Wednesday, March 12, 2014

Coco-Cola நதி மூலம் தெரியுமா?

நெடுநாள் நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது வழக்கமான ‘வணக்கம்’ மற்றும் நல விசாரிப்புக்கு பிறகு உபசாரம் என்று வரும் போது, உலகம் முழுவதும் ஒரே சம்பிரதாயம் தான் கடைபிடிக்கப்படுகிறது.‘என்ன சாப்பிடுறீங்க… டீயா?, காபியா?, ‘கோக்கா’? என்ற சம்பிரதாய வார்த்தை இல்லாமல் எந்த சந்திப்பும் முழுமை பெறுவதில்லை. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அன்றாடம் 1 லிட்டர் ‘கோக்’ ஆவது குடிக்காவிட்டால் மண்டை வெடித்து விடுவது போல் ஆகிவிடும்.‘கோக்’ என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்துக்கு கட்டுண்டு கிடக்கும் கோடானுகோடி மக்களில் பலருக்கு உலக பிரசித்தி பெற்ற ‘கொக்கோ கோலா’வின் நதி மூலம் (வாழ்க்கை வரலாறு) பற்றி அதன் முதல் அறிமுக நாளான -மார்ச 12 -க்கான மீள் பதிவிது. 1886ம் ஆண்டு இதே நாளன்றுதான், ஜோண் பெம்பர்ரன் என்பவர் அமெரிக்க கலாச்சாரத்தில், இந்தப் புதிய குளிர் பானத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இன்றைய நிலையில், கொக்கோ கோலா 200க்கு மேற்பட்ட உலக நாடுகளில் விற்பனையாகி வருவதோடு, உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் என்ற பட்டியலில் ஒன்றாகவும் விளங்கிவருகின்றது.

இந்தக் கோலா தயாரிக்கும் முறை, பரம்பரை பரம்பரையாக கை மாறி, நிறுவனத்தின் சேமிப்பகம் ஒன்றில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.இதை அறிமுகம் செய்த பெம்பர்ரன் , தனது புதிய அறிமுகத்தால், பாத்திரங்கள் கழுவும் தொழிலில் இருந்து விடுபட்டு, பெரிய கோடீஸ்வரர் ஆகியதாகச் சொல்லப்படுகின்றது.
இது அறிமுகமாகிய முதல் வருடம், நாளுக்கு 9 கிளாஸ் என்ற அளவிலேயே, கொக்கோ கொலாவை இவரால் விற்க முடிந்திருக்கின்றது. 1888 இல்தான் கதை மாற ஆரம்பித்தது. Asa Chandler என்பவர் இதன் விற்பனை உரிமையை விலைகொடுத்து வாங்கி, மருந்து என்றிருந்த இந்தப் பானத்தை புத்துணர்ச்சி ஊட்டும் மென்பானமாக்கும் முயற்சியில் இறங்கினார்.சில வருடங்களில் வெற்றியும் கிடைத்தது.

அமெரிக்கா முழுவதும் பலருக்குப் பிடித்தமான மென்பானமாக கொக்கோ கோலா மாறியது. 1919 இல்தான் ஐரோப்பாவிலும், அட்லாண்டிக் நாடுகளிலும் கொக்கோ கோலா அறிமுகமாகியது. 1919இல் முதல் பிரவேசித்த இடம் பிரான்ஸ் .1929இல் இது ஜேர்மனியில் அறிமுகமாகியது.இதில் இனிப்பு அதிகமாக இருக்கின்றது. குழந்தைகளைப் பருக்க வைக்கின்றது என்று சொல்லப்பட்டாலும், மென்பானங்களைப் பொறுத்த மட்டில், குழந்தைகளின் டார்லிங்காகவே இது இருந்து வருகின்றது.

தற்போது அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளதாம்.இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கொக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.

1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கொக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கொக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 128 ஆண்டுகளாக கொக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான்.ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று தெரிய வந்ததுடன் கடந்த சில ஆண்டு முதல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கொக்கோ கோலா பிரியர்கள் அந்த பாதுகாப்பு பெட்டகத்தை காணும் போதே களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர் என்றும் சொல்கிறார்கள் .



ந்நிலையில் 1977-ம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்த மத்திய அரசு, ‘வெளிநாட்டு நிறுவனமான கொக்கோ கோலா, அதன் தயாரிப்பு ரகசியத்தை ஒப்படைத்து விட்டு, (அப்போது கடுமையாக அமல்படுத்தப்பட்ட) அன்னிய செலாவனி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால், தயாரிப்பு ரகசியத்தை ஒப்படைக்க மறுத்த கொக்கோ கோலா நிறுவனம் இந்தியாவில் இருந்த தொழிற்சாலைகளை வேறொரு குளிர்பான தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்றுவிட்டு நாட்டை விட்டு வெளியேறியது.

அதன் பின்னர், மத்தியில் ஆட்சி மாறிய போது காட்சியும் மாறியது. இதனையடுத்து, பொருளாதார தாராள மயம் என்ற கொள்கையுடன் இந்திய தொழில் துறையில் உச்சவரம்பு ஏதுமின்றி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது.இதனையடுத்து, கடந்த 1993-ம் ஆண்டு இந்திய குளிர்பான தயாரிப்பு துறையில் மீண்டும் காலடி பதித்த கோக்கோ கோலா சுமார் 20 ஆண்டுகளாக விற்பனையில் ‘சக்கைப்போடு’ போட்டு இந்திய குளிர்பான சந்தையில் தனி இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment