Tuesday, April 15, 2014

செட்டிநாட்டு ஆச்சி, அப்பச்சி


திரை கலைஞர் மனோரமா அவர்களை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. எனக்கு ரெம்பவே பிடிக்கும் . அவர் அளவுக்கு எங்க ஊர் செட்டிநாட்டு பேச்சுவழக்கை திரையில் பேசி நான் பார்த்ததில்லை. நான் மதுரையில் பாட்டி பிறந்து வளர்ந்தாலும், இடையில் என் தந்தையின் மண்ணான செட்டிநாட்டிலும் ஐந்து வருஷம் வாழ்ந்திருக்கிறேன். என் வாழ்வின் பொற்காலம் அது. செட்டிநாட்டு ஆச்சிகளின் சேலைகட்டும், கூந்தல் கட்டும் ரெம்ப வித்தியாசமாக இருக்கும். சிறுவர்களை கொஞ்சும் போதும் ஒரு வாஞ்சையுடன் தாடையை பிடித்து கொஞ்சுவார்கள். மரியாதை கலந்த மொழியில் அவர்கள் பேசுவதை வாய் பிளந்து கேட்டுகொண்டிருக்கலாம். நக்கலுக்கும் நையாண்டிக்கும் குறைச்சலே இருக்காது என்றாலும் அதுவும் மரியாதையான மொழியில் தான் இருக்கும்.

“அப்பு சிறுவயலுக்கு போற பஸ்ஸு வந்தா சொல்றீகளா” என்று கேட்கும்போது உள்ள வாஞ்சையில் மனசு நிறைஞ்சு போகும். இங்கே செட்டிய வீட்டு ஆச்சிகளை குறிப்பிட்டு சொல்லவில்லை. அந்த மண்ணில் உள்ள அத்தனை ஆச்சிகளையும் சொல்கிறேன் சாதி வித்தியாசமில்லாமல். காரைக்குடியில் உள்ள என் முஸ்லிம் நண்பரின் வீட்டிற்கும் சென்ற போதும் அவரின் தாயார் வரவேற்ற விதமும், பேசிய விதமும் மற்ற ஆச்சிகளை போலவே இருந்தது.

அப்பச்சிகளை பற்றி சொல்லாமல் இருப்பேனா. தும்பை பூ நிற வெள்ளை வேஷ்டி, காட்டன் சட்டை, முகத்தில் தேங்கிநிற்கும் சிரிப்பு, பேசினால் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் நையாண்டி. அரும்பு மீசை முளச்சுவரும் சிறுசுக கூட வெள்ளை வேஷ்டில தான் சுத்துங்க. அந்த பக்கட்டு கைலியவிட விட வேஷ்டி தான் வியாபாரம் அதிகம் இருக்கும்.

கிராமம் தான் என்றாலும் பெரும் வீடுகள், ஊருக்கு ஒரு பெரிய கோவில் தெப்பகுளத்துடன், மதுரை மீனாட்சி இங்கே ஊரு ஒரு நாச்சியாராக அருள்பாலிக்கும். மாணிக்கம், மரகதம், பவளம், முத்து, வைரம், தங்கம் என்று நவமணிகளில் ஒன்றில் தான் பெரும்பாலான பிள்ளைகளின் பெயர் இருக்கும். ஆயிரம் வருஷம் முன்பு கடல் கடந்து வியாபாரம் செய்த காவேரி பூம்பட்டினத்து மக்களின் வழக்கங்களில் ஒன்று. வீதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விதி எழுதிய ஊர்கள் அவை.

இன்று தமிழ் படங்கள் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி படங்களின் படப்பிடிப்பு கூட இப்பகுதியில் மிகுதியாக பார்க்க முடிவதற்கு காரணம் இத்தகைய வீதிகளும், மாட வீடுகளும் தான். இவ்ளோ சொன்னவன் உலகப்பிரசித்தி பெற்ற செட்டிநாட்டு சாப்பாட்டை பற்றி ஏன் சொல்லவில்லை. அதை சொல்ல ஒரு தனி பதிவு வேண்டும்.

1 comment:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete