Friday, May 23, 2014

எழும்பூர் அருங்காட்சியகம் - பிரமிப்பூட்டும் அரிய பொக்கிஷம்


ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் கலை, நாகரிகம், பண்பாடு முக்கிய பங்காற்றுகிறது. தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கலை, நாகரிகம், பண்பாட்டை நம் கண் முன்னே நிறுத்துவதில் வரலாறு முக்கிய பங்காற்றுகிறது. அத்தகைய பெருமை கொண்ட வரலாறு நீண்ட நெடிய ஆண்டுகளாக மக்கள் மனதில் நிலைத்திருப்பதற்கு அருங்காட்சியகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. எழில்மிகு சென்னையின் பல பொக்கிஷங்களை சுமந்தபடி எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக, எழும்பூரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தை பற்றித்தான் இன்றைய சுற்றுலா பகுதியில் காண போகிறோம்...

எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் 1851ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 16.25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்டை பெற்றுக்கொண்டு வளாகத்திற்குள் நுழைந்தவுடன் தலைமை கட்டிடம், முன் கட்டிடம், படிம கூடம், சிறுவர் அருங்காட்சியகம், தேசிய ஓவியக் காட்சிக்கூடம், வளர்கலை கூடம் என ஆறு கட்டிடங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
வழியெங்கும் உள்ள மரங்கள் தலைமை கட்டிடத்திற்குள் நாம் செல்வதற்கு தலையசைத்து வரவேற்பளிக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன், சோழன், பல்லவன் காலங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர், நந்தியுடன் காட்சியளிக்கும் சிவன், உயிரின் தோற்றத்தை விளக்கும் சிற்பங்கள் என பல சிற்பங்கள் கீழ்தளத்தை அழகுபடுத்துகின்றன.

இதை பார்த்த பிரமிப்புடன் படிக்கட்டுகள் ஏறி மேல் தளத்திற்கு செல்லும் நமக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருக்கிறது. அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள், பவளப்பாறைகள் என மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எழுத்துகளுக்கு வேராக விளங்கும் பிராமி எழுத்துகள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகள் வடிவம் பெற்ற விதங்கள் விளக்கியுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நம்மையே மறந்து இவற்றை தொட போகும்போது தொட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழிகாட்டும் பலகை விலங்கியல் பகுதிக்கு கொண்டு சென்று விடுகிறது. மனித குரங்கின் எலும்பு கூடு சிரித்தபடி வரவேற்கிறது. இதை பார்த்த திகிலுடன் நாம் நகர்ந்து செல்கிறோம். அப்போது நம்முடைய தலைக்கு மேல் சுமார் 20 அடி அளவு கொண்ட ராட்சத திமிங்கல எலும்புக்கூடு தொங்க விடப்பட்டுள்ளது.

அடுத்து அதிர்ச்சியாக ஆக்ரோஷமான டைனோசர் சத்தம் கேட்கிறது. சற்று நகர்ந்து பார்க்கும்போது சுமார் 10 அடி உயரத்தில் கோபமான கண்களுடன் டைனோசர் ஒன்று திமிறி கொண்டிருக்கிறது. அச்சத்தில் ஓட எத்தனிக்கும் நம்மை சமாதானப்படுத்தும் பணியாளர்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பொம்மை என்று விளக்கம் அளிக்கின்றனர். அங்கிருந்து திகில் அனுபவத்துடன் வெளியேறும் நாம் முன் கட்டிடத்திற்கு மெதுவாக நகர்ந்து செல்கின்றோம். அங்கு வரலாற்றுக்கு முந்தைய காலம், நிகழ்காலத்தில் இருக்கும் நம்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்துள்ளதை போன்று தோன்ற வைக்கிறது. மானிடவியல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள படை கலங்கள் தமிழர்களின் வீரத்தை பறை சாற்றுகிறது. இக்கட்டிடத்தில் வீரத்தை மட்டும் உணரும்படி இல்லாமல் கலைகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் பழங்கால இசை கருவிகள், நாட்டார் கலைகளுக்கான காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நம் முன்னோர்களின் வீரத்தை பற்றி உணர்ந்த நாமும் அங்கிருந்து வீரமாக நடைபோடுகிறோம். நூற்றாண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சியளிக்கும் அருங்காட்சியக கட்டிடத்தின் உள் கட்டமைப்புகள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது. இப்போது நாம் அங்கிருந்து அடைந்துள்ளது படிம கூடம். இக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வெண்கல சிற்பங்கள் நம்முடைய சிற்பிகளின் திறமைகளை மெய் மறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வேதி காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, புத்த, பவுத்த, சமண மதங்களை ஓரளவுக்கு அறிந்து கொள்ள பேருதவியாக உள்ளது. கி.பி 9ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான சிலைகள் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும் காணலாம்.

