Tuesday, August 19, 2014

ரகசியம் காப்போம்


அமெரிக்காவின் கூகுள் இணையதளம் நடத்திய வரைபடப் போட்டியில் பங்குபெற்ற பலரும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து “சர்வே ஆஃப் இந்தியா’ ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரியில் உள்ள “இஸ்ரோ’ மையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை எல்லாம் கூகுல் இணையதள வரைபடத்தில் இப்போது துல்லியமாக காண முடிகிறது. கூகுள் நிறுவனம் 2013-இல் நடத்திய வரைபடப் போட்டியில், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களை குறிப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. உடனே களத்தில் குதித்த நம்மவர்கள் அவரவர் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களை எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு குறிப்பிட்டு விட்டனர். இப்படி நாமே வலையில் சிக்கிக் கொண்டு கொட்டிய தகவல்களை சேகரித்த கூகுள், இப்போது அவற்றை வரைபடத்தில் வெளியிட்டு “ரகசியம்’ என நாம் பாதுகாத்து வைத்ததையெல்லாம் உலகறிய அம்பலப்படுத்தி விட்டது.

இத்தனைக்கும், கூகுள் நிறுவனம் இப்படி ஒரு போட்டியை அறிவித்தபோது அதுகுறித்து “சர்வே ஆஃப் இந்தியா’ புகார் கூறியது. சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது. அப்படி இருந்தும், கூகுள் துணிச்சலாக செயல்பட்டு வருவது அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.வரைபடப் போட்டியில், நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் குறிப்பிட்டவர்கள் அதன் எதிர்கால ஆபத்தை உணர்ந்திருப்பார்களா? இந்த விவரங்களை அமெரிக்காவும், அதன் சி.ஐ.ஏ.வும் மட்டுமின்றி இந்தியாவின் எதிரிநாடுகள் எப்படி பயன்படுத்தும் என்பதை நம்மவர்கள் அறிவார்களா?

அமெரிக்காவுடன் இன்று நமக்கு நல்லுறவு இருக்கலாம். நாளைக்கு உறவு கசந்தால் அப்போது நிலைமை என்னவாகும்? அதைவிடுங்கள், உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு இந்த ரகசியம் “அல்வா’ மாதிரி கையில் கிடைத்துள்ளதே. அதனால் எந்த நேரத்தில் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை அறிவோமா?அணுஉலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் நிலைமை என்னவாகும்? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

அறிவியல் வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ள இந்தக் காலத்தில், அதுவும் அமெரிக்காவிடமிருந்து ரகசியங்களை மறைக்க முடியுமா? அவர்களால் கண்டு பிடிக்க முடியாததையா நாம் குறிப்பிட்டு விட்டோம்?நாம் குறிப்பிடாவிட்டாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாதா? அவர்களிடம் இல்லாத செயற்கைகோள் தொழில்நுட்பமா? என்றெல்லாம் எதிர்கேள்விகளை எழுப்பி நாம் செய்துள்ள தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முடியும். ஆனால், அது ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வாக இருக்காது.

முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் போக்ரானில் நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை, இந்தியா அறிவித்த பிறகுதான் அமெரிக்காவிற்கு தெரிந்தது. அமெரிக்காவிற்கு எல்லாம் தெரியும் என்பதைவிட அவர்களால் தெரிந்து கொள்ள முடியாத, தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள் ஏராளம் உண்டு.நுண்ணறிவுப் பிரிவினர் ரகசியத் தகவல்களை எப்போதும் ஒரே நேரத்தில், ஒரே வழியில் சேகரிக்க மாட்டார்கள். அதற்கென பல வழிகளைக் கையாளுவதுண்டு. அவ்வாறு சேகரித்த தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் துல்லியத்தை சரிபார்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளை கையாளுவர்.

சேகரித்த ரகசியத் தகவல்களை பகுப்பாய்வு செய்து முறைப்படுத்தி அதை பயன்படுத்தும்போது அந்த தகவல்களை தெரிவித்தவரே அதிர்ச்சி அடையும் வகையில் அதன் தாக்கம் இருக்கும். அமெரிக்காவிடமும், தீவிரவாதிகளிடமும் நமது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த விவரங்கள் கையில் இருந்தாலும், அதை அண்டை வீட்டுக்காரர்கள் மூலம் நூறு சதவீதம் இப்போது உறுதிப்படுத்திக் கொண்டார்களே. இனி, நாம் என்ன செய்யப்போகிறோம்?

இதுமட்டுமல்ல, “பேஸ்புக்’கிலும் இன்னபிற சமூக ஊடகங்களிலும் நாம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும், பொதுதகவல்களையும் கொட்டி கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறோம். அவையெல்லாம் யாரால், எங்கு, எப்படி, எப்போது நமக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இனியாவது இதுபோன்று ஆர்வக் கோளாறில் வீட்டு ரகசியத்தை வீதியில் விதைக்காமல் இருப்போம்; ரகசியம் காப்போம்.

No comments:

Post a Comment