Sunday, July 20, 2014

மும்மதத்தினர் முக்கிய கவனத்திற்கு…!

நமது பாரத தேசத்தின் தொன்மையான மதம் இந்து மதம். இன்றைய பாரதத்தில் பெரும்பான்மையினர் மதமும் இந்து மதமே. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பின்பற்றும் மதங்களாக கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்கள் உள்ளன. தவிர இன்னும் பல மதத்தினர் நம் தேசத்தில் ஆனந்தமாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரிப்பதற்கு முன் இருந்த இந்திய ஆன்மிக நிலை வேறு. அவர் அவதரித்த பின் உள்ள இந்திய ஆன்மிக நிலை வேறு. பாரதத்தில் முன்னர் இருந்த மதக் காழ்ப்புகள், வெறுப்புகள் அனைத்தையும் தம் ஆழ்ந்த மெய்ஞ்ஞானத்தால் முற்றிலுமாய்த் துடைக்க முனைந்தார் பரமஹம்சர். ராமகிருஷ்ணர் காலத்தில் ஆன்மிக அன்பர்களுக்கு எது உண்மையான ஆன்மிகம் என்பது பரமஹம்சரால் விளக்கப்பட்டு விட்டது. “எல்லா மதங்களும் கடவுள் என்கிற கடலில் சென்று சேரும் நதிகள் போன்றவையே. எல்லா மத நெறிகளும் அதனதன் அளவில் முக்கியமானவையே. சம அந்தஸ்து உள்ளவையே. எல்லா மத நெறிகளாலும் இறைவனை அடையலாம்’ என்பது ராமகிருஷ்ணரின் சித்தாந்தம். இந்தப் பேருண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப் புரிந்துகொள்ளும் போது ஒரு மதத்தை விட இன்னொன்று உயர்வானதோ தாழ்வானதோ இல்லை என்பது உறுதிப்படும். அப்போது தேவையற்ற மதச் சச்சரவுகள் மறைந்துவிடும். இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து ஏற்பது மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும். இத்தகைய சிந்தனையை பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது நல்லது. இளம் வயதிலேயே மத நல்லிணக்கத்தைச் சிறார் மனத்தில் விதைக்க வேண்டியது அவசியம்.

இந்து, கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் சம அந்தஸ்து உடையவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நடைமுறையில் இந்த மூன்று மதங்களை அனுசரிப்பவர்கள் இடையே ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே ஒரு பலமும் உண்டு. ஒரு பலவீனமும் உண்டு. இந்து மதத்தின் பலம் என்பது எதையும் பரந்த கண்ணோட்டத்தில் ஏற்கும் அதன் விசாலத் தன்மை.

கடவுளை உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று நிலைகளிலும், விரும்புகிறவர் விரும்புகிறபடி ஆராதிக்க வழி தருவது இந்து மதம். இப்படிப்பட்ட பெரிய பலம் அதற்கிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய பலவீனமும் அந்த மதத்தில் இருக்கிறது. அந்த பலவீனம், இன்றும் அதை அனுசரிக்கும் சிலரிடையே தென்படும் தீண்டாமை உணர்வு. மகாத்மா பிறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னாலும் இந்துக்கள் சிலரின் உள்ளத்தில் வேரோடியிருக்கும் தீண்டாமை உணர்வைப் பற்றி என்ன சொல்ல?

தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எடுத்து எறிந்தாலன்றி இந்து மதம் தழைக்காது. எனவே தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை இந்துக்கள் இன்னும் கூடுதலாக வலிமைப்படுத்த வேண்டும்.÷ கிறிஸ்துவ மதத்தின் பலம் என்பது சமூகம் சார்ந்த அதன் சிந்தனை. பல கல்வி நிறுவனங்களையும் பல மருத்துவமனைகளையும் நடத்தி அவற்றின் மூலம் உயர்ந்த சமூகப் பணியாற்றுவது கிறிஸ்துவ மதத்தின் வலிமை.
என்றாலும் இன்றைய காலகட்டத்தில், கிறிஸ்துவ மதத்தினரில் பலரிடையே ஒரு பெரிய பலவீனமும் இருக்கிறது. அந்த பலவீனம், கிறிஸ்துவர்களில் சிலர் மத மாற்ற உணர்வோடு இயங்குகிறார்கள் என்ற யதார்த்த நிலை தான். கிறிஸ்துவர்களின் உயர்ந்த சேவைகள் பலவற்றிற்கும் பின்னால் மத மாற்ற உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் பரவலாகத் தோன்றத் தொடங்கிவிட்டது. இதனால் கிறிஸ்துவ நிறுவனங்கள் செய்துவரும் அபாரமான சமூக சேவை கொச்சைப்படுத்தப் படும் நிலை உருவாகியுள்ளது.
கிறிஸ்துவர்கள் மத மாற்றத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதே நல்லது என்றும் மதமாற்றம் தங்கள் நோக்கம் அல்லவே அல்ல என்றும் கிறிஸ்துவர்கள் அறிவிக்க வேண்டும். எல்லா மதங்களும் சம அந்தஸ்து உடையவை என்னும்போது, ஒரு மதத்தில் பிறந்த ஒருவன் இன்னொரு மதத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ளத் தேவை என்ன?

இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்கள் தங்கள் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் காட்டும் சிரத்தையே அதன் பெரிய பலம். ரயிலில் பயணம் செய்யும்போது கூட அவர்கள் தொழுகை செய்வதை மறப்பதில்லை. இஸ்லாம் மதத்தினர் தங்கள் மத நெறிகளை எவ்வளவு நம்பிக்கையோடு பின்பற்றுகிறார்களோ அந்த அளவு மற்ற மதத்தினர் தங்கள் மத நெறிகளை கவனமாகப் பின்பற்றுவதில்லை என்று கூடச் சொல்லலாம். . (காஞ்சி மடத்தின் அருகேயுள்ள மசூதியில் ஒலிக்கும் பாங்கு ஒலியை நிறுத்தவேண்டாம், நான் ஜபதபம் செய்யும் காலங்களை அது எனக்கு உணர்த்துகிறது என்று
பரமாச்சாரியார் கூறினார்.) என்றாலும் இஸ்லாம் மதத்திலும் இன்றைய கண்ணோட்டத்தில் ஒரு பெரிய பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனம், இன்று அதை அனுசரிப்பவர்கள் சிலரிடையே தென்படும் தீவரவாதப் போக்கும் வன்முறைக் கலாசாரமும்.

தீவிரவாதிகளில் பலர் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. அன்பும் கருணையும் கொண்ட இஸ்லாமியர்களால் தமிழ் இலக்கியம் தொடங்கி எத்தனையோ துறைகள் செழித்துள்ளன. எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் தாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்றும் அகிம்சையே தங்கள் நெறி என்றும் கம்பீரமாக அறிவிக்க வேண்டும். அகிம்சையின் பெருமையைத் தொடர்ந்து அவர்கள் அறைகூவ வேண்டும்.

இந்துக்கள் சிலரிடையே தென்படும் தீண்டாமை, கிறிஸ்துவர்கள் சிலரிடையே தென்படும் மதமாற்றப் போக்கு, இஸ்லாமியர்கள் சிலரிடையே தென்படும் தீவிரவாதம் – இந்த மூன்றில் முதலில் அழிக்கப்பட வேண்டியது எது? தீண்டாமை என்கிற கொடுமை முழுமையாக அழிக்கப்பட்டு விட்டால், கணிசமான அளவு மத மாற்றமும் கூடக் குறைந்துவிடும்.

ஒரே கல்லில் மூன்று மாங்காயை வீழ்த்துவது கடினம். ஆனால் முயற்சி செய்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தி விடலாம். தீண்டாமையை எதிர்த்துக் கல்லெறிந்தால் மதமாற்றப் போக்கும் தானே உதிர்ந்துவிடும் அல்லது குறையத் தொடங்கும். மூன்று மதத்தினரும் தங்களின் பலங்களைப் பற்றிப் பெருமைப்படுவதோடு கூட, பலவீனங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது.

சிந்திப்போம். செயல்படுவோம்.

திருப்பூர் கிருஷ்ணன் ,ஆசிரியர் – “அமுதசுரபி’ மாத இதழ்.

No comments:

Post a Comment