Friday, October 4, 2013

இன்று போய் நாளை வா vs கண்ணா லட்டு தின்ன ஆசையா


 தமிழ் சினிமா இன்று பல துறைகளில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. நடிகர், நடிகையர்களில் இருந்து, தொழில் நுட்பங்கள் வரைக்கும் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆனாலும், முந்தய தமிழ் சினிமாவில் இருந்த சில அடிப்படை விஷயங்கள் இன்று கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை. அதில் மிக முக்கியமானது, கதை இலாகாவும், கதாசிரியர்களும் தான். பழைய ஈஸ்டர் மேன் கலர் படங்களின் டைட்டில் காட்சிகளில் கண்டிப்பாக 'கதை இலாகா' என்ற ஒரு கார்ட் போடுவார்கள். இல்லையென்றால் 'கதை' என்று ஒரு டைட்டிலில் கண்டிப்பாக ஏதாவது கதாசிரியரின் பெயர் வரும். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. புகழ் பெற்ற இயக்குனர்கள் பலரும், தாங்கள் வாங்கும் 'கோடிகளுக்கு' எந்த பங்கமும் வரக்கூடாது என்பதற்காகவே 'கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்' என அனைத்தும் அவர்களே செய்கிறார்கள். இது அனைத்தும் அவர்களுக்கு வருமா? என்று கேட்டால், சத்தியமாக 'இல்லை' என்பதே உண்மை. இந்த அனைத்து இலாகாகளிலும் கை தேர்ந்தவர்கள் மிகவும் சொற்பம். அப்படி சொற்பமானவர்களில் ஒருவர் தான் இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள்.

ஒரு தேர்ந்த இயக்குனருக்கு தெரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம், ரசிகனின் நாடித் துடிப்பை அறிந்து வைத்திருப்பது தான். எந்த காட்சியில் எது தேவை, அது எவ்வளவு தேவை, பார்வையாளன் எதை ரசிப்பான், எப்போது ரசிப்பான் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது கண்டிப்பாக பாக்யராஜ்க்கு தெரிந்திருக்கிறது என்பது என்னவோ உண்மை. இவர் இயக்கிய பல படங்களே இதற்க்கு சாட்சி. ஒரு சாதாரண கதையை வைத்து, அதற்க்கு தோதான திரைக்கதையை பூட்டி, இன்றைக்கும் அந்த திரைப்படங்களை பற்றி பேச வைத்த திறமை கண்டிப்பாக பாக்யராஜ்க்கு உண்டு என்பதை யாரால் மறுக்க முடியும்? இவர் இயக்கிய பல படங்களில் 'இன்று போய் நாளை வா' படம் இன்றைக்கும் பலரால் ரசித்துப் பார்க்கப்படும் 'Evergreen Entertainment Cinema'.

இளமை பருவம் என்பது ஒரு இனிய பருவம். ஆண், பெண் என்று இருவரின் வாழ்க்கையிலும் சரி, யாராலுமே மறக்கமுடியாத ஒரு வசந்த கால பருவம். அந்த பருவத்தின் துருதுருப்பினால் வரும் காதல் தரும் கதகதப்பும், துடிதுடிப்பும் தரும் சுகம் இருக்கே, உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த போதை மருந்தும் அதற்க்கு ஈடாகாது. அப்படி ஒரு போதை தரும் அந்த சுகம். இதை சரியாக கையாள்பவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பத்திரமாக செல்கிறார்கள். இதில் எக்குதப்பாக மாட்டிக் கொள்பவர்கள் ஒரு சில அனுபவங்களோடு அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள். மொத்தத்தில், வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டத்திற்கு நம்மை தயார்படுத்துவது இந்த இளமை பருவம் மட்டும் தான். என் நெருங்கிய நண்பன், என் வீட்டின் எதிர் வீட்டு பெண்ணை காதலித்தான். அவளும் என் நண்பனை காதலித்தாள். அந்த காதலின் முடிவு என்ன என்பது இங்கே தேவையற்றது. நான் கேள்விப்பட்ட பல காதல் கதைகளின் களங்கள் தோன்றியது எதிர் வீடு, பக்கத்துக்கு வீடு, மாடி வீடு மற்றும் கீழ்த்தள வீடுகள் தான். இந்த படமும் நமக்கு நெருக்கமானதற்க்கு இந்த படத்தில் வரும் எதிர் வீடும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.

பழனிச்சாமி, ராஜேந்திரன் & வெங்கட் மூவரும் நெருங்கிய நண்பர்கள். பழனிச்சாமியின் எதிர்வீட்டிற்கு குடிவருகிறாள் ஜெயா என்ற பருவப் பெண். அந்த பெண்ணை இந்த மூவருமே காதலிக்கிறார்கள். இந்த மூவரில் யாரை ஜெயா காதலித்தாள் என்பதை மிக நகைச்சுவை திரைக்கதையோடு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த 'இன்று போய் நாளை வா' படம்.

படத்தில் நடித்த கதாநாயகன், கதாநாயகியை பற்றி பிறகு பார்ப்போம். படத்தில் சில முக்கியமான கதாபாத்திரங்களை பற்றி இப்போது பார்க்கலாம். 'காமா பயில்வானின் சிஷ்யன் சோமா பயில்வானாக' கல்லாபெட்டி சிங்காரம். 'Yes Yes, Come on Come on, Quick Quick Quick' என்று இவர் பேசும் அந்த பட்லர் இங்கிலீஷ் சூப்பர். தன் மாணவ சிஷ்யன் தன்னை அடித்ததை பற்றி சொல்லும்போது, 'அடின்னாலும் அடி, வரலாறு காணாத அடி', 'அந்த ராஜேந்திரனை தூண்ல வச்சி 'சொத் சொத் சொத்ன்னு' முட்டும்போதே தெரியும், இப்படி எங்கயாவது போய் மாட்டுவான்னு' என்று சொல்லும் 'Dialogue Delivery Style' மிகவும் அருமை. 'Ek Gaav Mein Ek Kisan Raghu Thatha', இதை யாராவது மறக்க முடியுமா? இதன் அர்த்தம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ, இந்த ஹிந்தி வார்த்தைகள் மட்டும் நம்மால் மறக்கவே முடியாது. படத்தின் சின்ன கதாபாத்திரங்களில் இருந்து முக்கிய கதாபாத்திரங்கள் வரை அனைவருமே சிறப்பாக நடித்திருகிறார்கள்.

படத்தில் இயக்குனர் பாக்யராஜை விட, நடிகர் பாக்யராஜ்க்கு வேலை கம்மி. ஆனாலும் நடிகர் பாக்யராஜ் நம்மை அழகாகவே கவர்கிறார். குடுகுடுப்புக்காரன் மூலமாக 'கருப்பு சட்டை, வெள்ளை பாண்ட்' என்று ரெடியாக இருக்கும் சமயத்தில் ராதிகா அவரை வெறுப்பேற்றும் விதமாக 'வெள்ளை சட்டை, கருப்பு பாண்ட்' என்று மாற்றி சொன்ன பிறகு குழம்பித் தவிப்பதும், காதல் தோல்வி காரணமாக ஒரு போர்வையை போற்றிக்கொண்டு சிகரெட் துண்டுகளால் 'ஜெயா' என்று எழுதி தேவதாஸ் Effect கொடுத்து, அதை காதலி பார்த்ததும் மறைக்கப் பார்ப்பது என்று நடிகர் பாக்யராஜ் தனியாகவே மிளிர்கிறார். கதாநாயகி ஜெயாவாக ராதிகா. தன்னுடைய 'கீச்சு' குரலால் நம் அனைவரையும் வசீகரிக்கிறார் (இந்த படத்தில் நடிக்கும்போது ராதிகாவின் வயது 18). பாக்யராஜின் நண்பர்களாக வரும் பழனிச்சாமியும் ராம்லியும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். அதுவும் பழனிச்சாமி, ராதிகாவின் 'முன்னாள் காதல் கடித அனுபவத்தை' கேட்ட பின்பு ஜெயகாந்தனின் புத்தகத்தின் மூலமாக ராதிகாவிற்கு புரியவைத்து, தனக்கு ராதிகாவிடமிருந்து 'செருப்படி' விழாது என்ற நம்பிக்கை வந்தவுடன் காதல் கடிதம் கொடுப்பது, பார்வையாளர்களிடமிருந்து அப்ளாஸ் அள்ளும் அருமையான காட்சி.

படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரே ட்ராக்கில் பயணிக்கும் படம், கிளைமாக்ஸ் வந்ததும் கொஞ்சம் திசை மாறியது போல தோன்றுகிறது என்பது என்னவோ உண்மை. ஆனாலும் கிளைமாக்ஸ்சை நம்மால் ரசிக்காமல் இருக்கமுடியாது. 'அரேபியா எங்கிருக்கிறது?' என்ற கேள்விக்கு 'வண்டலூர் தாண்டுனா சுங்குவார்சத்திரம். அங்கே போய் விசாரிச்சா அரேபியா எங்க இருக்குதுன்னு சொல்லிடுவாங்க' என்ற பதில் சரியான காமெடி. ஒரு பெண்ணிற்க்காக நண்பர்கள் மூவரும் பெண்ணின் விட்டில் இருப்பவர்களின் மூலமாக உள்ளே போவது, அவளுக்காக எவ்வளவோ அடிகள் வாங்குவது என்று படம் பூராவுமே ஒரே 'காமெடி களேபரம்' தான். இந்த படத்தில் 'Director's Touch' காட்சிகள் ஏராளம். இதில் எனக்கு பிடித்தது, ராதிகாவின் வீட்டை அறிவதற்காக, ராதிகாவின் வயதையும், பெயரையும் அங்குள்ள இளைஞர்களிடம் சொல்லி, வீட்டு விலாசத்தை அறிந்துகொள்ளும் காட்சி, செம. உண்மையில் இந்த காட்சி, ஒரு Psychological Scene'. இது தான் நான் பாக்யராஜிடம் வியக்கும் ஒரு விஷயம்.

இசை ஞானியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஆனால், பின்னணி இசை சூப்பர். குறிப்பாக ராதிகாவின் அறிமுகக்காட்சியில் கொடுக்கப்படும் BGM, கலக்கல். படத்தை தயாரித்தது, 'Rishad Creations' V.F.Irani. கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் - திரு.கே.பாக்யராஜ். இந்த படத்தின் ஷூட்டிங் இடம் பெற்ற இடம், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வெள்ளாளர் தெரு & வேட்டைக்காரன் சந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றது. அதுவும் எப்படி தெரியுமா? பாக்யராஜ் மற்றும் ராதிகா குடியிருப்பதாக காட்டப்படும் வீடுகளில் காலை முதல் மாலை வரை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். படத்திற்கு தேவையானவற்றை மட்டும் அந்த வீட்டில் மாற்றி விட்டு, மற்றபடி அந்த வீட்டில் இருக்கும் அனைத்து பொருள்களையும் படத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

இந்த படம் 27 மார்ச் 1981 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் திரைக்கதையை பாக்யராஜ் ஒரே ராத்திரியில் எழுதி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த படத்தை ரீமேக் என்ற பெயரில் கெ(எ)டுத்து, அதுவும் 'நாங்க சொந்தமா யோசிச்சி எடுத்தோமாகும்' என்று வாய் கூசாமல் சொல்பவர்களை 'செருப்பாலே அடிக்கவேண்டும்' என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது. Because, ஒரு பைத்தியக்காரன் வேடத்திற்கு நடிக்க தெரிந்த ஒரு நடிகரை நடிக்க வைத்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு 'பைத்தியக்காரனையே' நடிக்க வைப்பதில் என்ன நியாயம்?...

அதை இங்கே பார்ப்போம்.....

ஒரு ஊர்ல ஒரு ஃபிகரும் அவரது குடும்பமும் புதிதாகக் குடியேற, அந்த ஃபிகரை மடக்க மூன்று ஹீரோக்களுக்கு வரும் ஆசையும் அதற்கு அவர்கள் செய்யும் அழிச்சாட்டியமுமே கதை ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள். ’கல்யாணம் டூ கருமாதி’காண்ட்ராக்டராக சந்தானமும், வயதாகியும் யூத்தாக வெளியில் ஜொள்ளிக்கொண்டு திரியும் பவர் ஸ்டாரும், மூவரில் கொஞ்சம் சின்சியர் லவ்வராக(ஹீரோவாம்!) அறிமுக நடிகர் சேதுவும் ஊரில் ஃபிகர் கிடைக்காமல் நண்பர்களாக அலைந்து கொண்டிருப்பதைச் சொல்லி முடித்ததும் ஹீரோயின் அறிமுகம்.

அந்த ஃபிகரை கிடைக்க வேண்டும் எனும் ஆவலில் மூவரும் ஆளுக்கொரு ரூட்டை பிடிக்கிறார்கள். சேது ஹீரோயின் அம்மாவிற்கு எடுபிடி வேலைகள் செய்ய,சந்தானம் ஹீரோயின் சித்தப்பா (வி-தா-வ-கணேஷ்)விடம் பாடக சிஷ்யனாய்ச் சேர, பவர் ஸ்டார் ஹீரோயின் அப்பாவான மாஸ்டர் சிவசங்கரனிடம் நாட்டியப் பேரொளியாக(!) களமிறங்குகிறார்கள். சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் குரு-க்களிடம் செய்யும் காமெடி அதகளம்.

