Sunday, July 20, 2014

ஒரு சம்பவம் வரலாறாகிய வெள்ளிவிழா ஆண்டு!

சென்னையில் 11 மாடி கட்ட்டம் இடிந்து விழுந்து 60 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த நாள் ஒரு குடோன் சுவர் சரிந்து 11 பேர் இறந்துள்ளனர். இரண்டும் கவலைக்குரிய சம்பவங்கள். ஆகவே சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகின்றன. சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்கின்றன.சபாநாயகர் அனுமதி தரவில்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சபையில் விவாதிக்க விதிகளில் இடமில்லை என்கிறார். கோஷம் போட்டுக் கொண்டு தேமுதிகவும் திமுகவும் வெளியேறுகின்றன. ஓடுகாலிகள் வெளியே போய்விட்டார்கள் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவிக்கிறார்.

மறுநாள் சபைக்கு வந்த தேமுதிக + திமுக உறுப்பினர்கள், ’அமைச்சர் சொன்ன ஓடுகாலி என்ற வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என கோருகின்றனர். ’அந்த வார்த்தை அப்படியொன்றும் சபையில் பேசக்கூடாத வார்த்தை அல்ல’ என்கிறார் சபாநாயகர். திமுகவினர் கேட்பதாக இல்லை. கோஷம் போடுகின்றனர். சபாநாயகர் ஆணைப்படி அவர்களை காவலர்கள் வெளியேற்றுகின்றனர். தேமுதிகவினர் பின் தொடர்ந்து செல்கிறார்கள்.

வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது துரைமுருகன் கண் கலங்குகிறார்:

‘வெளிநடப்பு செய்வது ஜனநாயக மரபு. அதை பின்பற்றிய எங்களை ஓடுகாலி என்கிறார் அமைச்சர். இது அமைச்சருக்கு அழகல்ல. இந்த சபையின் மரபுக்கு உகந்தது அல்ல. உறுப்பினர்களுக்கு மாண்பு மரியாதை இருக்கிறது. அதை பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. ஆனால், அதை சுட்டிக் காட்டியதற்காக எங்களை வெளியேற்றி விட்டார்’.

துரைமுருகன் நீண்டகால உறுப்பினர். அனுபவம் மிகுந்த முன்னாள் அமைச்சர். அவர் கூறுவது உண்மை. ஓடுகாலி என்ற சொல்லை அமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் முறையிட்டதும் சபாநாயகரும் அதை குறிப்பில் இருந்து நீக்கி இருக்கலாம். இதனால் ஆளும் கட்சிக்கு தோல்வி என்றோ திமுகவுக்கு வெற்றி என்றோ எவரும் கருதப் போவதில்லை.

ஆனால் துரைமுருகன் இந்த சபையின் மரபு பற்றியும் உறுப்பினர்களின் மாண்பு பற்றியும் ஆதங்கத்துடன் பேசும்போது வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் இதே சபையில் நடந்த சம்பவம். வரலாறு காணாத அமளி ஏற்பட்டு கலைந்த தலைமுடி, கிழிந்த முந்தானை, வழியும் கண்ணீருடன் ஒரு பெண்மணி சபைக்கு வெளியே ஓடிவருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம்.

