Saturday, April 12, 2014

மோசடியில் இது புதுசு

ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.120 வீதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். பொதுமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் வகை யில் ஆதார் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்ட பதிவுகள், போட்டோ போன்றவை இடம் பெற்றிக்கும். ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை பெயரை கூறி சென்னையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

சவுகார்பேட்டை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 2 லேப்டாப், 2 வெப் கேமரா, விரல்ரேகை பதிவு செய்யும் இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றோடு டிப்டாப் ஆசாமிகள் சிலர் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள், தாங்கள் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையிலிருந்து வருவதாக கூறி, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து அடையாள அட்டை அனுப்புவதற்கான கட்டணம் என்று கூறி தலா ரூ.120 வீதம் வசூலித்துள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு கார்டு அனுப்பப் படும் என்று கூறியுள்ளனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்காக ரசீதும் கொடுத்துள்ளனர்.

மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது. இந்நிலையில் தங்களுக்கு அடையாள அட்டை வந்து சேராததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் விசாரித்தபோது,

சவுகார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று புகைப்படம் எடுக்க தாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தல் பணிகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள தவறு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

போலி அட்டைகள் 20,000 ரத்து

ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கு மத்திய அரசு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாடெங்கிலும் 3.84 லட்சம் போலி உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இணைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது தெரியவந்து, அந்த உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment