Wednesday, December 24, 2014

இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார்


அண்மையில் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் (84) உடல் நிலையில் புதன்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் “அவருக்கு மீண்டும் ஓரளவு நினைவு திரும்பி உள்ளது. அவரால் தற்போது பேசவும் முடிகிறது. நாங்கள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறோம். இனி விரைவில் அவர் பூரண குணமடைவார்”’ என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைப் பலனின்றி இன்று இரவு காலமாகி விட்டார்.

தமிழ் திரையுலகில் ’இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்பட்ட கே. பாலச்சந்தர் , ஒரு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை புகழ் பெற்ற இயக்குனராவார், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என்று பல பரிமாணம் கொண்டவர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார். பல்வேறு துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் இன்றும் போற்றப்படுகிறது.

மேலும் தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்பவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார். ஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை சுருக்கமாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 09, 1930

இடம்: நன்னிலம், தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: இயக்குனர், திரைகதை எழுத்தாளர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


பள்ளிப் படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.

திரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம்


மேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் , 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். இதில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அத்துடன் இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் , ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத் தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார்.

பாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள்


‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘இரு கோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னி சாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்’.

கே. பி.-யின் சின்னத்திரை படைப்புகள்


1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் முதலில் தூர்தர்ஷனுக்காக தயாரித்த “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.

விருதுகளும், மரியாதைகளும்


1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.

2005-ல் சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2005-ல் அழகப்பா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும், 2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.

1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.

1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும், 1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கி தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவர் மறைந்தது போனதை கேட்டு ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ந்து போயுள்ளது என்பதே உண்மை!அவருக்கு ஜன்னல் தன் அஞ்சலியை செலுத்துகிறது.

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி ரத்து!

நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு பணிகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பஸ் மற்றும் தனியாருக்கு சொந்தமான, வர்த்தக பயன்பாடு அல்லாத, கார், ஜீப், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றையா இந்தியாவின் பெரும்பாலும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சுங்க வரியை வசூலிக்கும் நிறுவனங்களில் பல தங்களுக்குரிய பகுதிகளில் சாலையை சரிவர பராமரிப்பதில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் இந்த சுங்கச்சாவடிகள் பெரும் தடையாக இருப்பதும் கண்கூடு.

இது தவிர, தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசிய சாலைகள் வழியாக வாகனங்களில் செல்வதற்கு கூட பொதுமக்கள் சுங்க வரி செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதே நேரம் சுங்கச்சாவடிகளில் பெறப்படும் மொத்த வருவாயில் 14 சதவீதம் மட்டுமே மத்திய அரசுக்கு கிடைத்து வருகிறது.

அண்மையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகள் பற்றி நாடு முழுவதும் எடுத்த ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது போன்ற குறைபாடுகளை களைவதற்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் வரியை ரத்து செய்ய நிதின் கட்காரி தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

இதற்கான பரிந்துரை ஒன்றை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்து உள்ளது. இதன்படி பஸ், தனியார் வாகனங்களான கார், ஜீப் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் சுங்கவரி அடியோடு ரத்து செய்யப்படும். அதாவது, இனி வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் பெறப்படும்.

இதன் மூலம் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மத்திய அரசுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரம் இந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு பரிந்துரையில் 3 வித யோசனைகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கூடுதலாக 1 ரூபாய் அதிகரிப்பது, புதிய வாகனங்கள் வாங்கும்போது அதன் மீது கூடுதலாக 2 சதவீத வரிவிதிப்பது ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறது. ஏற்கனவே உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடிகளை பயன்படுத்திக்கொள்ள ஒரே கட்ட தொகையாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கவும் இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த 3 கட்ட திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 2014-2019-ம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு 32 ஆயிரத்து 609 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அதாவது, மதிப்பிடப்பட்டுள்ள இழப்பை விட சுமார் 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அதிக வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பான இறுதி பரிந்துரையை அவர் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படம்

சென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்,கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு மல்ட்டிப்ளக்ஸ் காம்ளக்ஸ் மற்றும் திருமண மண்டபங்களாகவும், , அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரும்,நடிகர் திலகத்துக்கு சொந்தமானதுமான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளதாகவும் இந்த வணிக வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.

சிவாஜிகணேசன் நடித்த “ராஜராஜசோழன்”தான் தென்னாட்டின் முதல் சினிமா ஸ்இகோப் படம்.இதைத் தயாரித்த ஜி.உமாபதி உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர். சென்னையில் ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் உமாபதி. தந்தை பெயர் கோவிந்தசாமி முதலியார். பள்ளிக்கூடம் சென்று படிக்க விரும்பினாலும், ஏழ்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.12-வது வயதில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடினமாக உழைத்தார். அச்சுத் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்டார். பிறகு சொந்தமாக அச்சகம் தொடங்கினார். அதுதான் “உமா அச்சகம்.” பிறகு அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினார். அதன் மூலம் வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்தார்.

கட்டிடக் கலையில் ஆர்வம் மிக்கவரான உமாபதி, சினிமா தியேட்டர் ஒன்றை நவீன வடிவமைப்பில் அமைக்க விரும்பினார். இதற்காக அவர் மும்பை சென்றார். அங்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நவீன வடிவமைப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட “மராத்தா மந்திர்” தியேட்டரை பார்த்து அதற்கான செலவு முதலான விவரங்களை கேட்டறிந்தார்.சிவாஜி கணேசனும், உமாபதியும் நல்ல நண்பர்கள். சென்னையில் ஒரு நவீன திரையரங்கம் கட்டவேண்டும் என்ற தன் விருப்பத்தை உமாபதியிடம் சிவாஜி தெரிவித்தார். மேலும் தியேட்டரை அமைக்கும் பொறுப்பை உமாபதி ஏற்றார்.

அதன்படி கட்டப்பட்டதுதான் அண்ணா சாலையில் உள்ள “சாந்தி தியேட்டர்.” சினிமாஸ்கோப் படங்களை திரையிடுவதற் கென்றே அகன்ற திரை அமைக்கப்பட்டது. 1,212 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். `பால்கனி’யில் மட்டும் 419 பேர் உட்காரலாம்.இந்த பிரமாண்டமான “ஏசி” தியேட்டரை பெருந்தலைவர் காமராஜர் 1960-ல் திறந்து வைத்தார்.

இது பற்றி உமாபதியின் மகன் `இளம்பாரி’ கருணாகரன்,”“சிவாஜி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாந்தி தியேட்டரை என் தந்தை கட்டினார். சிலர், `இந்த திரை அரங்கை கட்டிய உமாபதி, அதை நடத்த முடியாமல் சிவாஜிக்கு விற்றுவிட்டார்’ என்று கூறினார்கள்.அது ரொம்ப தப்பு” என்றார்.

பின்னர் சிவாஜி நடித்த அனைத்து படங்களும் சாந்தி தியேட்டரில்தான் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பி வழியும்.சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 35 திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. பழனி, தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்கள் 132 நாட்கள் திரையிடப்பட்டன. 2005ல் ரஜினி திறப்பு 2005ஆம் ஆண்டில் தியேட்டரை புதுப்பித்தனர். சாந்தி, சாய் சாந்தி என இரண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.

இதனிடையே அந்த தியேட்டரில் தற்போது லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்றும் விரைவில் தியேட்டர் இடிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆக, சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.

Friday, November 21, 2014

”ஐயா.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!” – ஹைகோர்ட்டில் சகாயம் மனு!

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பாக வக்கீல் நாகசைலா சென்னை ஹைகோர்ட்டில் புதிய மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர்” கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த என்னை உயர் நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. தற்போது நான் விசாரணை நடத்த தயாராக உள்ளேன். மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை.” என்று விளக்கம் கேட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான கிரானைட் குவாரிகளால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டது குறித்தும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து கோர்ட் மதுரை கலெக்டராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கிறோம். இந்த விசாரணை கமிட்டி, கிரானைட் முறைகேடு குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரணை நடத்தி, அறிக்கையை அக்டோபர் 28ம் தேதிக்குள் இந்த உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழக.அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட் வரை போய் அதில் தொல்வி அடைந்த நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பாக வக்கீல் நாகசைலா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர்,”கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த என்னை ஹைகோர்ட் நியமித்து உத்தரவிட்டது. தற்போது நான் விசாரணை நடத்த தயாராக உள்ளேன். மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் இதில் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே விசாரணைக் குழுவில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Sunday, November 16, 2014

அரசியலில் இறங்க தயக்கம் ஏன்? - ரஜினி


சென்னை சத்யம் தியேட்டரில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. திரையுலகமே திரண்டு வந்த அந்த விழாவை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார். படத்தின் பாடல்காட்சிகள், முன்னோட்டம் திரையிட்ட பிறகு, லிங்கா படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மேடைக்கு அழைத்தனர். லிங்கா இசைவெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேச்சின் சுருக்கம்..

* தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கேயார் பேசும்போது,“ரஜினி படம் வெளியாகும் நாட்களை அவரது ரசிகர்கள் தங்களின் பிறந்தநாளைப்போல் கொண்டாடுவார்கள். லிங்கா படமோ ரஜினியின் பிறந்த நாளிலேயே வருகிறது. அதுதான் லிங்கா படத்தின் ஸ்பெஷாலிட்டி” என்று குறிப்பிட்டார்.

* தேசிய கீதம் படம் வெளியான போது ரஜினி குறித்து ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்ன கருத்தையே தன் பேச்சிலும் குறிப்பிட்டார் இயக்குநர் சேரன்… “ காந்தி, காமராஜருக்கு அப்புறம் உங்களத்தான் தலைவரா பாக்குறோம். எங்கள் பாசம் உண்மை. உங்கள நம்பிட்டோம், நல்லது பண்ணுங்க” என்றவர் ரசிகர்களின் சந்தோஷத்துக்காக நீங்கள் நிறைய படங்கள் பண்ண வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

* நடிகர் விஜயகுமார் பேசும்போது, ’இந்த நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்ல மாட்டான் ’என்று கூறிவிட்டு, “மக்கள் உங்களுக்கு பெரிய விருதை விரைவில் அளிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள் ரஜினி அவர்களே…” என்று பேசினார்.

* லிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு பேசும்போது, ரஜினியை தமிழ்நாட்டின் கடவுள் என்று குறிப்பிட்டார்.

* அவருக்கு முன் பேசிய லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ”இந்தப்படத்தை கடவுளை நம்பித்தான் ஆரம்பித்தேன். அவர்தான் நல்லவிதமாக முடித்துக் கொடுத்தார். அந்த கடவுளின் பெயர் ரஜினி” என்று பேசினார்.

* நகைச்சுவை நடிகர் சந்தானம் லிங்கா படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு, “ இவ்வளோ வெறித்தனமான ரசிகர்களை நான் பார்த்ததே இல்லை. அந்த ரசிகர்களை இவ்வளோ வெறித்தனமா நேசிக்கிற நடிகரையும் நான் பார்த்ததில்லை” என்று பேசிய போது ரசிகர்களுடன் ரஜினியும் கைதட்டினார்.

படத்தின் இயக்குநர் கே. எஸ்.ரவி குமார் பேசும் போது,””ரஜினி ஒரு திறந்த புத்தகம். அவர் ஒவ்வொரு காரியத்திலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதற்கு ஷூட்டிங்கில் நடந்த ஒரு விஷயத்தை வைத்து சொல்ல முடியும். இந்த படத்தின் அறிமுக பாடலுக்கு பிருந்தா நடனம் அமைத்து கொடுத்தார். அதை பார்த்த ரஜினி 25 வயதுக்காரர் ஆடுற மாதிரி நடனம் சொல்லிக் கொடுக்கிறீங்களே. அஜித், விஜய், தனுஷ் ஆடுற மாதிரி சொல்லிக் கொடுக்கிறீங்களே. என்னால் எப்படி ஆடமுடியும் என்று சொல்லிக் கொடுங்களேன் என்று சொன்னார். பிறகு வேறு ஸ்டைலில் நடனம் அமைக்கப்பட்டு ரஜினி ஆடினார். யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்று நினைப்பவர் ரஜினி. இதில் இருந்தே அது தெரிகிறது. நாசூக்காக பிருந்தாவிடம் சொன்னார். அவர் நினைத்திருந்தால் ஆடமுடியாது என்று வேறு மாதிரி சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைத்ததே ரஜினிதான். கமல் நடித்த ‘தெனாலி’ படத்துக்கும் பெயர் வைத்தது ரஜினிதான். ‘லிங்கா’ பட தலைப்பை ரஜினி சொன்னதும் அமீர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் கேட்டோம். தலைவன் கேட்கும்போது தர முடியாது என்று சொல்ல முடியாது என கூறி உடனே பட தலைப்பை எங்களுக்கு தந்தார்.

கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்கா, அனுஷ்காவை தேர்வு செய்ததை அறிந்ததும் இவ்வளவு குறைவான வயதுள்ளவர்களை ஜோடியாக்குகிறீர்களே என்றார். சோனாக்ஷி அப்பா என் நண்பர் என்றார். ரஜினியை பொறுத்தவரை அவருக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது. 28 வயது கொண்ட ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியானார். பின்னர் 24 வயது கொண்ட தீபிகா படுகோனேவுடன் ஜோடி சேர்ந்தார். இப்போது 22 வயதான சோனாக்ஷி சின்கா ஜோடியாகியுள்ளார். ரஜினியுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கும் வயது குறைந்து கொண்டே போகிறது.”என்றார்.

கடைசியாகப் பேசிய ரஜினி “என்னுடைய ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. இந்த ஆண்டே படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தப் படத்தை ஆறே மாசத்திலே எடுத்து முடிக்க சரியான ஒரே ஆள் கே.எஸ். ரவிகுமார் தான். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் ஆன பிறகு நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் மீண்டும் நடிக்க வந்ததற்கு காரணம் ரசிகர்கள் தான். அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் வேலைகள் தொடங்கியதால் பத்திரிகையாளர்கள், ஊடகங்களை என்னால் சந்திக்கவே முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கே.எஸ். ரவிகுமாரும் மற்றும் அனைவரும் ஷூட்டிங்கின் போது என்னை ஒரு சிறு குழந்தை போல பார்த்துக் கொண்டனர். நான் லேட் பண்ணுவேன். ஆனால் ஒரு விஷயத்தில் இறங்கிட்டா டக்குன்னு இறங்குவேன். என்னைப் பத்தி எனக்கே தெரியாது. படம் பண்றது ஈஸி. அதே போல அரசியலுக்குள் நுழைவதும் ஈஸி. ஆனால் வெற்றி கிடைக்கணுமில்ல? திரும்பத் திரும்ப நான் ‘மேலே’ கையைக் காட்டுவேன். ‘அடப்போய்யா’ன்னுவாங்க. எல்லாத்துக்கும் சூழல் அமையணுமில்ல. 

ஆனாலும் அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார். என்னை பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன். அரசியல் என்பது என்ன? அதன் ஆழம் என்ன? என்பது எனக்கு தெரியும். யார் தோளில் ஏறி போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும். அப்படி போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் ஏற்பட வேண்டும். அரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். இங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னை பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்.” என்று பேசினார்.

Saturday, October 25, 2014

மோடி மீது காப்பிரைட் புகார்!

இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் போட்டோக்கள் குறித்த சர்ச்சை எப்போதும் ஓய்வது இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் குரங்கு ஒன்று தன்னை செல்பியாக படம் எடுக்க, அந்தப் படம் பல இடங்களுக்குச் சுற்றி கடைசியாக விக்கிபீடியாவுக்குச் சென்றது. விக்கிபீடியா குரங்கு செல்பியை பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டது. இதற்கு அந்தக் கேமராவின் உரிமையாளரான அமெரிக்கர், குரங்கு எடுத்த செல்பிக்கு நான்தான் உரிமையாளர் என்று விக்கிபீடியா மீது வழக்கு போட்டார். இதனால், போட்டோகிராபர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த வரிசையில் பிரதமர் மோடியையும் வம்புக்கு இழுத்துள்ளார் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த போட்டோ கிராபரான பிமல்நேபாள்.

சர்வதேச புகழ் பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் சேனல் மற்றும் ஹார்வார்டு மீடியா உட்பட பல நிறுவனங்களுக்கு பிமல்நேபாள் போட்டோகிராபராக உள்ளார். இந்நிலையில், தான் எடுத்த புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடி, சிறிது உல்டா செய்து, தனது முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும், இதன் மூலம் தனது காப்பி ரைட் உரிமையை அவர் மதிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி மீது பிமல்நேபாள் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பிமல் நேபாள் தனது முகநூல் பக்கத்தில் ”இந்திய பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக என் படத்தை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அந்தப் படத்தை முழுமையாக பயன்படுத்தாமல், சிறிது மாற்றம் செய்து, அதில் தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்து, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உண்மையில், இந்தப் படத்தை கடந்த ஆண்டு நான் என் வீட்டில், என் மகள் உதவியுடன் கிளிக் செய்தேன். தீபாவளி நாளில் என் வீட்டினுள் உள்ள அறையில் மகள் அபீனா வரிசையாக தீபம் ஏற்ற, நான் அதை போட்டோவாக பதிவு செய்தேன்.

இதன் பின்னர் இந்தப் போட்டோக்களை நான் கூகுளில் பதிவேற்றம் செய்தேன். இப்படிப்பட்ட என் படத்தை, எனது அனுமதியின்றி இந்திய பிரதமர் மோடி தன் முகநூல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் காப்பிரைட் உரிமையை அவர் மீறியுள்ளார். ஆனாலும், மோடி பக்கத்தில் என் படம் பயன்படுத்தப்பட்டது மூலம் நான் உலகப் பிரசித்திப் பெற்ற போட்டோகிராபராக மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

பிமல் நேபாளின் இந்தக் கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில், ”கூகுளில் பதிவேற்றப்பட்டது உங்கள் படம் என்று நிச்சயம் மோடிக்கு தெரியாது. அந்தப் படத்தை அவர் தேர்வு செய்து, சிறிது மாற்றம் செய்து, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உங்கள் பெயர் குறிப்பிட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை” என்று சிலரும்,

”இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். காப்பி ரைட் சட்டத்தை தெரிந்து கொண்டு, அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கலாம். எப்படி இருந்தாலும், மோடியால் நீங்கள் பிரபலம் ஆகிவிட்டீர்கள்”என்று சிலர் ஆதரவுமாக கருத்து பதிவு செய்துள்ளனர்.

Monday, October 20, 2014

போனசாக பிளாட், கார், நகைகளை வழங்கிய நிறுவனம்!

தீபாவளி என்றதும் தொழிலாளிகள் கண்களுக்கு முதலில் தெரிவது போனஸ்தான். கிடைக்கும் போனசை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு புதுத் துணிகள், பலகாரங்கள் வாங்குவதில் தொடங்கி, அந்த பணத்தைக் கொண்டு சிறிய அளவில் நகைகள் வாங்குவது வரை பல்வேறு நிலைகளில் போனசுக்கு செலவுகள் காத்திருக்கும். இந்த வகையில் பார்த்தால் அதிகபட்சம் 30 அல்லது 40 ஆயிரம் ரூபாய் வரை வெகு அரிதாக சிலருக்கு போனஸ் கிடைக்கலாம்.ஆனால் சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

சூரத் நகரைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனமான சாவ்ஜிபாய் டோலக்யாவின் உரிமையாளர் டோலக்யாதான் இப்படியான அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தன் நிறுவனத்தில் பணிபுரியும் 500 தொழிலாளர்களுக்கு புத்தம்புது கார், 300 தொழிலாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 200 தொழிலாளர்களுக்கு அபார்ட்மென்ட் வீடுகள் என்று போனஸ் கொடுத்ததுடன், வருமானவரித்துறைக்கு இதற்கு முறையான ஆவணங்களையும் கொடுத்துவிட்டார்.என்ன இப்படி போனஸ்? என்று சக வியாபாரிகள் கேட்டால், “என் நிறுவனத்துக்காக இந்த தொழிலாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது? அதனால்தான் அவர்களை மகிழ்விப்பதற்காக இந்த பரிசை வழங்கியுள்ளேன்” என்றார்.

இந்த போனஸ் குறித்து கவ்ரவ் தக்கல் என்ற தொழிலாளி கூறும்போது, “நான் இங்கு வேலைக்கு வந்து இரு ஆண்டுகள் மட்டும் ஆகிறது. ஆனால், நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு மிகப் பெரிய அளவில் கவுரவம் கொடுத்துள்ளது. நிறுவனம் எனக்கு தீபாவளி போனசாக கொடுத்த வைர நகை விலை மதிப்பற்றது. அது கம்பெனி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இது இன்னும் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுத்துள்ளது” என்றார்.

Thursday, October 2, 2014

உடலுக்கான கால அட்டவணைஇதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை
நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை 
பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில்  காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை 
வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை 
மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை
 இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை 
சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை 
சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை 
சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை 
பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை 
உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை 
பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை 
கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Wednesday, October 1, 2014

ஜெ. தீர்ப்பு முழு விவரம்!


”கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் அவரும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் 53.6 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி உள்ளனர். ஆனால் அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கணக்கை வருமான வரித்துறைக்கு அவர்களால் சரியாக காட்ட முடிய வில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவரின் வருமானம் 9.91 கோடி ரூபாய். அதில் அவரின் செலவு 8.49 கோடி ரூபாய். இந்த வருமானத்தை மீறியே அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் தங்கள் பெயரிலும் சில நிறுவனங்கள் பெயரிலும் 53.6 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான திருப்திகரமான கணக்கை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி உள்ளதோடு அதற்கான பணத்தை பெற அவரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் கிரிமினல் சதிச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது” என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது.

தீர்ப்பில் அவர்,”கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில், ஜெயலலிதாவின் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சம் என்றும், செலவுத்தொகை ரூ.8 கோடியே 49 லட்சம் என்றும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
இந்த 5 வருடங்களில், ஜெயலலிதா தனது பெயரிலும், மற்ற 3 குற்றவாளிகள் பெயரிலும், தங்கள் நிறுவன பெயர்களிலும் ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த வருமானத்துக்கு ஜெயலலிதாவால் திருப்திகரமாக கணக்கு காட்ட முடியவில்லை.ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும்.குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.அதன்பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம்.

இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்.வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது.அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம்.

இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை.கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை.உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும்.”என்று நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

Wednesday, September 24, 2014

நம் உடல் உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!


கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Saturday, September 13, 2014

இதை படிங்க! ரசத்தை விரும்பாதவரா நீங்க?


சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.பாலா நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Thursday, September 11, 2014

மேட்டுர் அணை வரலாறு

மேட்டுர் அணை வரலாறு : நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம். 
மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. 

இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தரவிட்டார். இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது. 

இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார். 

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. 

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934 அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி அணையின் நீளம் 5.300 அடி அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி. அணையின் உயரம் 214 அடி அணையின் அகலம் 171 அடி அணையின் சேமிப்பு உயரம் 120 அடி அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல் 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது. 

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன. மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. 

இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது. 

இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்..

அறிந்ததும் அறியாததும் - குங்குமப்பூ


இந்தியாவின் காஷ்மீர் பகுதி உயர் ரக குங்குமப்பூ விளைச்சலுக்கு பிரபலமானது.

உலகிலேயே மிகவும் விலைகூடிய நறுமணம் வீசும் இந்தக் குங்குமப்பூ எவ்வாறு பயிராகி அறுவடை செய்யப்படுகிறது என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வர்த்தக ரீதியாக குங்குமப்பூ இந்தியா, ஸ்பெயின் மற்றும் ஈரானில் பயிரிடப்படுகிறது.

ஆனால், காஷ்மீரியில் பயிராகும் குங்குமப்பூவே மிகவும் விலையுயர்ந்தது.

ங்குமப்பூ முதலில் கிரேக்கத்தில் பயிரிடப்பட்டாலும், காஷ்மீரில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளைவிக்கப்படுகிறது.

பனி படர்ந்த மலையழகைக் காண காஷ்மீர் வரும் சுற்றுலாப் பயணிகள் ஊதா நிறத்தில் நறுமணத்துடன் பூக்கும் குங்குமப்பூக்களைக் கண்டுகளிக்காமல் செல்வதில்லை.

காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து சுமார் அரைமணி நேரப் பயணத்திலுள்ளது சிறிய நகரான பாம்போரில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.

காஷ்மீரின் குங்குமப்பூ நகர் என்று இந்நகரம் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஊதாநிறமான அந்தப் பூவிலிருந்து பயன்பாட்டிற்காக அதன் நடுவிலுள்ள மெல்லிய நூல்போன்ற இழை பிரித்தெடுக்கப்படுகிறது.

உணவு மற்றும் இதர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குங்குமப்பூ இழைகளை சேகரிக்க 75,000 க்கும் அதிகமான பூக்கள் தேவைப்படுகின்றன.

க்ரோகஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பூக்கள் காஷ்மீர் பகுதியில் உணவு மற்றும் மருந்துகளில் பாரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குங்குமப்பூவிற்கு ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் தன்மை உண்டு எனவும் சிலர் நம்புகிறார்கள்.

குங்குமப்பூ சந்தையில் மலிவாகக் கிடைக்கும் ஒரு பொருளல்ல. நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 180,000 இந்திய ரூபாய்)

காஷ்மீரில் மிகவும் பிரபலமாக இருக்கும், நறுமணம் வீசும் கேவா எனும் ஒருவகைத் தேநீர் தயாரிப்பில் குங்குமப்பூ முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகை தேநீருக்கு வண்ணம் சேர்ப்பதற்கும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

கறுவாப்பட்டை(சினமன்), ஏலம் மற்றும் குங்குமப்பூ உட்பட பல நறுமணப் பொருட்களை கொதிக்க வைத்து கேவா தேநீர் தயாரிக்கப்படுகிறது.

பின்னர் தேன் மற்றும் பாதாம் துருவல்கள் தூவப்பட்டு புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானமாகப் பரிமாறப்படுகிறது.

Wednesday, August 27, 2014

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி?

தமிழ்ப் படங்களில், கதாநாயகிகள் ‘வயதுக்கு வருவதாக’ அமைக்கப்படும் காட்சி களைப் பார்க்கும்போது, இயக்குநருக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாதா அல்லது ஒரு பெண்ணிடமாவது கேட்டு இந்த மாதிரி காட்சிகளை எடுக்க மாட்டார்களா என்றும் தோன்றும். திரைப்படத்தில் காட்டுவதைப் போல் நட்டநடு சாலையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி கத்துவது, வலி வந்தவுடன் நாயகனின் முகம் அவள் நினைவுக்கு வருவது எல்லாம் உண்மையில் எங்கும் நடப்பதில்லை.

பெரும்பாலான பெண்கள், பருவ வயதை நெருங்கியவுடனே, வயதுக்கு வந்தவுடனே உடம்பில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி, தோழிகள் என்று யார்மூலமாவது அந்த விஷயம் அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கும்.

பெண்கள் தாங்கள் வயதுக்கு வந்த செய்தியை முதலில் தனது அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. நிகழ்வு நடந்தவுடன் பயம், வலி, பதற்றம், அவமானம் எல்லாம் கலந்த உணர்வுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுவரும். இதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருப்பவர்கள் எப்படியாவது சமாளித்துவிடுவார்கள். ஒன்றும் தெரியாதவர் களுக்கு ஏற்படும் உணர்வு விவரிக்க முடியாதது.

ஒரு பெண் தான் பூப்படைந்த போது, தனக்கு ரத்தப் புற்றுநோய் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள். அழுது ஆர்ப் பாட்டம் செய்ததில், அவரது உறவினர்கள் தலைசுற்றிக் கீழே விழாத குறைதான். பின்னர் தான், நடந்தது என்ன என்பதை உணர்ந்து ஆசுவாசப்பட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ‘சானிட்டரி நாப்கின்’ விளம்பரங்களைப் பார்த்தாலே டி.வியை உடைத்தால் என்ன தப்பு என்றுதான் தோன்றும். (பெரும்பாலான விளம்பரங்கள் இந்த உணர் வைத்தான் ஏற்படுத்துகின்றன).

மாதவிடாய் நாட்களில், “நீங்கள் ஆசைப்படுவது போல் ஆடலாம், ஓடலாம்” என்று சொல்லி ஏணியில் ஏறுவதுபோல், எதன் மீதாவது ஏறிக் குதித்து ஓடுவதுபோல் காட்டுகின்றனர். உண்மையில் மாதவிடாய் நாட்களில் ‘ஓய்வு’ தவிர வேற எதுவும் தோன்றாது.

வயிற்று வலி, இடுப்பு வலி, ஒரு சிலருக்கு மார்பகம் வீங்கிப்போவது என்று பல வலிகளை அந்த மூன்று நாட்களில் பெண்கள் சந்திக்கின்றனர். இன்னும் சிலருக்குச் சோர்வு முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கும். தவிர, மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றையெல்லாம் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் என்றால் ரத்தப்போக்கு மட்டும்தான் என்பதுபோல் காட்டுவது சலிப்பாக இருக்கிறது. எந்தப் பதற்றமும் இல்லாமல், ஓய்வு எடுப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்பதுகூடவா விளம்பரத் தயாரிப்பாளர்களுக்குத் தெரியவில்லை?

மற்ற விளம்பரங்களைப் போல் இந்த விளம்பரங்களும் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன: விளம்பரத்தில் வரும் பெண்கள், விளம்பரத்தில் மட்டும் தான் இருக்கின்றனர்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது…..!

Thursday, August 21, 2014

சாமுத்திரிகா லட்சணங்கள் அமைந்த நடிகை யார்?

”மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சமஅளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும். எனக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக் கும் இடது தாடை சற்று பெரியதாக இருக்கும். எம்.ஜி.ஆருக் கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரியதாக அமைந்திருக்கும். எல்லா லட்சணமும் கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்தி மாலாதான்.” என்று நடிகர் சிவகுமார் பேசினார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை ஐகோட்டில் நேற்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு நடிகர் சிவகுமார் பேசும்போது,”சிறுவயதில் சிலரது முகம் அழகற்று இருக்கலாம். ஆனால் அவர்களின் நல்ல வாழ்க்கை முறையின்படி பின்னர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். காந்தியடிகள், ஆபிரகாம்லிங்கன் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

ஒவ்வொரு நாளும் 166 முறை பிரணாயாமம் செய்தால் 166 ஆண்டுகள் வாழலாம் என்று முன்னோர் கூறியுள்ளனர். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். நான் தினமும் 84 முறை பிரணாயாமம் செய்கிறேன். மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சமஅளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும். எனக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக் கும் இடது தாடை சற்று பெரியதாக இருக்கும். எம்.ஜி.ஆருக் கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரியதாக அமைந்திருக்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்தி மாலாதான். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து ஆறரை மணி வரை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். பசித்த பின்னர் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆயுளில் 10 ஆண்டுகள் கூடும்.

அதுபோல் தினமும் 7 மணி நேரம் தூங்க வேண்டும். 5 மணி நேரம் மட்டும் தூங்கினால் இருதய நோய் வருவதற்கு 40 சதவீதமும், 3 மணி நேரம் மட்டுமே தூங்கினால் அந்த நோய் வருவதற்கு 70 சதவீதமும் வாய்ப்புள்ளது”. என்று அவர் பேசினார்.

Tuesday, August 19, 2014

ரகசியம் காப்போம்


அமெரிக்காவின் கூகுள் இணையதளம் நடத்திய வரைபடப் போட்டியில் பங்குபெற்ற பலரும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து “சர்வே ஆஃப் இந்தியா’ ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரியில் உள்ள “இஸ்ரோ’ மையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை எல்லாம் கூகுல் இணையதள வரைபடத்தில் இப்போது துல்லியமாக காண முடிகிறது. கூகுள் நிறுவனம் 2013-இல் நடத்திய வரைபடப் போட்டியில், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களை குறிப்பிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. உடனே களத்தில் குதித்த நம்மவர்கள் அவரவர் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களை எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு குறிப்பிட்டு விட்டனர். இப்படி நாமே வலையில் சிக்கிக் கொண்டு கொட்டிய தகவல்களை சேகரித்த கூகுள், இப்போது அவற்றை வரைபடத்தில் வெளியிட்டு “ரகசியம்’ என நாம் பாதுகாத்து வைத்ததையெல்லாம் உலகறிய அம்பலப்படுத்தி விட்டது.

இத்தனைக்கும், கூகுள் நிறுவனம் இப்படி ஒரு போட்டியை அறிவித்தபோது அதுகுறித்து “சர்வே ஆஃப் இந்தியா’ புகார் கூறியது. சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது. அப்படி இருந்தும், கூகுள் துணிச்சலாக செயல்பட்டு வருவது அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.வரைபடப் போட்டியில், நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் குறிப்பிட்டவர்கள் அதன் எதிர்கால ஆபத்தை உணர்ந்திருப்பார்களா? இந்த விவரங்களை அமெரிக்காவும், அதன் சி.ஐ.ஏ.வும் மட்டுமின்றி இந்தியாவின் எதிரிநாடுகள் எப்படி பயன்படுத்தும் என்பதை நம்மவர்கள் அறிவார்களா?

அமெரிக்காவுடன் இன்று நமக்கு நல்லுறவு இருக்கலாம். நாளைக்கு உறவு கசந்தால் அப்போது நிலைமை என்னவாகும்? அதைவிடுங்கள், உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு இந்த ரகசியம் “அல்வா’ மாதிரி கையில் கிடைத்துள்ளதே. அதனால் எந்த நேரத்தில் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை அறிவோமா?அணுஉலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் நிலைமை என்னவாகும்? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

அறிவியல் வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ள இந்தக் காலத்தில், அதுவும் அமெரிக்காவிடமிருந்து ரகசியங்களை மறைக்க முடியுமா? அவர்களால் கண்டு பிடிக்க முடியாததையா நாம் குறிப்பிட்டு விட்டோம்?நாம் குறிப்பிடாவிட்டாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாதா? அவர்களிடம் இல்லாத செயற்கைகோள் தொழில்நுட்பமா? என்றெல்லாம் எதிர்கேள்விகளை எழுப்பி நாம் செய்துள்ள தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முடியும். ஆனால், அது ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வாக இருக்காது.

முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் போக்ரானில் நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை, இந்தியா அறிவித்த பிறகுதான் அமெரிக்காவிற்கு தெரிந்தது. அமெரிக்காவிற்கு எல்லாம் தெரியும் என்பதைவிட அவர்களால் தெரிந்து கொள்ள முடியாத, தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள் ஏராளம் உண்டு.நுண்ணறிவுப் பிரிவினர் ரகசியத் தகவல்களை எப்போதும் ஒரே நேரத்தில், ஒரே வழியில் சேகரிக்க மாட்டார்கள். அதற்கென பல வழிகளைக் கையாளுவதுண்டு. அவ்வாறு சேகரித்த தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் துல்லியத்தை சரிபார்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளை கையாளுவர்.

சேகரித்த ரகசியத் தகவல்களை பகுப்பாய்வு செய்து முறைப்படுத்தி அதை பயன்படுத்தும்போது அந்த தகவல்களை தெரிவித்தவரே அதிர்ச்சி அடையும் வகையில் அதன் தாக்கம் இருக்கும். அமெரிக்காவிடமும், தீவிரவாதிகளிடமும் நமது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த விவரங்கள் கையில் இருந்தாலும், அதை அண்டை வீட்டுக்காரர்கள் மூலம் நூறு சதவீதம் இப்போது உறுதிப்படுத்திக் கொண்டார்களே. இனி, நாம் என்ன செய்யப்போகிறோம்?

இதுமட்டுமல்ல, “பேஸ்புக்’கிலும் இன்னபிற சமூக ஊடகங்களிலும் நாம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும், பொதுதகவல்களையும் கொட்டி கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறோம். அவையெல்லாம் யாரால், எங்கு, எப்படி, எப்போது நமக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இனியாவது இதுபோன்று ஆர்வக் கோளாறில் வீட்டு ரகசியத்தை வீதியில் விதைக்காமல் இருப்போம்; ரகசியம் காப்போம்.

Monday, August 18, 2014

திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம்


பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது திருமணப் பதிவையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. முதலில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால் இறுதியாக பதிவாளரை நேரில் சந்திக்கும் அனுமதியை பெற்று ஒரு தம்பதியர் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள இயலும்.

வடக்கு மாவட்டங்களில் அடுத்த மாத மத்தியில் துவங்கப்படும் இந்த நடைமுறையின் பரீட்சார்த்த செயல்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற்காலத்தில் டிஜிட்டல் சான்றிதழை வழங்கவும் மத்திய அரசு எண்ணியுள்ளது. மாவட்ட அலுவலகங்களில் தேவையில்லாத தாமதத்தையும், இடைத் தரகர்களின் கும்பலையும் குறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் வீடுகளில் இணையதள இணைப்பு வசதி இல்லாதவர்களுக்கு மாவட்ட அலுவலகங்களில் இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று டெல்லி பிரதேச ஆணையாளர் தரம்பால் தெரிவித்தார். இதுமட்டுமின்றி வருவாய்த்துறையின் பிற சேவைகளான பிறப்பு, இறப்பு, இனம், தேசிய சான்றிதழ் பெறுதல், உறைவிடம், மாற்றுத் திறனாளிகள், வருமான சான்றிதழ் போன்ற அனைத்து பல சேவைகளையும் இணையதளத்தில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

உணவுத்துறை மூலம் ரேஷன் கார்டு வழங்குதல், சமூக நலத்துறை மூலம் ஓய்வூதியம், ஊனமுற்ற நபர்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை போன்றவற்றிற்கான நடைமுறைகளும் இணைய தளப் பயன்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நபருக்கு அளிக்கப்படும் UID ஆதார் எண்ணே அனைத்து விண்ணப்பங்களுக்கும் அடிப்படை எண்ணாகப் பயன்படுத்தப்படும் என்றும் இந்த தரவுத் தகவல்களே பிற அலுவலகங்களுக்கும் உபயோகிக்கப்படும் என்றும் அரசு அறிக்கை குறிப்பிடுகின்றது.

உடலின் நலன் நகத்திலும் தெரியும்!


அகத்தின் அழகை முகம் காட்டுவது மாதிரி, நம் உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்! ஆகும். பழங்காலத்தில், நாடியைப் பிடித்தும் நகங்களைப் பார்த்தும்தான் நோய்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். உடலின் நல்லது, கெட்டதுகளை உங்கள் நகங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால்… லாவ்! நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நகங்கள் வெளிறிப் போய் வெள்ளையாக இருந்தால், கல்லீரலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று உஷார் மணி அடிக்கிறது. சிறுநீரக செயலிழப்பு இருக்குமேயானால், நகங்களின் வளர்ச்சி அப்படியே குறையத் தொடங்கி, வெண்மை பாதி, சிவப்பு பாதி என்று நிறம் மாறத் துவங்கும். ●

நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பாக இருந்தால், கவனம் ப்ளீஸ்…நீங்கள் உடனடியாக இதய சம்பந்தமான மருத்துவரை அணுக வேண்டும். ரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாவிடில், நகங்கள் நீலமாகிவிடும்.

நாள்பட்ட நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களின் நகங்கள் கிளிமூக்கு போல் வளைந்திருக்கும். நகங்கள் வெளுத்து, குழி போல இருந்தால், ரத்த சோகை இருக்கிறது என அர்த்தம்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகத்தில் வெண் திட்டுகள் உண்டாகும்

எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

Friday, August 15, 2014

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

தகவல் உதவி:தமிழும் சித்தர்களும்

Wednesday, August 6, 2014

சுவைமிகு செய்திகள்

சாதுர்யம்விண் இயற்பியல் துறையில் சிறந்து விளங்கியவர் எடிங்டன். 1926ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அரங்கில், விண்மீன்களும் அணுக்களும் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அப்போது, மேகக் கலத்தில் (Cloud Chamber) ஆல்பா துகள் ஊடுருவும்போது ஏற்படுத்திய தடத்தின் ஒளிப்படத்தைப் பெரிய திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கொடுத்தார்.

மேகக்கலம் என்பது ஓர் அணுக்கதிர் ஆய்வுக் கருவி. இதில் அதி செறிவூட்டப்பட்ட (Super Saturated) ஆவி இருக்கும். இதன் வழியாக ஆற்றல் மிக்க மின்னூட்டத்துகள் செல்லும்போது, வழித்தடத்தில் அயனிகளைத் தோற்றுவிக்க அதி செறிவூட்டப்பட்ட ஆவி நீர்த்துளியாக அதில் படிந்துவிடுகிறது. இதைப் படம் பிடித்து, திரையில் காட்டியபோது, ஒளிப்படம் போட்டுக் காட்டும் பணியாளரின் கைரேகை அதனுள் விழுந்து, அதுவும் தடம்போல தோற்றமளித்தது. இந்த எதிர்பாராத காட்சியைப் பார்த்து திகைத்து நின்றார் எடிங்டன்.

பெரிய பெரிய அறிஞர் பெருமக்கள் கூடியுள்ள அரங்கத்தில், தலைக்குனிவை ஏற்படுத்தும் பிழை ஏற்பட்டுவிட்டதே என நினைத்து மூளைக்கு வேலை கொடுத்தார். பின்பு,
இது ஆல்பா துகளின் ஒளிப்படம் அல்ல; அது விட்டுப்போன தடத்தின் ஒளிப்படம். ஒரு கை விரல் எப்படி அதன் ரேகையோடு தொடர்புடையதாக இருக்கிறதோ அதுபோல, மேகக் கலத்தின் படங்கள் அதன் துகளோடு தொடர்புடையதாக இருக்கிறது என்று விளக்கம் கொடுத்தார்.

இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த குரெளதெர் (J.G. Crowther) என்ற விஞ்ஞானி, அப்படியொரு சூழலில் எந்தச் சொற்பொழிவாளராலும் இவ்வளவு சாதுர்யமாக விளக்கம் கொடுக்க முடியாது என்று புகழ்ந்துள்ளார்.

பசியைப் போக்குமா?

எதிர்காலத் தேவைகளை முன்னரே கற்பனையில் யோசித்து புதிது புதிதாக இயந்திரங்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர் பௌல்டன் என்னும் பொறியாளர். வேடிக்கையாகவும், வெளிப்படையாகவும் பேசும் இவர், நீராவியின் செயல்திறனை உலகிற்கு வெளிப்படுத்திய ஜேம்ஸ் வாட்டின் நண்பர்.

பௌல்டனின் இயந்திர உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிட மூன்றாம் ஜார்ஜ் மன்னரும் சார்லெட் அரசியும் வந்திருந்தனர். இயந்திரங்களையும், இன்ஜின்களையும் பார்த்துப் புகழ்ந்தனர். ஆனால், அவர்கள் எதையும் விலைக்கு வாங்கவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த பௌல்டன் அரச பரம்பரையினரிடம், என்னைப் போல பாராட்டுப் பெற்ற மனிதன் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால், வெறும் பாராட்டு மட்டும் சட்டைப் பையை நிரப்பாது. வயிற்றுப் பசியைப் போக்காது என்று கூறியுள்ளார்.

அரசியல்வாதி

அமெரிக்க நாட்டின் பொருளாதார நிபுணர்களுள் குறிப்பிடத்தக்கவர் மில்டன் பிரைட்டன். இவர், ஒருமுறை ஹாங்ஹாங் சென்றபோது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். ஒரு பத்திரிகையாளர், நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியானால் பொருளாதாரப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள் அல்லவா? என்று கேள்வி கேட்டார். இக்கேள்விக்கு பிரைட்டன், நாற்காலியில் அமர்ந்ததும் அரசியல்வாதியாகி விடுவேன் என்றாராம்.

நீரோ மன்னன்ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்தான் நீரோ மன்னன் என்று படித்துள்ளோம். இந்த மன்னனுக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், சித்ரவதை செய்து உங்களைக் கொல்வேன் என்று கடிதம் அனுப்புவாராம். இப்படிக் கொன்றவர்களுள் அவரது தாயும், ஆசிரியர் செனேகா என்ற தத்துவ ஞானியும் அடங்குவர்.

14 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த நீரோ மன்னனுக்கு ரோம் நாடாளுமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும், நீரோ மன்னனின் முறைப்படியே தற்கொலை செய்து கொள்ள அனுமதியும் அளித்தது.

ஊனம் ஒரு குறையல்லஆங்கிலக் கவிஞர் மில்டன் திடீரென கண் பார்வையினை இழந்து விடுகிறார். எனினும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. கண் பார்வை இழந்த பின்புதான் புகழ்மிக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். தன்னைப் பற்றிக் கூறும்போது,
காலை வேளையில் மற்றவர்களைப் போல நானும் விழித்துக் கொள்வேன்; தொழிற்சாலைகளின் மணி ஒலி கேட்கும் முன் எழுந்துவிடுவேன்; கோடையில் பறவைகள் விழித்தெழும் முன் - சப்தம் கேட்கும் முன் எழுந்துவிடுவேன்; களைப்படையும் வரை மற்றவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, தகவல்களைக் கிரகித்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

திருடன் தந்த மரியாதை


பெல்ஜிய நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளராக மேட்டாலிக் விளங்கினார். எழுதிக்கொண்டிருக்கும் போது அவரிடம் யாராவது பேசினால் கடுமையாகக் கோபப்படுவார். ஒருநாள் அவர் அறையினுள் எழுதிக் கொண்டிருந்தபோது திருடன் உள்ளே வந்து அங்கிருந்த பெட்டியைத் திருடிச் சென்றுவிட்டான்.

அந்தப் பெட்டியினுள் அவரது மனைவியின் விலை உயர்ந்த நகைகள் இருந்தன. தற்செயலாக அறையினுள் வந்த மனைவி, பெட்டியைக் காணாமல் திடுக்கிட்டார். அய்யோ, நகைப்பெட்டியைக் காணவில்லையே, திருடன் திருடிச் சென்றுவிட்டானே என்று பதற்றத்தில் பேசியுள்ளார். இதனைக் கேட்ட மேட்டாலிக் ஒரு திருடன் என் வேலைக்குக் கொடுத்த மரியாதையைக்கூட உன்னால் தரமுடியவில்லையே என்றாராம்.

அடையாளக்குறிக் கடிதம்விக்டர் ஹியூகோ என்ற நாவலாசிரியர் தான் எழுதிய நாவல் எப்படி விற்பனையாகிறது என்பதை அறிய விரும்பினார். எனவே, பதிப்பாளருக்குக் கடிதம் எழுத நினைத்தார். அக்கடிதத்தில், ? என்பதை மட்டும் குறியிட்டு அனுப்பினார். அதற்குப் பதிப்பாளர், ! என்ற குறியிட்டுப் பதில் அனுப்பியுள்ளார்.

’?’ - நாவல் நன்றாக விற்பனையாகிறதா?

’!’ - ஓ,! ஆச்சரியப்படும் வகையில்

என்பதே அந்தக் குறிகளின் விளக்கங்கள்.

நெஞ்சை அதிரவைக்கும் தகவல்


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள்.

அந்த சோகச்சுவடுகள் ஏற்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இங்குள்ள ஏசஹ் மாகாணத்தின் சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பாண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட இச்சுண்ணாம்பு குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளது. பேரலைகள் மட்டுமே இக்குகைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மணற் படிவங்களை, மட்டைகளை அடுக்கி வைத்தது போன்று கேக் வடிவில் இக்குகை காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குகையிலுள்ள மணற்படிவங்கள், சிப்பி ஓடுகள், எஞ்சியுள்ள நுண்ணிய உயிரினங்களின் மாதிரியை சேகரித்து கதிரியக்கக் கரிம ஆய்வு செய்ததில், 2004க்கு முன் 11 சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2800 ஆண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி தாக்கியதாகவும், சென்ற 500 ஆண்டுகளில் 4 சுனாமிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 1393 மற்றும் 1450 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அசுர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதியாக கூறியுள்ளனர். எவ்வளவு உயரமான சுனாமி அலைகள் குகையை தாக்கியுள்ளன என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கலாம் என்ற யூகங்களுக்கு இடம் உள்ளது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர் ரூபின் கூறும்போது, “2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதால் இன்னும் 500 வருடங்களுக்கு சுனாமி வர வாய்ப்பில்லை என உறுதியாக கூற முடியாது, உடனடியாக பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறமுடியாது” என்றார்.

500 வருடங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டதை உணர்ந்தவர்கள் யாரும் இல்லாததால் 2004 ஆம் ஆண்டு பேரிழப்பை சந்திக்க நேர்ந்ததாகவும், ஆனால் 2004-க்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொள்ள முடியும், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கதிரியக்கக்கரிம ஆய்வு செய்ததில் எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்பங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்ததென்றும், ஆனால் சுனாமியின் அளவை அறியமுடியவில்லை என்றும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கேத்ரின் மொனெக்கெ தெரிவித்துள்ளார்.

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் குரூப் என்ற ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரான புவியியல் வல்லுனர் கெர்ரி சீஹ் கூறுகையில், “இன்னும் பல பத்தாண்டுகளில் அசுர பலம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது பூகம்பம் ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது. அதே சமயத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள நல்ல வாய்ப்புள்ளது” என்றார்.

"இந்த செய்திக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

மார்வாடிகளின் வணிக ரகசியம்

பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.

மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.

நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் கொடூர வில்லன்கள் அல்லது காமெடியன்களாகத் தான் சேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் இவர்களை “நம்பள் நாளே வரான். பைசா கேக்கறான். நிம்பள் கொடுக்கிறான்” என்று பேசுவதாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்காமல் ஏழைகளிடம் வட்டிக்காசு வசூலித்து, அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் மிகுந்த வறியவனாய், வந்தேறியாய் வரும் ஒரு மார்வாடி எப்படி செல்வந்தனாகிறான் என்பது யாரும் அறியாத கதை.

அதை விரிவாக அறியும் வாய்ப்பு வந்தது- The Marwaris- from Jagat Seth to the Birlas என்ற நூல் மூலமாக, மார்வாரிகள் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர் தாமஸ் டிம்பெர்க்.

குரு சரண்தாஸ் எழுதிய முன்னுரையே முப்பது பக்கங்கள் என்றாலும் அது ஒரு பிரமாதமான ட்ரெயிலர் என்று சொல்லலாம். 1971-ல் மார்வாடிகளின் வணிக எழுச்சி பற்றி பிஹெச்.டி. ஆய்வாளரான டிம்பெர்க்கை சந்திக்கிறார் குரு சரண்தாஸ். இந்தியாவின் உள் நாட்டு வணிகம் முழுவதையும் மார்வாடிகள் எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று அறிகிறார்.

ஒரு புதிய பொருளை மிக விரைவில் அது பற்றி தெரிந்து கொண்டு அதை வாங்கி, விற்று வணிகம் நடத்தும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது நிஜமாகவே ரஸ்க் தின்பது போலதான் எனத் தோன்றுகிறது. தந்தி வராத காலத்தில் புறாக்களை வைத்தும், தந்திகளை முதலில் பயன்படுத்தியும், திருட்டுத்தனமாக ரேடியோ கருவிகளை வைத்துக் கொண்டும், லண்டன் பங்குச் சந்தை விலை முதல் உள்ளூர் விலை வரை எல்லாவற்றையும் எப்படி வேகமாக அறியத் துடித்தார்கள் என்று படித்தபோது வியப்பாக இருந்தது.

சேத்தின் வியாபார நிர்வாக வழிமுறைகள் அலாதியானவை. ‘கடி’ என்ற பஞ்சு மெத்தைதான் சேத்தின் அலுவலகம். முனிம் என்கிற கணக்கர்தான் கணக்குகள் எழுதுவார். உள் அறையில் சரக்குகள் இருக்கும். பின் கட்டில் பிராமணர்கள் சமைப்பார்கள்.

புதிதாக வரும் மார்வாடி இளைஞர்களுக்கு அங்கேயே தங்கி, வேலை செய்யும் வசதி செய்து தரப்படுகிறது. முதலில் ஹுண்டி எனும் கணக்கியல் பயிற்சி. பின் சரக்கு பரிமாற்றம். பிறகு ஏதாவது ஒரு கிளையில் வேலை. தனியாக தொழில் செய்ய நினைத்தால் நிதிதாரராக அல்லது பங்குதாரராக சேத்தே உதவி செய்வார்.

முதலாளியின் உள்ளுணர்வு எல்லா முடிவுகளுக்கும் காரணி. நம்பிக்கைதான் வியாபார மந்திரம். கூடி வாழ்தல்தான் பிழைக்கும் வழி என எத்தகைய போட்டி என்றாலும் கூடியே வாழ்தல். எல்லா கணக்கும் அன்றன்றே பைசல் செய்தல். போட்டியாளர், பகையாளி என யாராக இருந்தாலும் கடன் கொடுத்தும் வாங்கியும் தொழில் நடத்துதல் என பிரம்மிக்க வைக்கும் வழிமுறைகள்.

இவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கும் கடன் வழங்கியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்துக்கும் நிதி வழங்கி யிருக்கிறார்கள். தொழிலில் வரிகள் நெருக்கடி, வெள்ளையரின் சூழ்ச்சி என வரும்போதெல்லாம் பணத்தை நிலத்தில் போட்டு நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். எந்த புதிய தொழில் வந்தாலும் ஒரு கை பார்த்தார்கள். பிட்ஸ் பிலானி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என அமைத்து கல்வி அமைப்பிலும் கால் பதித்தார்கள்.

அதிக அளவில் ஜெயின் வம்சம் என்றாலும் இந்து மதத்தின் நீரோட்டத்தில் கலந்தார்கள். மார்வாரி மொழியைக் காட்டிலும் இந்தியை வளர்த்தார்கள். இந்தி-இந்து-இந்தியா என்ற கட்டமைப்பில் மார்வாடிகளின் வணிக நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பிற்காலத்தில் கலப்பு மணம் புரிந்தாலும் கவனமாய் செல்வம் காத்தார்கள். பெண்கள் மெல்ல படிக்க ஆரம்பித்தார்கள்.

கீதா பிரமல் போன்றவர்கள் பிஸினஸ் குடும்பத்தில் பிறந்து பிஹெச்.டி. செய்தார்கள். ராம் மனோஹர் லோஹியா, கமல்நாத் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். லாலு பிரசாத் யாதவின் உலகப் பிரசித்தி பெற்ற ரயில்வே துறை பட்ஜெட்டை தயாரிக்க உதவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கூட மார்வாடிதான் என்று அறிகையில் அந்த சமூகத்தின் வீச்சு புரிகிறது. புத்தகம் நிறைய எல்லா சேட்டுகளின் பெயர்களும் சொந்தங்களும் அவர்களின் தொழில்களின் வரலாறுகளும் திகட்டத் திகட்டக் கொடுக்கப்படுகின்றன.

உலகமயமாக்கலை தடுக்கும் ராகுல் பஜாஜ் முயற்சிகளும், உலக மயமாக்கத்துக்குப் பிறகு நிர்வாக முறைகளை மாற்றிய குமாரமங்கலம் பிர்லாவின் முயற்சிகளும் அந்த சமூகத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

தற்போது போப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தொழில்கள் இல்லை எனச் சொல்லலாம். ஏழாவது தலைமுறை காணும் பிர்லாவை அமெரிக்காவின் போர்ட் அல்லது ராக்பெல்லருடன் ஒப்பிடலாம் என்கிறார் ஆசிரியர்.

மார்வாடியைப் போல பணக்கார வியாபாரியாக என்ன வழி என்று கேட்கையில் ஒரு மார்வாடியே இதை நகைச்சுவையாய் சொல்கிறார்: “ஒரு மார்வாடியின் மகளை கட்டிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை பணக்கார வியாபாரியாக மாற்றிக் காட்டுவார்கள்”

Tuesday, August 5, 2014

மொபைல் போனுக்கு மாற்றாக பயன்படும் டிவைஸ்!

மொபைல் இல்லாத வாழ்க்கையை நினைச்சி பார்க்க முடியாத இந்த கலா கட்டத்தில் மொபைல் பாட்டரி இல்லாமல் போனளோ – மொபைலில் கிரடிட் இல்லாமல் போனளோ – மொபைல் சிக்னல் இல்லாமல் போனாலோ – மொபைல் உடைந்து விட்டால் மிகவும் கஷ்டம் – அப்படி நடந்து விட்டால் பாதி பேருக்கு என்ன செய்வது எது செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் விடுவார்கள் – இந்த மாதிரி சுழ்நிலையை சமாளிக்க ஒரு புது வகை டிவைஸ் வந்துள்ளது – இதன் பெயர் “கோ தென்னா ” .

இது மொபைல் வேலை செய்யாத நேரத்தில் இந்த டிவைஸ் ரேடியோ அலைகளின் மூலம் 80 கிலோமீட்டர் வரை மொபைல் சிக்னல் இல்லாமல் இது குறுஞ்செய்தி அல்லது போன் கால்களை உங்கள் மொபைல் தேவை இல்லாமல் செய்ய கூடிய ஒரு அற்புத கேட்ஜெட் .

ஒரு நாள் கார்ஜ் செய்தல் முன்று நாட்கள் வரை உழைக்க கூடிய ஒரு அற்புத கண்டுபிடிப்பு – இனிமே பேட்டரி இல்ல – சிக்னல் இல்ல – பாலன்ஸ் இல்லைன்னு பொய் சொல்ல முடியாதும் கூட!

Monday, August 4, 2014

டாக்டர்கள் உஷார்!


கருப்பையில் உருவாகும் கட்டிகளை தொப்புள் வழியாக குழாயை செலுத்தி தகர்த்து உறிஞ்சி எடுக்கும் சிகிச்சைக்கு – laproscopic power morcellation for hysterectomy – அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஃபைப்ராய்ட் எனப்படும் இந்த கட்டிகளை ஆபரேஷன் இல்லாமல் விரைவாகவும் சுலபமாகவும் நீக்கலாம் என உலகம் முழுவதும் பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு, இந்த சிகிச்சை பிரபலம் ஆக்கப்பட்டது. இதற்கான கருவியை ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற பிரபல மருந்து கம்பெனிகள் தயாரித்து விற்றன. தமிழகத்திலும் பெரிய தனியார் மருத்துவமனைகளில் இது புழக்கத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த கருவி கட்டியை சிதறடிக்கும்போது, சில துண்டுகள் அதன் உறிஞ்சு குழாயில் சிக்காமல் விலகி, நாளாவட்டத்தில் உடலின் மற்ற பாகங்களில் குடியேறி கேன்சர் கட்டிகளாக வேகமாக வளர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அரசு கண்டறிந்ததை அடுத்து அதற்கு தடை விதிக்கப்பட்டது. கட்டியை நீக்கும் வரை அது கேன்சர் கட்டியா சாதாரண கட்டியா என்பதை உறுதியாக இனம் காண இயலாது. கட்டியை அகற்றிய பிறகு கருப்பையை நீக்கிவிடும் வழக்கமும் காணப்படுகிறது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உலகம் முழுவதும் தான் விற்ற கருவிகளை திரும்ப பெற தொடங்கியுள்ளது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக இதுவரை எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என ஒரு கார்ப்பரேட் ஆஸ்பிடலின் நிர்வாகி கூறுகிறார்.

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க/கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்


இது தான் இந்த வார ஹாட் டாபிக். பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும் புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள் பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம். இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள் அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம் முதற்க்கொண்டு பார்க்க முடியும்.

அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும் பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம் ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன் அலர்ட் – “Guardian Alert” என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும். இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க இயலும். சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில் இன்னொரு வசதி உண்டு

அது தான் ஃபேக் கால் – “Fake Call” – மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் – உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது – எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் – இது பிள்ளைகள் மற்றும் தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதாமக அமையும். உடனே தயக்கம் என்ன – மொபைல் இல்லாத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த வசதியை இலவசமாய் செய்து கொடுங்கள்

உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மற்ந்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட நீங்கள் கண்கானிக்க முடியும். இது பல மாணவ / மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க முடியும். என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே

Apple Patrons FREE Download Link -https://itunes.apple.com/in/app/bsafe-personal-safety-app/id459709106?mt=8

Android Achubichus FREE Download Link -https://play.google.com/store/apps/details?id=com.bipper.app.bsafe&hl=en