Saturday, November 9, 2013

ரிங்டோன் தர்மசங்கடங்கள்

மொபைலில் போடப்பட்டுள்ள தர்ம சங்கடமான ரிங்டோன்கள் குறித்து பாரதி பாஸ்கரும் ராஜாவும் நேற்று ’வாங்க பேசலா’மில் விவாதித்தார்கள். ரிங்டோன்களில் நிறைய அதிர்ச்சிகள், அசூயைகள், அசந்தர்ப்பங்கள் எல்லாம் சொன்னார்கள்.

எனக்கு அசோக் லைலண்டில் நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது.

காந்தி நினைவு நாளன்று காலை பதினோரு மணிக்கு எல்லாரும் ஒரு இடத்தில் கூடி மெளனம் அனுஷ்டித்தோம். மயான அமைதி நிலவிய அந்த இடத்தில் யாரோ ஒருவரின் மொபைல்

“யக்கா… யக்கா…. டொய்யொங்… டொய்யோங்” என்ற போது எல்லோரும் சிரித்து அந்த புனிதமான சூழ்நிலை கேலிக்குள்ளாகியது.

செவன் க்யூசி டூல்ஸ் பயிற்சி வகுப்பு ஒன்று நான் எடுக்க வேண்டியிருக்கும் போது, என்னை அறிமுகப்படுத்திய நிறுவன மேலாளர்,

“ட்யூரிங் ஹிஸ் டென்யூர் இன் லைலண்ட் அஸ் சீனியர் மானேஜர்………” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, வந்திருந்தவர் ஒருவரின் மொபைல்,

“நீ புடுங்கின ஆணி பூராவுமே தேவையில்லாததுதான்” என்றது.

”தே சீம் டு பி நோயிங் மீ பெட்டர்” என்று அசடு வழிய நான் சமாளிக்க வேண்டியிருந்தது.

கொட கொடவென்று தண்ணீரைக் கொட்டுகிற மாதிரியெல்லாம் ரிங்டோன்கள் வைத்திருக்கிறார்கள். பொது மேலாளர் நாயர் பிராஜக்ட் மீட்டிங் ஒன்று போட்டு, இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். லஞ்ச் நேரம் வேறு தப்பிப் போயிற்று. நண்பர் ஒருவர் திரும்பத் திரும்ப ’வி வில் டேக் அ ப்ரேக்’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிரயோஜனமில்லை.

நண்பர் தாங்க முடியாமல் மேற்சொன்ன ரிங்டோனைப் போட்டு விட்டார். தண்ணீர் பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டார்.

“மை காட், இஃப் இட் இஸ் திஸ் சீரியஸ் யு குட் ஹேவ் டோல்ட் ஏர்லியர்” என்றார் நாயர், நண்பரைப் பதட்டமாக மேலும் கீழும் பார்த்தபடி!

மூன்று நாட்களுக்கு முன் மதுரையில் ஃபைவ் எஸ் வகுப்பில்,

“ஹெள இஸ் இட் கோயிங்?” என்று கேட்டுவிட்டு ஒரு நம்பிக்கையான பார்வை பார்த்தேன், அப்போது கேட்ட ரிங்டோன்,

“வொய் பிளட்? சேம் பிளட்!”

பெற்றோரின் மொபைலில் பிள்ளைகள் விளையாடி, இசகு பிசகான ரிங்டோன்களைப் போட்டு வைப்பது இசைகேடான சம்பவங்களை அரங்கேற்றும்.

ஆடிட் குளோசிங் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஆடிட்டர்கள் அவர்களது அப்சர்வேஷன்களைச் சொல்லி முடித்தார்கள்.

“ஐ வுட் லைக் டு ஷேர் அன் இம்பார்டண்ட் பாயிண்ட்” என்று எக்சிக்யூட்டிவ் டைரக்டர் மைக் அருகே வந்தார். துரதிஷ்டவசமாக அவரது மொபைலில் அழைப்பு வந்து தொலைத்தது. மைக் வழியாக ஹால் முழுக்கக் கேட்ட பாட்டு,

“என் உச்சி மண்டைல சொர்ருங்குது”

அடிக்கடி அழைப்பு வந்து தொந்தரவு செய்கிறார்கள் என்று வில்லங்கமான ஒரு கால் ட்யூன் போட்டு வைத்திருக்கிறார் என் நண்பர் ஒருவர். அவருக்கு ஃபோன் செய்தால் உங்களுக்குக் கேட்கும் ஒலி,

“தி நம்பர் யு ஆர் டிரையிங் டு கால் டஸ் நாட் எக்சிஸ்ட். நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் உபயோகத்தில் இல்லை”

சமய சந்தர்ப்பம் தெரியாமல் சிலர் ஸ்பீக்கர் மோடில் போட்டு விடுகிறார்கள். நண்பர் சுரேஷாவுடன் நான் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்த போது அவருக்கு ஒரு கால் வந்தது. பெயிண்ட் ஷேட் தகடுகளை எனக்குக் காட்டிக் கொண்டிருந்ததால் ஃபோனை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு,

“சொல்லு” என்றார்.

“அந்த கேனக்……. போய்ட்டானா இல்ல இன்னும் உங்க தாலியை அறுத்துகிட்டு இருக்கானா?” என்றார் எதிர்முனையில் பேசியவர்.

No comments:

Post a Comment