முதலமைச்சர் கருணாநிதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். பதவியில் நீடிப்பதற்கான தார்மிக உரிமையை இழந்துவிட்ட கருணாநிதிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் அருகதை கிடையாது என்று எதிர்க்குரல் எழுப்புகிறார் ஜெயலலிதா. சபையின் எதிர்க்கட்சி தலைவர் அவர். அவருக்கு பின்னால் 26 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். ஆளும் திமுக வரிசையில் 150 பேர் அமர்ந்திருக்கிறார்கள். பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கருணாநிதியை தடுத்து நிறுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முயல்கிறார்கள். கைநீட்டும் தூரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் மூழ்கும்போது, இரு தரப்பிலும் கோஷங்களின் தரம் குறைய தொடங்குகிறது. உறுப்பினர்கள் மேஜையை தாண்டி குதித்து முன்வரிசைக்கு பாய்கின்றனர். கருணாநிதியின் கண்ணாடி விழுந்து உடைகிறது. ஜெயலலிதா இருக்கையில் தள்ளப்படுகிறார். அவரை நோக்கி பாய்ந்தவர்களில் ஒருவர் புடவையை பிடித்து இழுக்கிறார். மோசமான சூழ்நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, பாப்பா சுந்தரம் ஆகியோர் ஜெயலலிதாவை பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு வெளியே அழைத்து செல்கின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் வருகிறது. கருணாநிதியை துரியோதனாகவும், துரைமுருகனை துச்சாதனாகவும் சித்தரித்து திரவுபதி பாணியில் மக்களிடம் ஜெயலலிதா நீதி கேட்கிறார். திமுகவோ ஜெயல்லிதாவை ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம் என்ற முடிவுடன் அவர் பெயரைக்கூட உச்சரிக்காமல் பிரசாரம் செய்கிறது. அதிமுக அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக சட்டசபைக்குள் நுழைகிறார் ஜெயலலிதா.

ஒரு சம்பவம் வரலாறாக மாறுகிறது. இது அந்த திருப்புமுனையின் வெள்ளிவிழா ஆண்டு.


இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அந்த தேர்தலின்போது ராமச்சந்திரனும் திருநாவுக்கரசும் அதிமுகவிலேயே இல்லை. கடும் சோதனையில் உடன் நின்றவர்களை குறுகிய காலத்தில் ஜெயலலிதா ஒதுக்கி வைக்க என்ன காரணம் என்பது சொல்லப்படவில்லை. ஆனால், கட்சியில் ஜெயலலிதாவின் பெயரால் ஆதிக்கம் செலுத்த அவர்கள் திட்டமிட்ட்தாக அன்று பேச்சு உலா வந்தது. அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் வெளியேற்றியதன் மூலம், கட்சியில் அணிகள் உருவாகாமல் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

எதிர்ப்பாளர்கள், அதிகார ஆசை கொண்டவர்களை முளையிலேயே கிள்ளி எறிவது என்ற கொள்கையை இன்றுவரை விடாப்பிடியாக பின்பற்றுகிறார் அவர். கட்சியில் எந்த நிர்வாகியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றுகிறார். எவ்வளவு முக்கிய பொறுப்பு வகிப்பவராக இருந்தாலும் அடிப்படை உறுப்பினர் தகுதியைக்கூட ஒரே அடியில் பறிக்கிறார். அவ்வளவு ஏன்? மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றபோது அவருடன் அமைச்சர்களான 33 பேரில் இதுவரை 27 பேர் பதவியை பறி கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிரடியாக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

பதவி பறிப்புகள் நடக்கும்போது எந்த சலசலப்பும் ஏற்படுவதில்லை என்பது இன்னும் அதிசயம். ’அம்மா கொடுத்தார்; அவரே எடுத்துக் கொண்டார்; இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?’ என்று பதவி இழந்தவர்கள் சோகத்தை மறைக்க முயன்று புன்னகையுடன் பேட்டி கொடுப்பதை வேறு எந்த கட்சியிலாவது எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கருணாநிதி முதல்வராக இருந்தபோது இருள் படிந்த பின்னர் கடற்கரை காந்தி சிலைக்கு பின்னால் மணலில் அமர்ந்து நம்பிக்கைக்குரிய அமைச்சர்களோடு அரட்டையடிக்கும் வேளையில் பலமுறை இது பற்றி சிலாகித்து இருக்கிறாராம். ’கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்ட ஓர் ஒன்றிய செயலாளர் மீது கைவைக்கவே நான் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்தம்மா கண்ணை மூடிக் கொண்டு பந்தாடுவதை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்பாராம்.

