ஆனால் சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

சூரத் நகரைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனமான சாவ்ஜிபாய் டோலக்யாவின் உரிமையாளர் டோலக்யாதான் இப்படியான அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தன் நிறுவனத்தில் பணிபுரியும் 500 தொழிலாளர்களுக்கு புத்தம்புது கார், 300 தொழிலாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 200 தொழிலாளர்களுக்கு அபார்ட்மென்ட் வீடுகள் என்று போனஸ் கொடுத்ததுடன், வருமானவரித்துறைக்கு இதற்கு முறையான ஆவணங்களையும் கொடுத்துவிட்டார்.என்ன இப்படி போனஸ்? என்று சக வியாபாரிகள் கேட்டால், “என் நிறுவனத்துக்காக இந்த தொழிலாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது? அதனால்தான் அவர்களை மகிழ்விப்பதற்காக இந்த பரிசை வழங்கியுள்ளேன்” என்றார்.

இந்த போனஸ் குறித்து கவ்ரவ் தக்கல் என்ற தொழிலாளி கூறும்போது, “நான் இங்கு வேலைக்கு வந்து இரு ஆண்டுகள் மட்டும் ஆகிறது. ஆனால், நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு மிகப் பெரிய அளவில் கவுரவம் கொடுத்துள்ளது. நிறுவனம் எனக்கு தீபாவளி போனசாக கொடுத்த வைர நகை விலை மதிப்பற்றது. அது கம்பெனி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இது இன்னும் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுத்துள்ளது” என்றார்.

Thursday, October 2, 2014

உடலுக்கான கால அட்டவணைஇதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை
நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை 
பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில்  காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை 
வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை 
மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை
 இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை 
சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை 
சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை 
சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை 
பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை 
உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை 
பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை 
கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Wednesday, October 1, 2014

ஜெ. தீர்ப்பு முழு விவரம்!


”கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் அவரும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர். ஆனால் அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கணக்கை வருமான வரித்துறைக்கு அவர்களால் சரியாக காட்ட முடிய வில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவரின் வருமானம் 9.91 கோடி ரூபாய். அதில் அவரின் செலவு 8.49 கோடி ரூபாய். இந்த வருமானத்தை மீறியே அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் தங்கள் பெயரிலும் சில நிறுவனங்கள் பெயரிலும் 53.6 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான திருப்திகரமான கணக்கை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு அதற்கான பணத்தை பெற அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது” என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது.

தீர்ப்பில் அவர்,”கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில், ஜெயலலிதாவின் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சம் என்றும், செலவுத்தொகை ரூ.8 கோடியே 49 லட்சம் என்றும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
இந்த 5 வருடங்களில், ஜெயலலிதா தனது பெயரிலும், மற்ற 3 குற்றவாளிகள் பெயரிலும், தங்கள் நிறுவன பெயர்களிலும் ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த வருமானத்துக்கு ஜெயலலிதாவால் திருப்திகரமாக கணக்கு காட்ட முடியவில்லை.ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும்.குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.அதன்பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம்.

இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்.வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது.அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம்.

இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை.கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை.உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும்.”என்று நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.