அவற்றில் குதிரை, யானை, எருது என பொறிக்கப்பட்ட உருவங்கள் வரலாற்றின் பின்னணியை நாமும் சற்று ஆராய்ந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது.
இப்படி சிந்தித்து கொண்டே நடந்து சென்று நாம் நிற்கும் இடம் சிறுவர் அருங்காட்சியகம். இங்கு சிறுவர்களை மகிழ்விக்க பல்வேறு ஆடைகளுடன் கூடிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து அவர்கள் குதூகலத்தில் குதிக்கின்றனர். இப்படிப்பட்ட சிறுவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தின் சிறப்புகளையும் இந்த பகுதிகளில் சொல்ல மறக்கவில்லை. குறிப்பாக, 22 அறிவியல் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் ரசித்த பிறகு அடுத்து பல வகையான வண்ணங்களுடன் மகிழ்ச்சியாக வரவேற்கும் கட்டிடம் தேசிய ஓவிய காட்சி கூட கட்டிடம்.

இக்கட்டிடத்திக்குள் நுழையும் போதே மெய் சிலிர்க்கிறது. இந்திய சிற்றோவியங்கள், பிற இந்திய மரபு ஓவியங்கள் என சிந்திக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழகத்தை சேர்ந்த ஓவியங்கள் இல்லையே என்று நாம் ஏங்கி பார்க்கும் நேரத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் கண்களை சொக்கவைக்கிறது. இந்திய ஓவியர்களின் திறமைகளை பற்றி நாம் விவாதித்து கொண்டு கடைசியாக வந்து சேரும் கட்டிடம்தான் வளர் கலை கூடம். பழங்கால ஓவிய கலையை பற்றி அறிந்த நமக்கு தற்போதைய ஓவிய கலையை சுவைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த கட்டிடம். பிரிந்தானிய ஓவியங்களும், தற்காலிக ஓவியங்களுக்கான காட்சி கூடங்கள் என்று வரலாற்று பாதையிலிருந்து நிகழ்காலத்தில் கொண்டு வந்து விடுகிறது இந்த கூடம்.

வேறொரு உலகத்தில் பயணித்த அனுபவத்துடன் வெளியில் வரும் நமக்கு ஆவின் பால் நிலையம் வரவேற்பளிக்கிறது. ரூ.10க்கு ஐஸ் கிரீம், பாதம் பால் என பல வகைகள் கிடைக்கிறது. அதை மகிழ்ச்சியாக உண்ணும் நாம் வரலாற்றுக்கு வணக்கம் செலுத்திவிட்டு விடைபெற்று கொள்கிறோம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. வெள்ளிதோறும் விடுமுறை என்பதால் அன்றைய தினத்தை தவிர்த்து எஞ்சியுள்ள தினங்களில் இங்கு குடும்பத்துடன் வருபவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி காத்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 கட்டணம் என்றாலும், நிழற்படம் எடுக்க ரூ.200, வீடியோ படம் எடுக்க ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

வடபழனிலிருந்து எழும்பூர் வர 17டி, கோயம்பேட்டியிலிருந்து எழும்பூர் வர 27பி, திருமங்கலத்திலிருந்து எழும்பூர் வர 40ஏ, பெசன்ட் நகரிலிருந்து எழும்பூர் வர 23சி என பஸ் வசதி தாராளமாக உள்ளது. எனவே, கோடை கொண்டாட்டத்தை தொடங்க இப்பவே குழந்தைகளுடன் தயாராகுங்க...

2 comments:

  1. பார்க்க வேண்டிய இடம். இன்னும் சிறப்பாக பராமரிக்கப் படவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க - டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களே

      Delete