Monday, October 7, 2013

இயற்கை நடிப்பில் முத்திரை பதித்த முத்துராமன்

தெளிவாக வசனம் பேசி, இயற்கையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் முத்துராமன். எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடித்து வந்த முத்துராமன், 1959-ல் பட உலகில் நுழைந்தார். "நாலுவேலி நிலம்", "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" ஆகிய படங்களில் நடித்தார். "சகோதரி" என்ற படத்தில் பாலாஜி- தேவிகாவுடன் நடித்தார்.

எம்.ஜி.ஆர். -சிவாஜியுடன் எம்.ஜி.ஆருடன் "அரசிளங் குமரி" படத்தில் நடித்தார். இது 1961-ல் வெளிவந்தது. `படிக்காத மேதை', `பார் மகளே பார்', `நெஞ்சிருக்கும் வரை' ஆகியவை உள்பட பல படங்களில் சிவாஜிகணேசனுடன் நடித்தார். நெஞ்சில் ஓர் ஆலயம் முத்துராமனுக்கு புகழ் தேடித்தந்த படம் "நெஞ்சில் ஓர் ஆலயம்." ஸ்ரீதர் டைரக்ஷனில் வெளி வந்த இந்தப்படம் ஒரு காவியம் போன்றது. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட முத்துராமன், தான் இறப்பது உறுதி என்று அறிந்ததும், தன் மனைவியை (தேவிகா) அவருடைய பழைய காதலனுக்கே மணம் செய்து வைக்க முடிவு எடுப்பார்.

உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த இந்தப்படத்தில், முத்துராமன் வெகு சிறப்பாக நடித்திருந்தார். படம் வெள்ளி விழா கண்டது. காதலிக்க நேரமில்லை இதன்பின் ஸ்ரீதர் கலரில் எடுத்த "காதலிக்க நேரமில்லை" முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடித்தார், முத்துராமன். இந்தப்படத்தில்தான் ரவிச்சந்திரன் அறிமுகம் ஆனார். கதை, பாடல், நடிப்பு எல்லாமே சிறப்பாக இருந்ததால் படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் "போலீஸ்காரன் மகள்", "சித்தி", "பாமா விஜயம்", "கண்ணே பாப்பா", "வாழையடி வாழை", "மனம் ஒரு குரங்கு" முதலிய படங்களில் நடித்தார்.

ஊட்டி சினிமா படப்பிடிப்பு 1980, 81-ம் ஆண்டுகளில் முத்துராமனுக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தன. பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திருப்பூர் மணி தயாரித்த "ஆயிரம் முத்தங்கள்" என்ற படத்தில் முத்துராமன், சிவகுமார், நடிகை ராதா ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்புறப் படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தினார்கள். இதற்காக நடிகர் - நடிகைகள் ஊட்டிக்கு சென்று அங்குள்ள `ஜிம்கானா கிளப்'பில் தங்கி இருந்தார்கள்.

நடிகர் முத்துராமன் மைசூரில் `போக்கிரிராஜா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு 15-10-1981 அன்று ஊட்டிக்கு சென்றார். மயங்கி விழுந்தார் முத்துராமன் தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி 16-10-1981 காலை 7-15 மணிக்கு அரைக்கால் சட்டை பனியன் அணிந்து ஜிம்கானா கிளப் முன்பு உடற்பயிற்சி செய்தார். பிறகு எதிரே உள்ள ரோட்டில் சிறிது தூரம் ஓடினார். அரை பர்லாங் தூரம் ஓடியதும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவர் விழுந்த இடத்தின் அருகே கமலஹாசன் நடித்த "மூன்றாம்பிறை" படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. முத்துராமன் கீழே விழுவதைப் பார்த்ததும் "மூன்றாம்பிறை" படப்பிடிப்பு குழுவினர் ஓடிவந்து முத்துராமனை தூக்கி படுக்க வைத்தனர். டாக்டர்களுக்கு தகவல் பறந்தது. டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு முத்துராமன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதற்குள் நடிகர் சிவகுமாரும், படத்தயாரிப்பாளர் திருப்பூர் மணியும் தகவல் அறிந்து அங்கு ஓடி சென்றார்கள். முத்து ராமன் உடலைப்பார்த்து கதறி அழுதனர். மூன்றாம்பிறை படப்பிடிப்புக்காக ஊட்டி வந்து இருந்த நடிகர் கமலஹாசனும் விரைந்து சென்று முத்துராமன் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார்.

முத்துராமன் மாரடைப்பால் மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 49. சென்னைக்கு பிறகு முத்துராமன் உடல் வேன் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வேனிலேயே நடிகர் சிவகுமார், பட அதிபர் திருப்பூர் மணி, டைரக்டர் தேவராஜ் ஆகியோரும் வந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்க அய்யங்கார் ரோட்டில் உள்ள முத்துராமன் வீட்டில் அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டது.

முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி அம்மாளு டன் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவாஜிகணேசன், மேஜர் சுந்தர்ராஜன், நம்பியார், கன்னட நடிகர் ராஜ்குமார், டைரக்டர் பாரதிராஜா, எஸ்.பி.முத்து ராமன் உள்பட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் முத்துராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முத்துராமனின் உடல் ஐ.ஜி. அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு இளைய மகன் கார்த்திக் தீ மூட்டினார்.

முத்துராமனின் மனைவி பெயர் சுலோசனா. கணேஷ், கார்த்திக் என்ற 2 மகன்கள், ராஜம், திலகம் என்ற 2 மகள்கள். இவர்களில் இளைய மகனான கார்த்திக், பாரதிராஜாவின் "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகி, நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.

No comments:

Post a Comment