Sunday, October 6, 2013

மீண்டும் ‘மருதநாயகம்’??

15 ஆண்டுகளுக்கு முன் உலக நாயகன் கமல்ஹாஸனால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படத்தை மீண்டும் தூசு தட்டப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் ‘மருதநாயகம்’. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய சரித்திர திரைப்படம் இது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக அறிவித்து, பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திரைப்படம் இது. சிவாஜி கணேசன், ரஜினி, இளையராஜா என திரையுலகமே இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டது.

1997ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு 50 கோடி ரூபா தேவைப்பட்டது. 1997இல் இது மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம். நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திரைப்படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய வெளிநாட்டவர்கள், நம்பிக்கையின்றி கைவிரித்துவிட்டதாகவும், தானே அந்த திரைப்படத்தை தயாரிக்கும் அளவுக்கு சூழல் உருவானதும் மீண்டும் திரைப்படத்தைத் தொடங்குவேன் என்றும் கமல் கூறியிருந்தார்.

தற்போது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார். விஸ்வரூபம் வெற்றியும், வெளிநாடுகளில் அந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பும் மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது.

அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்த திரைப்படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்களாம். எனவே, லிங்குசாமியின் திரைப்படம் முடிந்த பிறகு இந்த மருதநாயகத்தை மீண்டும் கையிலெடுப்பார் கமல் என்கிறார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு அடிக்கடி கிளம்புவது வழக்கம். கமலும் இதை மறுப்பதில்லை. கடந்த முறை இந்த திரைப்படத்தில் ரஜினி நடிப்பார், கமல் இயக்குவார் என்றெல்லாம் பேச்சு கிளம்பியது. பின்னர் அதை கமலே மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment