Sunday, March 30, 2014

கலிகாலமடா சாமீ!

“எங்க காலத்துல குழவியத்தான் சுத்துவோம். இப்ப என்னடான்னா உரலும் சேர்ந்து சுத்தறதே….! உரல் ஒரு பக்கம்; குழவி ஒரு பக்கம் சுத்தற கூத்த இப்பத்தான் பாக்கறேன். கலி காலங்கறது சரியாத்தான் இருக்குடீம்மா!”

தானியங்கி அரவை இயந்திரம் வந்தவுடன் ஒரு பாட்டி இப்படி சொல்லி மோவாக்கட்டையில இடிச்சுடுண்டு போனாளாம்.

ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.

துணி துவைக்கற இயந்திரம் முதன்முதலில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது வாராவாரம் இந்த இயந்திரம் தயாரிக்கிற நிறுவனத்திலிருந்து ஒருவர் வந்து இயந்திரத்தின் வேலை திருப்திகரமாக இருக்கிறதா, துணிகளை நன்றாக அலசுகிறதா? நன்றாக பிழிகிறதா? இன்னும் என்னவெல்லாம் அந்த இயந்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுப்பார். பாவம், அவர் தொழில் கேள்வி கேட்பது.

ஒருமுறை என் கணவர் பதில் சொன்னார்: ‘துணி துவைத்து, உலர்த்தி, இஸ்திரியும் பண்ணி வெளியே வந்தால் நன்றாக இருக்கும். அதுவும் ‘அப்பா துணிகளை (என் கணவரின்) முதலில் வெளியே தள்ளு’ என்று ப்ரோக்ராம் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்கும்’

என் அம்மா சொல்வாள்: ‘உங்காத்துக்கு துணி மடிக்கற மெஷின் தான் வேணும்ன்னு.’ எங்க வீட்டுக்கு வந்தால் அம்மாவோட வேலை துணி மடிக்கறது! அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்கு!

சரி இப்போ எதுக்கு பழங்கதை என்கிறீர்களா? சொல்லுகிறேன் என் சோகக்கதையை.

இப்ப வந்திருக்கிற தானியங்கி இயந்திரங்களில் என்னை ரொம்பவும் பயமுறுத்துவது நகரும் படிக்கட்டுகள் அதாங்க, எஸ்கலேட்டர்!

அதென்னமோ அதைப் பார்த்தாலே நானும் (அது மேல ஏறாமலேயே) நகருவது போல பிரமை! முதலில் தட்டையாக வெளி (எங்கிருந்து?) வந்து பிறகு மடிந்து மடிந்து மேலே போவது பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும்.

எத்தனை மாடிகள், எத்தனை படிக்கட்டுகள் இருந்தாலும் பரவாயில்லை ஏறிடுவேன். இந்த நகரும் படிக்கட்டுல ஏற ரொம்ப பயம். அதனாலேயே பிள்ளையோ, பெண்ணோ ‘மால்’ போலாமான்னா வேண்டாம்ன்னு சொல்லிடறேன். கட்டாயம் போகவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டால் படிக்கட்டுகளைத் தேடிப் பிடித்து ஏறுவேன்! சின்னஞ்சிறுசுகள் எஸ்கலேட்டர்ல போகும் போது, ‘நான் எத்தனை ‘fit’ பாருங்கள், படி ஏறுகிறேன்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு படி ஏறுவேன். வேறு என்ன செய்ய?

இன்னொன்றும் சொல்லவேண்டும். எனக்கும் மாடிப் படிகளுக்கும் அப்படி ஒரு ராசி. நான் எங்கு போனாலும் எங்கள் வீடு மாடியில்தான். இப்போது இருக்கும் வீட்டுக்கு வருமுன் நாங்கள் இருந்த வீடு இரண்டாவது மாடியில். நான் ஆங்கில வகுப்புகள் எடுத்தது 3 மாடியில். சில மையங்களில் 2வது மாடியில் வகுப்புகள் இருக்கும்.

யார் வீட்டுக்காவது போனேன் என்றால் அவர்கள் மாடியில் இருப்பார்கள். ‘நாங்க கீழ தான் இருந்தோம். இப்போதான் மாடிக்கு குடி பெயர்ந்தோம்’ என்பார்கள், என்னைப் பார்த்தவுடன்!

ஆறு மாதங்களாக யோகா வகுப்புகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் – 3 வது மாடியில். தினமும் நான் ஏறி இறங்குவது மொத்தம் 150 படிகள்!

இவ்வளவு இருந்தும் எஸ்கலேட்டர் என்றால் பயம் தான்!

எல்லோரும் எஸ்கலேட்டர்-ல ஏறி ஆடாம அசையாம மேல போறத பார்க்கும் போது ‘ச்சே! எனக்கு மட்டும் என்ன பயம்?’ ன்னு தோணும். சில வீரதீரப் புலிகள் நகரும் அதன் மேல் நடந்து போவார்கள்.

மனதை ரொம்பவும் தயார் பண்ணிப்பேன். அடுத்தமுறை பயப்படாமல் ஏறிடணும் என்று. ‘ஒண்ணுமேயில்லை. நீ ஒரு காலைத் தூக்கி வை. அதுவே நகர ஆரம்பிச்சுடும்!’ என்று என்னுடன் வருபவர்கள் சொல்லுவார்கள். அதுதான், அது நகருவதுதான் எனக்கு அலர்ஜி!

சென்னை சென்ட்ரல் மாலில் என் அக்கா அனாயாசமாக அதில் ஏறிப்போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நான் கீழேயே நின்று விட்டேன். அவள் பாவம், நான் பக்கத்தில் வருவதாக நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு போனவள் திரும்பிப் பார்த்தால், நான் கீழேயே நகரும் படிக்கட்டை பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டே நிற்கிறேன்!

அக்கா மேலிருந்து (சத்தமாக) சொன்னாள்: ‘ஒரு காலை தூக்கி வை. அவ்வளவுதான்.’ அதுதானே வரவில்லை எனக்கு! நானும் என் காலுக்கு கட்டளை இடுகிறேன். அது இருந்த இடத்திலேயே ஆணி அடித்தாற்போல நின்று கொண்டிருக்கிறது!

சரி இவ்வளவு சொல்லுகிறார்களே, எஸ்கலேட்டரின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு முயற்சி செய்யலாம் என்று கையை அதன் மேல் வைத்தேன். ஐயையோ! என் கைமட்டும் மேலே மேலே…கால்கள் நான் நின்ற இடத்திலேயே!

அடச்சே! கைப்பிடியாவது ஒரே இடத்தில் நிலை நிற்காதோ? என்ன கலிகாலமாடா சாமீ! உரலும், குழவியும் தான் நினைவுக்கு வந்தன!

போனவாரம் ஒரு மால் போனோம். முதலிலேயே என் மகளிடம் சொன்னேன்: ‘மாப்பிள்ளையும் வருகிறார். எஸ்கலேட்டர் அருகில் போய் ஒரு ‘சீன்’ போட வேண்டாம். மாடிப்படியில் ஏறி வருகிறேன்’ என்று. அவள் கேட்கவில்லை. இன்று ‘உன்னை எஸ்கலேட்டரில் ஏற்றிவிட்டு விட்டு மறுவேலை’ என்றாள்.

வழக்கம்போல எஸ்கலேட்டர் அருகில் போய் அதையே உற்றுப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

‘காலை எடுத்து வைம்மா!’

எங்கள் பின்னால் சிலர் வந்தனர்.

‘இரு, இரு, அவர்கள் போகட்டும்’ – தைரியம் வர எனக்கு கொஞ்ச நேரம் வேண்டுமே!

‘அவர்கள் போயாச்சு! அப்பா, என் கணவர் இருவரும் போயாச்சு. வா நீ!’

ஏ! காலே! நீ எங்கிருக்கிறாய்?

எத்தனை உசுப்பினாலும் என் கால்களில் அசைவே இல்லை.

திடீரென்று என் அருகில் ஒரு பெண்மணி. என் வலதுகையை சுற்றி தனது இடது கையால் கெட்டி (ஆ! வலிக்குது!) யாகப் பிடித்துக் கொண்டார்.

‘கால எடுத்து வையுங்க!’ என்றார்.

அவர் மிரட்டிய மிரட்டலில் காலை எடுத்து வைத்தேன். எஸ்கலேட்டர் என்னை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டது! நடந்ததை உணர கொஞ்ச நேரம் ஆயிற்று எனக்கு.

அட! நான் எஸ்கலேட்டரில் போய்க் கொண்டிருக்கிறேன்! கடைசி படி வந்தவுடன், ’உம், இப்போ காலை வெளியே வையுங்க!’ இன்னொரு மிரட்டல்!

‘தேங்க்ஸ், நன்றி, தன்யவாத…’ எல்லா மொழிகளிலும் நான் சொல்ல, அவர் கடமையே கண்ணாக அடுத்திருந்த எஸ்கலேட்டரில் இறங்கிப் போய் விட்டார்.

அப்பாடி! நாங்கள் தேடி வந்த கடை எங்கே? என் மாப்பிள்ளை சொன்னார்: ‘இன்னும் ஒரு மாடி ஏறவேண்டும்!’

‘கடவுளே…!’

இந்தமுறை என் பெண் ஒரு பக்கம், என் கணவர் மறுபக்கம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த ‘bouncer’ பெண்மணி இருக்கிறாரா என்று.

‘ஏறுங்க! அவர் குரல் காதில் ஒலிக்க ஏறிவிட்டேன்.

‘அம்மா ஏறியவுடன், எஸ்கலேட்டர் வேகம் குறைந்து விட்டது பாரு!’ என் கணவரின் ஜோக் கூட என்னை சிரிக்க வைக்கவில்லை. அத்தனை சீரியஸ்ஸாக தலையைக் குனிந்துகொண்டே வந்தேன்!

அடுத்த மாடியும் எஸ்கலேட்டரிலேயே!

ஒருவழியாக ஷாப்பிங் முடிந்தது. கீழே போக வேண்டுமே! எனது பயம் மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. என் கை மூலம் என் பயத்தை உணர்ந்த என் பெண், ‘இப்போ லிப்ட்டில இறங்கலாம், கவலைப் படாதே!’ என்றாள். இன்னிக்கு எஸ்கலேட்டர் ஏற்றம் கத்துக்கோ. அடுத்தமுறை இறக்கம் சொல்லித் தரேன்…!’ என்று பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள். நானும் எஸ்கலேட்டர் பயம் தெளிந்து அவளது சிரிப்பில் கலந்து கொண்டேன்.

2 comments:

  1. எஸ்கலேட்டர் ஏற்றம் ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
    Replies
    1. Thank u for ur comment Rajarajeswari Madam.

      Delete