Friday, May 23, 2014

இந்தியாவின் இன்றைய தேவை மகாத்மா காந்தியல்ல, ஒரு இரக்கமுள்ள ஹிட்லர்


புதிய பிரதமருக்கு பத்து கட்டளைகள்
1. அவசியத் தேவை நூறு சதவீத கல்வியறிவு.

சுதந்திரம் பெற்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் இந்த தேசம் கல்வியறிவில் முழுமைப் பெறவில்லை என்பது வெட்ககேடான ஒன்று. இந்த ஐந்து ஆண்டுகளிலாவது நூறு சதவீத கல்வியறிவு பெற முழுமையான செயலாக்கம் தேவை.முளைத்து மூன்று இலை விடாத நிலையில் மொபல்போனை எடுத்து ஆராய்ந்து Angry birdவிளையாடுகின்றன கிராமத்து பொடிசுகள். பச்சைக்குழந்தைகள் கூட தொழில்நுட்ப பழகிவரும் நிலையில்,இன்னும் பழமையான பன்னிரெண்டு ஆண்டு கல்வி முறை கதைக்கு உதவாது.இருக்கும் பழமையான கல்வி முறையை முற்றிலும் மாற்றி புதிய கல்வி வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க உடனடி அவசர சட்டம் தேவை. மூன்று முதல் எட்டு வயது வரை அடிப்படை கல்வி. எட்டுமுதல் பதினைந்துவரை தொழில்நுட்ப அறிவுசார் கல்வி. அதற்கு மேல் ஆராய்ச்சிபடிப்பு. படிப்பறிவு இல்லாத முதியோர்கள் குறுகியகாலத்தில் எழுதபடிக்க தெரிந்துகொள்ளும் அளவிற்காவது போர்கால அடிப்படையில் ஒரு செயலாக்கம் தேவை.இந்த ஐந்து ஆண்டு ஆட்சி முடியும் போது உலகில் இந்தியா முழுமையான கல்வியறிவு பெற்ற தேசமாக மாறி இருக்கவேண்டும்.முழுமையான கல்வி அறிவு பெறாத தேசம் வேறு எதில் தன்னிறைவு அடைந்தாலும் அதில் பலனில்லை.

2. அனைவருக்கும் முழுமையான சுகாதர வசதி

ஒவ்வொருவருக்கும் அடிப்படை சுகாதார வசதி உறுதிசெய்யப்படவேண்டும். அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் முழுமையான மருத்துவ வசதி இன்னும் அடிப்படை கிராமத்து மக்களுக்கு கிடைக்கவில்லை. மருத்துவர் பற்றாக்குறை, மருத்துவமனைகளின் தரமற்ற செயல்பாடுகள் தான் இதற்கு காரணமாக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளோடு தனியார் மருத்துவமனைகளையும் சுகாதார செயல்பாட்டில் ஒன்றிணைக்க தீவிர சட்டம் இயற்றவேண்டும்.மருத்துவமனைகள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதர்களிடமும் விழிப்புணர்வை பெருக்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்,வாய்ப்புகளை பெருக்கி அவர்கள் படிப்பு முடிந்து குறைந்தது பத்தாண்டுகளாவது இந்தியாவில் பணிபுரிந்தால்தான் முழுமையான தகுதி சான்று என்று மாற்றியமைக்கப்படவேண்டும்.நவீன மருத்துவம் மட்டுமின்றி பாரம்பரிய இந்திய மருத்துவத்தை ஊக்குவித்து வரும் முன் காக்கும் யுக்திகளை முன்னிறுத்தவேண்டும்.அரசு செலவில் படித்துவிட்டு ஹாயாக வெளிநாடு பறக்கும் மருத்துவசிகாமணிகளை சுளுக்கெடுக்கவேண்டும்.

3. சுகாதாரமான குடிநீர் வசதி.

இந்தியாவின் மிகப்பெரிய சவால் இனி வரும் காலங்களில் சுகாதாரமான குடிநீர்தான்.தண்ணீர் பஞ்சம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இதே நிலையில் தான் பெப்சிகோவும்,கின்லேயும் மண்ணை உறிஞ்சி பொன்னாக்கி அமெரிக்காவிற்கு டாலர்களாக மாற்றி அனுப்பிகொண்டிருக்கின்றன. உள்ளூர்காரனுக்கு தண்ணீர் பஞ்சமென்றால், வெளிநாட்டு தண்ணீர் கம்பெனிகளும், தனியார் தண்ணீர் நிறுவனங்களும் எப்படி நீரை உற்பத்தி செய்கின்றன. நீர்வளம் என்பது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சொத்தாக மாற்றப்படவேண்டும். தண்ணீரில் பணம் கொழிக்கும் நிறுவனங்களுக்கு சங்கு ஊதிவிட்டு,இந்தியா முழுவதும் நீரை பொதுவாக்கவேண்டும். முறையான வினியோக முறையை திட்டமிடல் வேண்டும்.

4. நதிகளை இணைத்தல் தேசம் முழுவதும் நீர் பகிர்மானத்தை பொதுவாக்கல்
தண்ணீர் தான் இனி உலகின் சவால். உள்நாட்டுப் நீர் நிர்வாகத்திற்கு நாடு தழுவிய ஒரே நடைமுறை தேவை. தேசம் முழுவதும் வாய்ப்புள்ள நதிகளை ஒன்றிணைத்தல், மிகுபடும் நீரை சேமிக்க முறையான வாய்ப்புகளை உருவாக்குதல். உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை அதிகரித்தல் என உள்நாட்டு நீர் சார்ந்த வலுவான நிர்வாகம் தேவை.இதன்மூலம் உணவு உற்பத்தி, மின் உற்பத்தி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வலுவாகும்

5. வேளாண்மைத்துறைக்கு வலு சேர்க்கவேண்டும்.

இந்தியா ஒரு விவசாயம் சார்ந்த மண். என்ன தான் நவீன தொழில்நுட்பங்களை பற்றி மெச்சிக்கொண்டாலும் இண்டர்நெட்டில் நெல் விளையாது.விளைநிலங்களை பாதுகாக்க வலுவான சட்டம் தேவை. வேளாண் திட்டங்கள் என்பது ஒரு சடங்காக அமையாமல்,உணவு சார்ந்த பொருட்களை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் தேவை.விளைநிலம் பாதுகாப்பு, நீர்வளங்களை பாதுகாத்தல்,வேளாண்மைத்துறையில்இளைஞர்களை வரவேற்கும் வகையில் உறுதியான திட்டங்கள் தேவை.விவசாயம் உற்பத்தி சிறு தொழிற்கூடங்கள் கிராமம் தோறும் அதிகரிக்கப்படவேண்டும்.இறக்குமதியில் இப்போது பெருமளவு உணவுப்பொருளாக மாறிவருவது இந்தியாவிற்கு அழகல்ல. வேளாண்மைத்துறைக்கு வலுசேர்ப்பதின் மூலம் இறக்குமதியை படிபடியாக குறைக்க முடியும்.

6. இலவசங்களை ஒழித்தல்

இந்தியாவின் சாபக்கேடு இந்த இலவச திட்டங்கள்தான். ஓட்டு பொறுக்கிகளின் உள்நோக்கு திட்டமாகதான் இலவசங்கள் திகழ்கின்றன. ஒரு இலவசத்தை கொடுத்து மக்களை திசைத்திருப்பிஇன்னொன்றில் விலையேற்றி வதைக்கும் விளையாட்டு இனி வேண்டாம். இலவசங்களை முற்றிலும் ஒழித்து விலைவாசியை கட்டுப்படுத்தினால் போதும். மக்கள் உழைக்க தயாராகவே உள்ளனர்.

7. கட்டாய ராணுவப் பயிற்சி

முப்பது கோடி முகமுடையால் என்ற நிலையில் இருந்து நூற்றி இருபது கோடி முகமுடையாளாக மாறியிருக்கிறாள் பாரத தாய்.மக்கள் தொகை என்பது சுமையல்ல அது பலம் அத்தனை மனிதவளமும் ஆக்கபூர்வமாக மாறும் போது. இந்த இளைஞர் சக்தி துரதிஷ்டமாக இனம், மொழி என பிரிந்து கிடக்கிறது. இவற்றை ஒருங்கிணைத்து வலுவூட்ட ஒரு கடுமையான செயல்திட்டம் தேவை. அதற்கு கட்டாய ராணுவப்பயிற்சி மட்டுமே வழியாக இருக்கும். பதினாறு வயது முதல் இருபத்தி ஐந்துவரை ஒருவர் ராணுவத்தில் பணியாற்றும் போது தேசப்பற்று, செயல்திறன், உறுதிப்பாடு வலுப்பெறும்.அடுத்து பல்வேறு மாநிலத்தினர் இளமையிலேயே ஒரே குழுவாக ஒரிடத்தில் பணிபுரியும் போது இனம்,மொழி சார்ந்த எண்ணங்கள் பின்னோக்கி தள்ளபட்டு ஒரே எண்ணம் உருவாகும்.இந்த குறைந்தபட்ச பணிகாலத்தில் இவர்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் இயங்கும்போது தேசம் பற்றிய வலுவான ஒரு பற்று உருவாகும்.இந்த காலக்கட்டத்தில் அவரவர் விரும்பும் கல்வியையும் பயிற்சியையும் பெற உறதிப்பாடுகள் செய்யப்படவேண்டும்.

8. கிராமங்கள் சார்ந்த தொழிற்கட்டமைப்பை அதிகப்படுத்துவது

அயல்நாட்டு முதலீடுகளை கிராமங்களை நோக்கி திருப்பவதின் மூலம் கிராமத்தின் உட்கட்டமைப்புகளை உருவாக்கமுடியும். முன்னேறிய நகரங்களில் நோக்கியே முன்னனி நிறுவனங்கள் அணிவகுப்பதை நெறிப்படுத்தி கிராமப்பகுதிகளை நோக்கி அவர்களின் பார்வையைதிருப்ப வேண்டும். ஒரே இடத்தில் இவை அனைத்தும் குவியாமல் பரவலாக பின் தங்கிய பகுதிகளில் அமைக்கபடுவதின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பு,தேசம் முழுவதும் சீரான வளர்ச்சிக்கு உறுதி செய்யமுடியும்.கிராமப்புறங்களில் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களை அமைப்பதின் மூலம், வேலைவாய்ப்பு, சுய உற்பத்தியில் தன்னிறைவு சுலபமாக அடையலாம். தொடந்து இறக்குமதியை படிபடியாக குறைத்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பெருக்கலாம்.

9. சிறுவர்களுக்கு மட்டுமே விளையாட்டு
விளையாட்டு என்பது உள்ளம், உடல் வலிமைக்கு உரிய பயிற்சி என்ற நிலை மாறி இப்போது கேளிக்கையாகவும், பொழுதுபோக்காகவும் மாறிவருகிறது. இளைஞர்களை பலவீனப்படுத்தி அவர்களை கேளிக்கை பார்வையாளராக,சூதாடிகளாகவும் மாற்றி வருகின்றன இன்றைய விளையாட்டு கொள்கைகள். அதிகபட்சம் பதினான்கு வயதுள்ளவர்களுக்கு மட்டுமே விளையாட்டு என்ற நிலையை உருவாக்கவேண்டும்.

10. பொதுவான தெய்வ நீதி நெறி வகுத்தல்.

உலகின் இன்றைய சண்டைகளுக்கு எல்லாம் காரணம் கடவுள் சார்ந்த கொள்கைதான். ஏன் இந்தியாவிற்கும் இதுதான் பெரிய தலைவலி. இயற்கைதான் இறைவன் என்பதை உலகிற்கு முதன்முதலில் சொன்ன மண் நமது தேசம். இந்திய வாழ்வியல் முறை, புத்தம், இசுலாம், கிறித்துவம், சீக்கியம் என்று எதுவாக இருந்தாலும் எல்லாம் சொல்வது இறைவன் ஒன்றே என்பதுதான். அந்த ஒன்று என்ன என்பதை குறித்த மெய்யறிவை தெளிபடுத்தவேண்டும்.உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர்.இறைத்தன்மை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் உண்மை.இதனை சார்ந்தே எண்ணற்ற சித்தர்களும், இறைத்தூதர்களும் சொல்லிவந்தனர்.அந்த இறைவன் இயற்கை என்பதை நெற்றியில் அடித்தது போல் பட்டென்று உரக்க பதிவு செய்யவேண்டும். உலகம் முழுவதும் ஒரே தெய்வநீதியை வகுப்பதின் மூலம் மட்டுமே உலகின் எல்லா வன்முறைகளுக்கு முடிவுகொண்டுவர முடியும் என்பதை வலியுறுத்தினார் அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி. அதற்கு முதல் முன்னெடுப்பாக 2000 ஆம் ஆண்டில் உலக அளவிலான பல்வேறு மத தலைவர்களின் முன்னிலையில் ஒரு கருத்தரங்கையும் நடத்தினார். வேதாத்ரி மகரிஷியின் மறைவுக்கு பின்னர் அந்த முன்மொழிவு காற்றில் கரைந்த பெருங்காயமாக மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் மனிதவளத்தின் ஒற்றுமைக்காவும், உலகின் நலனுக்காகவும் இதுகுறித்த கருத்துரைகளை முன்வைத்து ஒரு தீர்வை உருவாக்கவேண்டும்.

ஜனநாயகப்பாதை என்ற போர்வையில் அறுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த காலகட்டத்தில் நல்ல மாற்றங்களும் நடந்துள்ளன, மிகப்பெரிய பின்னடைவுகளும் இந்தியா சந்தித்துள்ளது.இந்தியா உலகின் வலுவான தேசமாக மாறவேண்டும் எனில் இனி கொஞ்சம் கடுமையான நடைமுறை அவசியம். அதற்கு இந்தியாவின் இன்றைய தேவை மகாத்மா காந்தியல்ல, ஒரு இரக்கமுள்ள ஹிட்லர்.

No comments:

Post a Comment