காரணம் இல்லாமல் ஜெயலலிதா யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது முக்கிய காரணம். வெளிப்படையாக சொல்வது இல்லையே தவிர, சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தெரியும். தலைமைக்கு நெருக்கமானவர், நம்பர் 2 நம்பர் 3 என்று சொல்லத்தக்க தூரத்தில் எவரையும் அனுமதிப்பதில்லை என்பதால் பாரபட்சம் காட்டுவதாக கட்சிக்காரர்கள் குற்றம் சாட்ட முடியாது. பதவி பறிக்கப்பட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசியாக நடந்து கடுமையாக உழைத்தால் மீண்டும் பொறுப்புகள் தேடிவரும் என்ற நம்பிக்கையையும் தொண்டர்கள் மனதில் ஜெயலலிதா விதைத்துள்ளார். நீக்கப்பட்ட அமைச்சர்கள் சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதவி ஏற்பதை பார்க்கிறோம். அரசு அதிகாரிகள் நிலைமையும் அதுதான்.

முதல் ஆட்சியில் பல தவறுகள் நடந்தன. ரத்த சொந்தங்களுடன் தொடர்பை தவிர்த்த முதல்வர், இடையில் வந்த தோழமையின் ஆதிக்கத்துக்கு எப்படி இடம் கொடுத்தார் என்ற ஆச்சரியம் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டது. தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி மக்களின் நல்லெண்ணத்தையும் இழந்ததால் அடுத்த தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. மோசமான நெருக்கடிகளை முதல் முறையாக எதிர்கொள்ள நேர்ந்தது. அதில் பல பாடங்களை அவர் கற்றுக் கொண்டார் என்பது 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் புலப்பட்டது.

கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் ஜெயலலிதா கொண்டிருக்கும் இரும்புப்பிடி அசாதாரணமானது. சுசேதா கிருபளானி, நந்தினி சத்பதி தொடங்கி இன்றைய மம்தா, மாயாவதி, வசுந்தரா ராஜி வரை இந்த நாடு சந்தித்த எந்த பெண் முதல்வரும் கற்பனை செய்யாத – ஆண் முதல்வர்களும் எட்ட முடியாத – ஆதிக்க நிலை அது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் முணுமுணுப்புகூட இல்லை. பழைய தவறுகளின் விளைவாக அவர் சந்திக்கும் வழக்குகளும் அவர் விரும்பும் முடிவை நோக்கி விரைவதாகவே தோன்றுகிறது.

இந்த சூழலில் தமிழக அரசியலை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டிய பொறுப்பை ஜெயலலிதா ஏற்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு தாராளமாக இடம் கொடுங்கள்; எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். நல்ல விஷயங்கள் தென்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லவை என்றால் மறந்து விடுங்கள். வீணான சிந்தனைகள் தாமாகவே விரைவில் காலாவதி ஆகும். எடுத்து போட்டு புரட்டி அடிக்க தேவையே இல்லை. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது அறிவியல் மேதையின் மூன்றாவது விதி. அரசியலும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பது தமிழகத்தின் தலைவிதி அல்ல.

’லெஸ் லக்கேஜ்; மோர் கம்ஃபர்ட்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பெட்டிகளில் சிறு எழுத்துக்களில் ஒரு வாசகம் எழுதப்பட்டு இருக்கும். சுமைகளை குறைத்துக் கொண்டே போனால் எத்தனை நெடிய பயணமும் சுகமாக அமையும் என்று அர்த்தம். ரயில் பயணத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கை பயணத்துக்கும் அது சாலப் பொருந்தும். பழைய நினைவுகள், பழைய எதிரிகள், பழைய கணக்குகள் என்றும் சுமைதான். அழித்துவிட்டு புது சிலேட்டில் எழுத ஆரம்பிக்க வேண்டும். மக்கள் நம் பக்கம் இருக்கும்வரை யாரை பற்றியும் நாம் கவலைப்பட தேவையில்லை என்ற நம்பிக்கை ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கட்டும்.

(இழு தள்ளு 44/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 20.07.2014)

5 comments:

 1. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete
 2. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி

   Delete
 3. Replies
  1. தங்களின் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி

   Delete