ஒவ்வொரு சீனும் சிரிக்கும்படி இருக்க வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சீன்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

சந்தானம் படத்தின் ஹீரோவாக ஒருவர் இருந்தாலும், மெயின் கேரக்டராக சந்தானம் கலக்குகிறார். ‘மார்கழிக் குளிர்ல ரொம்ப நேரம் குனிஞ்சு நிற்காத’ என்பதில் ஆரம்பித்து ‘ நைட் தூக்கம் வர்லையா? ஏன், மத்தியானமே தூங்கிட்டயா?’ என கலாய்க்கும் வசனங்களால் வழக்கம்போல் சூப்பர். ஹீரோயினைக் கரெக்ட் பண்ண, கணேஷிடம் அவர் படும்பாடு சிரிப்பை வரவழைக்கிறது. அதுவும், பானைக்குள் அவர் உட்கார்ந்திருக்கும் சீன், கலக்கல்.

பவர் ஸ்டார் சீனிவாசன் அறிமுகக் காட்சியிலேயே பள்ளி மாணவியை லவ்வ, அந்தப் பெண் ‘உங்களை என் அப்பா கல்யாண ஃபோட்டோ பார்த்திருக்கேன்..என் அப்பா ஃப்ரெண்ட் தானே நீங்க?’ என்று கேவலப்படுத்த, ரகளையாக அறிமுகம் ஆகிறார் பவர் ஸ்டார். பல இடங்களில் அபாரமான பாடி லாங்வேஜ்களால் கலக்குகிறார். வாயை வைக்கும் விதம், உடலை அசைக்கும் பாங்கு என பவர் ஸ்டார், ஒரு முழு காமெடியனாக இதில் அவதாரம் எடுத்திருக்கிறார். இனி ஹீரோவாக நடிப்பது போன்ற காமெடிகளைப் பண்ணுவதை விட்டுவிட்டு, காமெடியனாக நடிக்க ஆரம்பிக்கலாம்.பல சீன்களில், இவரது பிரசன்ஸே சிரிப்பை வரவழைக்கிறது.

அறிமுக நடிகர் சேது என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். நடிப்பு, காமெடி என எல்லாவற்றியும் நன்றாகவே பண்ணியிருக்கிறார்.நல்ல படம் அமைந்தால், மேலே வரலாம். ஹீரோயினாக விஷாகா சிங். பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கிறார். (நான் சொன்னது, என் பக்கத்து வீட்டு பெண் போல..அவ்வ்!). ஆனாலும் பவருக்கு ஜோடியாக ஆட, அனுஷ்காவா வருவார்? ஏதோ கிடைத்தவரை ஓகே என இவரைப் போட்டிருப்பார்கள் போல..லாங் ஷாட்டில் குமரியாகவும், க்ளோஷப்பில்...சரி, வேணாம்..பாவம்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- ’இன்று போய் நாளை வா’படத்துடன் ஒப்பிடும்போது, அதில் இருந்த உயிர்ப்பு இதில் இல்லை.

- காமெடி..காமெடி என்று போகும்போது, ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது.

- தேவையில்லாமல் வரும் பாடல்கள். தமிழ்ப்படம் என்றால், இத்தனை பாட்டுகள் அவசியம் வைத்தே ஆக வேண்டுமா என்ன?

- தனித்தனியாக காட்சிகள் களை கட்டினாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏதோ ஒரு வெறுமை தெரிகிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- சந்தானம்

- பவர் ஸ்டார்

- காமெடி..காமெடி..காமெடி

- எல்லா நடிகர்களிடமிருந்தும், நகைச்சுவையான நடிப்பை வாங்கிய இயக்குநர் மணிகண்டனின் திறமை

அப்புறம் திரைக்கதைத் திலகம் பாக்கியராஜ், அந்த காலகட்டது ஆண்களின் உணர்வை துல்லியமாகப் பதிவு செய்த அளவிற்கு இந்தப் படம் செய்யவில்லை. ராதிகாவிடம் இருந்த வெகுளித்தனம், இந்த ஹீரோயினிடம் மிஸ்ஸிங். மொத்தத்தில் ஒரிஜினலுடன் ஒப்பிடாவிட்டால், ரசிக்கலாம், காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

No comments:

Post a Comment