Saturday, January 4, 2014

முள்ளு (காமெடி கதை)

ஒரு சின்ன முள்ளால என் வாழ்க்கையே தடம் மாறிப் போச்சு... பாஸ்..! எப்படியா..? அடுத்தவன் உருப்படாம போனதை தெரிஞ்சுக்கறதுல என்ன ஒரு ஆர்வம்..?!

சரி, சொல்றேன்.. அதுக்கு முன்னாடி..

எப்பவாச்சும் கால்ல முள்ளு குத்தியிருக்கா உங்களுக்கு..? குத்தின முள்ளை எடுக்கற சுகம் இருக்கே.. ஹய்ய்ய்யோ.. அதை அனுபவிச்சு பாத்தா தான் தெரியும்!

பெரிய முள்ளு குத்தினா எடுக்கறது ஈஸி.. ஆனா, சின்ன முள்ளு குத்தி, அதை எடுக்கறது இருக்கே.. அதுதான் சேலஞ்ச்.. என்ன சொல்றீங்க..?

சின்ன முள்ளு தானேன்னு நீங்க சாதாரணமா அதை வெளில எடுத்துட முடியாது.. அது தொகுதில செல்வாக்குள்ள சுயேட்சை எம்.எல்.ஏ மாதிரி. காரியம் முடியற வரைக்கும் அதுக்கு குடுக்க வேண்டிய மரியாதைய குடுத்தே ஆகணும்.

முள்ளு குத்தின நேரத்துல அது பெரிசா வலிக்காது. ராத்திரி நேரம் ஆக ஆக, லைட்டா யாரோ கால்ல குண்டூசியால குத்தற மாதிரி இருக்கும். மறுநாள் காலைல 'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க' நாம நடக்கும்போது தான் சின்ன முள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கும்.

மொதல் காரியமா முள்ளு குத்தின பாதத்தை நல்லா கழுவிட்டு, வாகான இடமா பாத்து உக்காந்து கால் மேல காலை மடக்கி போட்டுக்கிட்டு தயார் ஆவோம்.. முள்ளு குத்தினதால வலிக்குமே தவிர, கரெக்ட்டா இங்க தான் முள்ளு குத்தியிருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது.

முள்ளு குத்தின இடத்தோட சுத்து வட்டாரத்து மேல விரலால அமுக்கி, வலிக்குதான்னு பாப்போம்.. அதை செய்யும் போது, ஒரு ராக்கெட்டை தயார் பண்ற விஞ்ஞானி ரேஞ்சுக்கு நம்ம முகத்துல ஒரு சீரியஸ்னஸ் தெரியும்.

ஒரு ரெண்டு நிமிஷ போராட்டத்துக்குப் பிறகு, குத்துமதிப்பா முள்ளு இருக்க இடம் பிடிபடும். முள்ளு மேல சதை மூடியிருக்கும்.. முள்ளு எப்படி அவ்ளோ உள்ளே போச்சுன்னு யோசிக்கறதே ஒரு சந்தோஷ புதிரா இருக்கும்.

ஒரு குண்டூசியையோ, சேஃப்டி பின்னையோ வெச்சு முள்ளு குத்தின இடத்தை சுத்தி மெதுவா குத்துவோம். கால்ல கிணறு வெட்ற மாதிரி முள்ளை சுத்தி தோண்ட ஆரம்பிப்போம். ஒரு சிசேரியன் பண்ற நினைப்போட, முனைப்போட அந்த வேலையை செய்வோம்.

ஒரு கட்டத்துல முள்ளு லேசா தெரிய ஆரம்பிக்கும். ஆஹா.. நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. வெள்ளை பாதத்துல அந்த சின்ன கருப்பு முள்ளு.. குகையின் மறுமுனையில் சிறிது வெளிச்சம்..!

இப்ப குண்டூசிக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, கட்டை விரலுக்கு வேலை குடுப்போம்.

முள்ளை சுத்தி கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தினாலும், சின்ன முள் லேசுல வெளிய வராது. எவ்ளோ அவமானப்படுத்தினாலும் ராஜினாமா பண்ணாத அரசியல்வாதி மாதிரி இடத்தை விட்டு நகராம அங்கேயே கம்முன்னு இருக்கும்.

நாமளும் விடாம தம் கட்டி அமுக்குவோம். ம்ஹூம்.. வராது. அமுக்கினதால ரத்தம் பாய்ஞ்சு முள்ளு ஏரியாவுல பாதம் சிவந்து இருக்கும்.

அந்த நேரம் பாத்து அம்மாவோ, அக்காவோ வந்து "முள்ளா..? நான் எடுக்கறேன்.."-ன்னு பக்கத்துல உக்காந்துக்குவாங்க.. வேண்டாம் வேண்டாம்னு நாம சொல்ல சொல்ல கேக்காம, நம்ம கைல இருக்க குண்டூசிய வாங்கி, ஜாக்கிரதையா குறி பாத்து, கரெக்ட்டா தப்பா முள்ளு மேலயே குத்திடுவாங்க.. "ஐயோ.."-ன்னு கத்திகிட்டே நாம ஒத்த கால்ல பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சுடுவோம்.

"சாரி.. சாரி.. முள்ளு மேல பட்டுடுச்சாச்சா"ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. "உக்காரு.. ரெண்டே நிமிஷத்துல முள்ளை எடுத்துடறேன்.."

'வள்'ளுனு அவங்களை திட்டி அனுப்பிட்டு, நாம நம்ம அகழ்வாராய்ச்சியை தொடர்வோம். கண்ல தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச முள்ளும் இப்ப நல்லா உள்ளே போயிருக்கும். இப்ப முள்ளு குத்தின இடத்தை தொட்டுப் பாத்தா, அதுக்கு ஜுரம் வந்தா மாதிரி லைட்டா சூடா இருக்கும்.

வெய்யில் காலத்துல ரோட்ல தண்ணி லாரி பக்கத்துல டூவீலர்ல போற நம்ம மேல தண்ணி தெரிக்கும் போது, ஜில்லுனு இதமா இருக்கும் இல்லை.. அதை மாதிரி இந்த முள்ளு குத்தின பாதம் சூடா இதமா இருக்கும்.

மறுபடியும் கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தி, முள்ளு வெளிய வர வசதியா குண்டூசியால குத்தி வழி பண்ணி.. ஒருவழியா அந்த முள்ளை எடுப்போம். அது ரொம்ப குட்டியா, பொறந்த குழந்தை மாதிரி இருக்கும். அதை விரல்ல வெச்சு கொஞ்ச நேரம் பாத்துட்டு, கை காலை கழுவிட்டு வரும்போது என்னவோ பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி ஒரு பெருமிதம் நம்ம முகத்துல தெரியும்.

முள்ளு கதைய விடுங்க.. நம்ம மேட்டருக்கு வருவோம்..

நான் ப்ளஸ் டூ படிக்கும்போது எனக்கு டியூஷன் எடுத்தவர் ஜெயராமன் சார். என்னை மாதிரி மக்குப் பசங்களை கூட நல்லா படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சுடுவார். க்ளாஸ்ல என்னை அப்பப்ப பொண்ணுங்க எதிரே அவர் திட்டுவார். இருந்தாலும், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் ஜெயராமன் சார் விந்தி விந்தி நடந்து வந்தார். அதைப் பாத்து காயத்ரி, பூஜா, கவிதா மூணுபேரும் தங்களுக்குள்ள ஏதோ கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தாங்க. எனக்கு கடுப்பாயிடுச்சு.

நேரா ஜெயராமன் சார்கிட்ட போனேன்.

"கால் என்ன சார் ஆச்சு..?"

"ஒரு சின்ன முள்ளு குத்திடுச்சு.. நேத்து அதை எடுத்தப்ப முள்ளு உடைஞ்சு பாதி இன்னும் உள்ளேயே இருக்கு போலருக்குடா.."

"சார்.. அதை வெளிய எடுக்க ஈசியான வழி இருக்கு.. இதோ வர்றேன் சார்..."

எங்க ஸ்கூல் பக்கத்துல நிறைய எருக்கஞ்செடி இருக்கு. அதுலேந்து ஒரு நாலஞ்சு இலைய பறிச்சுகிட்டு வந்தேன். ஜெயராமன் சார் கால்ல, முள்ளு இருந்த இடத்துல இலைலேந்து நாலு சொட்டு பாலை விட்டேன்.

"இன்னும் 5 நிமிஷத்துல முள்ளு தானா வெளில வந்துடும் பாருங்க சார்.." நமக்கு கொஞ்சம் கைவைத்தியமும் தெரியும்ல..!

5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு.. கரெக்ட்டா 12-வது நிமிஷம் வந்துடுச்சு.. முள்ளு இல்லை, ஜெயராமன் சாருக்கு கோவம்..! பின்ன கோவப்படாம என்ன பண்ணுவாரு.. கால்ல பாலை சொட்டினதுல பாதம் சூடாகி, எரிச்சல் அதிகமாயிடுச்சு. சூடு தாங்க முடியாம தண்ணி பக்கெட்ல காலை விட்டுட்டாரு. எனக்கு செம திட்டு.!

கோவமா மாடிப்படி ஏறிட்டிருந்தார். அவர் பின்னாடியே போனேன். "சார்.. காலை காட்டுங்க சார்.. இப்பவே முள்ளை எடுத்துக் காட்டறேன்.."

அரை மனசோட படிக்கட்டுல உக்காந்தார். குண்டூசியை வெச்சு, அவர் பாதத்துல உத்து பாத்து குத்தினேன். கொஞ்ச நேரத்துல முள்ளு கண்ல தென்பட்டது. ஜெயராமன் சார் முகத்துல லேசா ஒரு வெளிச்சம் தெரிஞ்சது.

கவனமா முள்ளுக்கு பக்கத்துல குண்டூசியால குத்தும்போது தானா எனக்கு தும்மல் வந்து தொலைக்கணும்..?! குண்டூசிய குத்திகிட்டே தும்மினதுல... குண்டூசி முழுசா அவர் பாதத்துக்குள்ள போயிடுச்சு பாஸ்..! அவர் கத்திகிட்டே குனிய, நான் நிமிர, ஜெயராமன் சாரோட முன்வரிசை பல்லு ரெண்டு பணால் ஆயிடுச்சு..! அதுல ஒரு பல்லு என் தலைமுடியில போய் ஒளிஞ்சுகிச்சு.

நான் பதட்டப்பட்டு "சாரி சார்.. சாரி சார்"ன்னு சொல்லிகிட்டே அவரை பாக்கறேன்.. பல்லில்லாத ஜெயராமன் சாரை பாத்து சிரிப்பு சிரிப்பா வருது.. அதை அடக்க முடியாம, வாயை பொத்துகிட்டு ரிவர்ஸ்லயே படியிறங்கிட்டேன்.. 'முள்ளால வந்தது பல்லோட போச்சு'ன்னு பெரிய மனசு பண்ணி விட்டுடாம, அவர் என்னை அடிக்க அவசரமா படியிறங்க, கால் வழுக்கி... படிக்கட்டுல உருட்டி விட்ட சூட்கேஸ் மாதிரி தடக் தடக் தடக்கு உக்காந்த வாக்குலயே வழுக்கி கடைசி படிக்கட்டு வரைக்கும் வந்துட்டார்.

பயத்தோட அவர்கிட்ட போய்.. " சார்.. சாரி சார்.. அந்த முள்ளை எடுக்..."

பல்லு போனதால, அவர் என்னை மழலைல திட்ட ஆரம்பிச்சுட்டார்.. ஜெயராமன் சாருக்கு கெட்ட வார்த்தை எல்லாம் கூட தெரியுங்கறது அன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சுது.

"சார்.. முள்ளை எடுத்துடறேன் சார்.. உள்ள இருந்தா ஆபத்து.."

"தேய்.. வேண்தாம்தா.. முள்ளு உள்ளயே இருக்கத்தும்.. எனக்கு சுகர் இருக்கு, bp இருக்கு.. அது மாதிரி இதுவும் இருந்துட்டு போகத்தும்.. என் முன்னாதி நிக்காத.. போ.. போதா.!".

ஜெயராமன் சார் ஒரு கைல தன்னோட உடைஞ்ச பல்லை கைல வெச்சிருந்தார்.. இடுப்பை பிடிச்சுகிட்டு பிள்ளைத்தாச்சி மாதிரி நடந்தபடி இன்னொரு பல்லை தேடிகிட்டே போனாரு.

மறுநாள் அவரை பாக்கலாம்னு போனேன்.

அப்பறம் எனக்கென்ன ஆச்சா..?

நான் ப்ளஸ் டூ முடிக்க ஒரு 2 வருஷம் ஆயிடுச்சு பாஸ்..!

No comments:

Post a Comment