Tuesday, October 29, 2013

சச்சின் டெண்டுல்கர்… சில சுவாரஸ்ய செய்திகள்!

சச்சின்… 

இந்திய கிரிக்கெட் அணியின் அஸ்திவாரம். சாதனைகளின் சிகரம்! இந்திய நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினர். முக்கியமாக, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அடையாளம். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200வது டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். 

அந்தப் போட்டியோடு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவரது ஓய்வு அறிவிப்பு, பல கிரிக்கெட் ரசிகர்களைக் கலங்க வைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சச்சின் குறித்த சில சுவாரஸ்யமான செய்திகள் இங்கே…

இந்திய இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் நினைவாக, சச்சினின் தந்தை அந்தப் பெயரைச் சூட்டினார்.

டென்னிஸ் விளையாட்டு வீரர் ‘ஜான் மெக்என்ரோ’தான் சச்சினுக்கு ஆதர்சம். ஆரம்ப காலத்தில் அவரைப் போலவே நீளமாக முடிவளர்த்து, அதன் நுனியில் ரப்பர் பேண்ட் ஒன்றைப் போட்டிருப்பார் சச்சின். அவருடைய நண்பர்கள், அவரை ‘மெக்என்ரோ’ என்றுதான் அழைப்பார்கள். 

டென்னிஸ் விளையாட்டு வீரார்களான போரிஸ் பெக்கர், பீட் சாம்ப்ராஸ், ரோஜர் ஃபெடரர் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் டீகோ மாரடோனா ஆகியோரை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஃபாஸ்ட் பவுலராக விரும்பினார். அதற்காக ‘எம்.ஆர்.எஃப். பேஸ் அகாடமி’யில் சேர்ந்தார். ஆனால், தலைமை பயிற்சியாளர் (Coach) அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தச் சொன்னதன் பேரில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

கோகுலாஷ்டமி, ரக்‌ஷ பந்தனா, ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் மிக அதிக ரன்களைக் குவித்திருக்கிறார்.

வினோத் காம்ப்ளி, சலீல் அங்கோலா போன்ற சக கிரிக்கெட் தோழர்களுடன் ‘உங்களைவிட என்னால் அதிகம் வடா-பாவ் சாப்பிட முடியும்’ (I-can-eat-more-Vada-pavs-than-you) போட்டியில் பங்கேற்பது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
கடல் உணவுகள் சச்சினுக்கு மிகவும் பிடித்தவை. சொந்தமாக ஒரு ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவதை மிகவும் விரும்புவார்.
இந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரையும் இங்கிலாந்து ராக் இசைக்குழு ‘டைர் ஸ்ட்ரெயிட்ஸ்’ம் பிடித்தவர்கள். சச்சினின் பெர்சனல் இசைத் தொகுப்புகளில் இவற்றுக்கு நிரந்தர இடம் உண்டு.

பிள்ளையாரின் தீவிர பக்தர். அதிகாலை நேரங்களில் அடிக்கடி சித்திவிநாயகர் கோயிலுக்குப் போகும் பழக்கமும் உண்டு.

விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார்.

குளூகோஸ் பிஸ்கெட்டை டீயில் போட்டு ஸ்பூனால் ருசித்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு.

இருகைப் பழக்கம் உடையவர். பேட்டிங் செய்வது வலது கையில். ஆட்டோகிராப் போடுவதும் சாப்பிடுவதும் இடது கையில்.

ஆரம்ப நாட்களில் தன் கிரிக்கெட் பொருட்களுடன் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒவ்வொருமுறை அவுட்டாகி வெளியேறும் தருணங்களையும் சரியாக நினைவில் வைத்திருப்பவர். எந்த பவுலரால் அவுட் ஆக்கப்பட்டோம் என்பதையும் துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பவர்.

கொசு, ஈ போன்ற பூச்சிகளை அடிக்கும் சாதனத்தால் கிரிக்கெட் பந்தை சச்சின் அடித்து நொறுக்குவது போல ஒரு குளிர்பான விளம்பரம் வந்தது. 

அதற்காகவே பள்ளிக்குப் போக மறுத்தார். படத்தை உருவாக்கிய பிரகலாத் காக்கரிடம், ‘இந்த விளம்பரம் விளையாட்டைவிட என்னைப் பெரிய ஆளாகக் காட்டுகிறது’ என்று முறையிட்டார். பிறகு, அந்த விளம்பரம் மாற்றி அமைக்கப்பட்டது, கிரிக்கெட் ஸ்டம்பால் அவர் பந்தை அடிப்பது போல. 

கிடைக்கிற மிகக் குறைந்த ஓய்வு நேரங்களில் தன்னுடைய பகட்டான காரில் மும்பையை வலம் வருவது அவருடைய பொழுதுபோக்கு.

கோடைவிடுமுறையில், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் மரத்தில் இருந்து விழுந்துவிட்டார் சச்சின். அப்போது ‘கெய்டு’ என்ற இந்திப்படம் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கோபமடைந்த சச்சினின் 

சகோதரரும் வழிகாட்டியுமான அஜீத், கிரிக்கெட் கோச்சிங் கிளாஸுக்கு அவர் போகக்கூடாது என்று பனிஷ்மென்ட் கொடுத்தார்.

1992. நான்கு மாதங்கள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி, பல சாதனைகளை செய்துவிட்டு திரும்பியவர் மும்பை, கீர்த்தி காலேஜுக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

மிக அதிகமான ரன்களை குவித்திருந்தாலும் 1996ம் ஆண்டு வரை அவருக்கும் பேட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. அதற்குப் பிறகுதான் ஒரு புகழ்பெற்ற டயர் தயாரிக்கும் நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

அவரை அவுட்டாக்கும் பவுலருக்கு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுப்பதை அவருடைய பயிற்சியாளர்கள் சர்தாஷ்ரமும் ராமாகாந்த் ஆச்ரேக்கரும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சச்சின் அவுட் ஆகவில்லை என்றால் அது அவருக்கே உரித்தாகிவிடும். அந்த வகையில் பல நாணயங்களை சேகரித்து வைத்திருக்கிறார் சச்சின்.

1988ல் பிராபோர்னேவில் நடந்த போட்டியில், பாகிஸ்தானுக்காக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் ஃபீல்டிங் செய்திருக்கிறார்.
1987ல் வாங்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ஆக பணியாற்றியிருக்கிறார்.
அவர் தோன்றிய முதல் விளம்பரப்படம், ‘பிளாஸ்டர்’(Plaster) க்காக.

பள்ளியில் படிக்கும் நாளில், அவருடைய சுருள் சுருளான நீளமான முடியைப் பார்த்து, நண்பர் அதுல் ரானடே கூட அவரைப் பெண் என்று தவறாக நினைத்த சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.

‘தீவார்’, ‘ஜாஞ்சீர்’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, அமிதாப்பச்சனின் தீவிர ரசிகராகிப் போனார் சச்சின்.

மழைக்கால ஓய்வு நாட்களில் டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடுவது சச்சினுக்கு ரொம்பப் பிடிக்கும்.

1988. ஹாரிஸ் ஷீல்டு போட்டி. சச்சினும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்த போட்டி. கோச்சின் உதவியாளர் ‘டிக்ளேர்’ செய்ய முயற்சிக்க, அதைத் தவிர்த்து, தொடர்ந்து விளையாடுவதற்காக, பாட்டுப் பாடி, விசிலடித்தார் சச்சின்.

சச்சினுக்கு சர்வதேச தரத்திலான முதல் ஜோடி கிரிக்கெட் ஷூவை வாங்கிக் கொடுத்தவர், சக கிரிக்கெட் தோழர் ப்ரவீன் ஆம்ரே.

பள்ளி நாட்களில் கொஞ்சம் அடாவடியான ஆளாக இருந்தாலும், சச்சினுக்கு பூனைகளையும் நாய்களையும் ரொம்பப் பிடிக்கும். அவருடைய முதல் கேப்டனான சுனில் ஹார்ஷே, அவருக்கு சண்டை பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். அதன் காரணமாகவே, யாரையாவது அறிமுகப்படுத்தும்போது சச்சினின் முதல் ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்… ‘‘நான் இவரை தோற்கடிச்சிடுவேனா?’’.

கிழக்கு பாந்தராவில், அவருடைய சாஹித்ய சாஹ்வாஸ் அபார்ட்மெண்ட்டுக்கு அருகே ஓடும் சிறிய ஓடையில், தவளைக் குட்டிகளையும் மீன் குஞ்சுகளையும் பிடிப்பது அவர் வழக்கம்.
அம்மாவுக்காக ஒருமுறை ‘பாஜி’ உணவு வகையைச் செய்து கொடுத்திருக்கிறார்.

அவரை வளர்த்த செவிலித்தாய் இப்போது, ‘சச்சுச்சி பாய்’ என்று சச்சினின் உலக அளவிலான ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அவருடைய விளையாட்டுத் தோழன் ரமேஷ் பார்தே. அவர் இருந்த காலனி வாட்ச்மேனின் மகன். சச்சின் அவரிடம், தண்ணீரில் நனைத்து ஒரு ரப்பர் பந்தை வீசச் சொல்வாராம். சச்சினின் பேட்டின் நடுவில் பட்டிருக்கும் ஈர அடையாளத்தை வைத்து, அவர் சரியாக பந்தை அடித்திருக்கிறாரா என்று அறிந்து கொள்வாராம் ரமேஷ்.

சச்சின் கொஞ்சம் வேடிக்கையான ஆள். ஒருமுறை சவுரவ் கங்குலியின் அறையில் ஒரு ஹோஸ் பைப்பை வைத்து, குழாயைத் திறந்து விட்டுவிட்டார். எழுந்து கொண்ட கங்குலி, அறை தண்ணீரில் மிதப்பதைப் பார்த்தார். அதிலிருந்து, சச்சின், கங்குலியை ‘பாபு மோஷல்’ என்று அழைப்பார். கங்குலி, சச்சினை ‘சோட்டா பாபு’ என்று அழைப்பார்.

ஆல்ரவுண்டர் கபில் தேவின் 100வது டெஸ்ட் போட்டியில்தான் சச்சினின் முதல் டெஸ்ட் அரங்கேற்றமானது.

சச்சின் தன்னுடைய டெஸ்ட் போட்டியின் முதல் பந்தை பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸிடம் இருந்து எதிர்கொண்டார். அதுதான் வாக்கர் யூனுஸுக்கும் முதல் அரங்கேற்றம்.

ஒருநாள் போட்டி விளையாட்டுகளில், தன்னுடைய முதல் 200 ரன்களை சச்சின் குவித்தது பிப்ரவரி 24, 2010 அன்று. அவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்களைக் குவித்து 22 வருடங்கள் கழித்து நிகழ்ந்த நிகழ்வு அது.

சுனில் கவாஸ்கரின் சாதனையை, அவர் நிகழ்த்திய அதே டிசம்பர் 10ம் தேதி சமன் செய்தார் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டியில் 34வது சதம். 2004ம் ஆண்டு டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் சதம். 2005ம் ஆண்டு, கோட்லாவில் நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக சதம்!

இந்தோரில் 15 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி. நட்ட நடு ராத்திரி. சச்சினால் தூங்க முடியவில்லை. எழுந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்தத் தளம் முழுக்க மரப்பலகையால் ஆனது. 

அவருடைய பேட்டில் இருந்து எழுந்த சத்தம் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தது. ஹோட்டல் மேனேஜர், பயிற்சியாளர் வாசு பரஞ்பேயிடம் புகார் கொடுத்தார். பயிற்சியாளர், ‘போ! அவர் மேலே பந்து வீசு!’ என்று சொன்னார்.

No comments:

Post a Comment