Wednesday, December 11, 2013

ஆண் - பெண் தெரிந்துகொள்ள வேண்டிய பெண்கள் பற்றிய விஷயங்கள்!

பெண், என்னதான் குடும்பத்தின் ஆணிவேராக,மரமாக இருந்தாலும், பிடிமானமாய் அன்பை வேண்டி நிற்பவளாகவே இருக்கிறாள் வாழ்நாள்முழுதும்.. கடக்கும் ஒவ்வொரு நிலையிலும் உடல், மனம் இரண்டிலும் வாதையை சுமந்தவளாக...

பெண்களில் மூன்று வகை

1. வேகமாய் காற்று அடித்தால் கசங்கி விடும் காகிதம் போல் மிக சென்ஸிட்டிவ் வகை பெண்கள்.
2. கொஞ்சம் ஒரு மாதிரி சமாளித்து அடுத்ததை பார்க்கபோகும் பக்குவ நிலை பெண்கள் .
3. அழுத்தமாக எதையும் வெளியே காட்டிகொள்ளாமல் அதே சமயம் உள்ளுக்குள் போட்டு குமைந்து தன்னை தானே வருத்தி கொள்ளும் பெண்கள்.
*இதில் முதல் மற்றும் மூன்றாம் வகை பெண்கள்... சுலபத்தில் மனசோர்வுக்கு ஆளாகிறார்கள். சிறுமி என சுற்றி திரிந்த நிலை திரிந்து, பதின் பருவ பூப்பெய்தும் காலத்தில் இரண்டு முக்கிய காரணங்களால் முதல் முறையாக பெண் மன அழுத்தம் காண்பாள் என்பது மனோத்தத்துவ கூற்று.
1. உதிரபெருக்கு..தன்னில் இருந்து தடுக்க முடியாத, தாங்கி கொள்ளமுடியாத சங்கடமாய் அதை அந்த வயது பெண் உணர்வாள். (கருப்பை விரிந்து வளரும் நிலை காண்பதால் வயிற்றை சுருட்டி சுருட்டி படுபயங்கர வலியை தன்னுள் உணரும் திகைப்பின் பிரதிபலிப்பாக வரக்கூடிய மன அழுத்தம்)
2. தன் சொந்த உடம்பில் அதுவரை கண்டிராத வளர்சிதை மாற்றம்.. மார்பகம் வளரும் நிலையில் நூறில் 60 பெண்கள், பதிமூன்று வயதில் இருந்து பதினாறு வயது-க்குள் (கவனம் சிதறுதல், விரக்தி, பயம், வெறுப்பு, சுயக்கட்டுபாட்டை இழத்தல், அழுது புலம்புதல், அதிதீதமான கோவம் கொள்ளுதல்) போன்ற மன அழுத்தம் காண்பதாகவும் உளவியல் கூற்று. தற்கொலை எண்ணம் முதல் முதலில் தலைதூக்குவதும் இந்த வயதில் தான்.
எனவே தான், வயது வந்த பருவத்தில் தாயன்பும், தக்க வழிகாட்டுதலும், அரவணைப்பும் கட்டாயம் வேண்டும்.. அந்நிலையில் ஒரு பெண் தாயற்று போவது பெருங்கொடுமை..அந்த வயதில் ஏற்படும் மன அழுத்தத்தை கடக்க அம்மாதான் சிறந்த மருந்து.
பதினாறு வயதில் இருந்து திருமணம் ஆகும் வரை மாதவிடாய் உதிரபோக்கை பெண்ணின் மனம் இயல்பாக ஏற்றுகொள்ளும்.. திருமணம், உடலுறவு கண்ட நிலை இதில் மீண்டும் மாதவிடாய் நேரத்தில் மனசோர்வு விழித்துக்கொள்ளும். (அதுவரை தூங்கிகொண்டு இருந்த கருப்பை விழிப்போடு தனக்கான செயல்பாட்டை தொடங்கிவிடுவதாலும், ஹார்மோன் சுரப்பிகள் உள்ளுக்குள் பல்வேறு மாற்றங்களை எற்ப்படுத்தி விடுவதாலும்.)
இங்கே இந்த இடத்தில முன்பு அம்மாவிடம் தேடிய ஆறுதலை கணவனிடம் தேடதொடங்குவாள் பெண். அந்த அளவு நெருக்கத்தை அம்மாவுக்கு பிறகு கணவனிடத்தில் வைப்பவள்.மாதவிடாய் சங்கடங்களை புரிந்து கொள்ளாமல் மேலும் முட்டி மோதி மடை திறப்பு செய்வது போல் கணவன் நடந்து கொண்டால் அங்கே தான் சங்கடம் பிறக்கிறது.
பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு
பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு இதுதான். உதிரபோக்கு என்பது பெண் உடல் சார்ந்த, அவள் மட்டுமே படக்கூடிய விஷயம்.. தனக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது போல பாவிப்பது.
பொதுவாகவே ஆண் தனியானவன் இல்லை, ஏதோ ஒரு கோட்டின்கீழ் உதிரபோக்கு காணும் பெண்ணோடு சார்பு உள்ளவனாகவே இருக்கிறான்.
1. மெனோபாஸ் நிலையை கடக்கும் அன்னையின் மகனாக
2. மாதவிடாய் காணும் மனைவியின் கணவனாக
3. பூப்பெய்திய பெண்ணின் தகப்பனாக
இது குறித்து சரியான புரிதலும், அணுகுமுறையும் ஆண் கொண்டிருத்தல் அவசியம்..இயல்பாய் இருக்கும் பெண்கள் உதிரபோக்கு நேரத்தில் தளர்ந்த மனநிலையில் இருப்பார்கள் என்பது மருத்துவ அறிவியல் உண்மை.
1. தளர்ந்த மனநிலையில் நூறுசதவீத பெண்களும்
2. மன சோர்வில் அறுபத்தைந்து சதவீத பெண்களும்
3. அதையும் தாண்டிய மன அழுத்தத்தில் முப்பது சதவீத பெண்களும்
4. வரம்பு உடைந்த மனபிறழ்வில் பதினைத்து சதவீத பெண்களும் பாதிக்கபடுகிறார்கள்..
மனைவி ஹிஸ்டீரியா நோயாளி போல் நடந்து கொள்கிறாள், கோவத்தில் கத்தி வெடிக்கிறாள், ஓயாமல் சண்டை இடுகிறாள், எரிந்து விழுகிறாள் என்று ஒரு கணவன் நினைப்பானேயானால் முழு தவறும் அவன் பக்கம் இருக்கிறது,மனைவியை ஆறுதல் தோளோடு அணையவில்லை என்பதே பொருள்.
உடலும் மனமும் சோர்ந்து இருக்கும் போது, உறங்கியும் உறங்காத நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது .. ஆழ்மனது விழித்துக்கொண்டு பார்த்தது, நடந்தது, செய்தது என பலவாறு உண்மை போல் ஒரு கற்பனை நிலையை உருவாக்கும். ... உடலும் மனதும் அதீதமாக சோர்ந்து இருக்கும் போது காண்பது இது.
பயங்கரமான கற்பனைகளை அந்த நேரத்தில், மூளை செய்து கொண்டு இருக்கும்... உதாரணம், ஒருவன் அல்லது ஒருத்தி ஆழ்ந்து உறங்கி கொண்டு இருக்கும் போது.. உருவம் இல்லாத எதோ ஒன்று தன்னை தூக்க நிலையில் அழுத்தி, அமிழ்த்தி துன்புறுத்துவதாக தோன்றும், கண்களை விழித்து பார்த்து, பயந்து, அபய குரலுக்காய் வாயை திறந்தால் குரல்வளையை தாண்டி பேச்சு வராதது போலவும்,பக்கத்தில் படுத்து இருபவர்களை எழுப்ப முடியாதது போலவும் தோன்றும்.. அது கனவோ கற்பனையோ அல்ல...முற்றிலும் நிஜம் என்று ஆழ்மனது நம்பும்.. இப்படி தான் பேய், பிசாசு கதைகள் கூட உருவாகியது என்பது உளவியல் கூற்று.
• உதிரபோக்கு நேரங்களில், மனசோர்வு காணும் பெண்கள் இதுமாதிரியான அழ்மனதின் கற்பனைகளால் தானும் துன்புற்று தன்னை சேர்ந்தவர்களையும் குழப்பம் அடைய செய்ய கூடும்.
மாதவிடாய் கால தளர்வுநிலை குறித்து சரியான புரிந்துணர்வுடன் அடுத்து அருமருந்தாக அமைவது கணவனின் நெருக்கம். கணவன் மனைவிக்கிடையே தொடு உணர்தலில் புரிந்துணர்வை சொல்வது அவசியம்.பெரும்பாலும்..பெரும்பான்மை, பெண்களின் கருத்து யாதெனில் பாலுறவு தேவை இருந்தால் ஒழிய கணவன், மனைவியை சாதரணமாக தொடுவதில்லை என்பது.
• மனசோர்வை இயல்பாக கடக்க கணவனின் ஒரு பார்வை, ஒரு செயல் அன்பில் கலந்தது போதும் பெண்ணுக்கு..பொத்தானை அழுத்தி மின்விசிறியை முடுக்குவதில் பொத்தானுக்கும், மின்விசிறிக்கும் இடையில் ஆன செயல்விசை போன்றது தொடுமொழி...
மெனோபாஸ்:
இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவது. கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹர்மோனாகிய ஈஸ்ட்ரோஜன்..படி படியாக குறைந்து சுரப்பது தொடங்கும் நிலை இந்த கட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு அதீதமான உடல் உபாதைகளையும், மூப்பின் இயலாமையையும் சேர்ந்தே சுமக்க வேண்டயவள் ஆகிறாள்... 

ஓடி ஓடி செய்வதற்கு 45 லிருந்து 55 வரையிலான பெண்களுக்கு நிறையவே இருந்திடும். பிள்ளைகள் திருமணம் மற்றும் பல படிநிலைகளை வாதைகளோடு சுமக்க வேண்டிய கட்டத்தில், இருமடங்கு சோர்வு கொள்ளுதல் இயல்பே!
சிறுவயதில் தனக்கென நேரம் ஒதுக்கி தன் உடல்நலம் பேணாத பெண்கள் இந்த வயதை கடக்கும் போது அறுந்து விழுந்த கயிற்று பாலத்தில், பிடிமானம் இல்லாமல் தொக்கி கொண்டு கடப்பதை போல கடினமானது..
நம் பாட்டி மற்றும் அம்மா செய்த வேளையில் பாதியை கூட நம் காலத்தில் செய்ய முடியாத உபாதைகளுக்கு ஆளாவதற்கு முறையற்ற, ஊட்டம்ற்ற அவசரகதி உணவுகலாச்சாரமும் ஒரு காரணி மனரீதியாக மெனோபாஸ் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சல் கூடி எரிந்து விழுந்து பேசுதல், பொருமையின்னமை,காரணமற்று அழத்தொடங்குவது,நிலையான பிடிப்பு தன்மை இல்லாமல் அடிக்கடி மாற்றி கொள்வது,மறதி இன்னும் பொதுவான சொற்களில் அடக்கமுடியாத பலவும் இருக்கலாம்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தரும் இணக்கமும், புரிதலும் மெல்ல மெல்ல தளர்வுநிலை கடந்து தன்னிலை அடைய உந்துசக்தியாக இருக்கும்.. தவிர தியானமும், மூச்சு பயிற்சியும் சிறந்த மருந்து.

1 comment:

  1. நல்லது...நன்றி...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete