Monday, October 7, 2013

இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா?

மகாபாரதத்தில் மங்காத்தா என்ற பெயரில் நாடகம் நடத்துவதா என்று காமெடியன் எஸ்.வி.சேகர் மீது ஒரு கோஷ்டி திடீர் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. திடீர் என்று சொல்ல காரணம், 33 வருடமாக இந்த நாடகம் நடக்கிறது. நாடு முழுவதும் வெளியேயும் 1,000 தடவைக்கு மேல் அரங்கேறியுள்ளது.

தூங்கியவர்கள் விழிக்கக்கூடாது என்று விதியில்லை. ஆனால் எந்த வசனம் அல்லது காட்சி இந்து மதத்தை கொச்சைப்படுத்துகிறது என்பதை எதிர்ப்பாளர் சொல்லியிருக்கலாம். பாரதத்துக்கு இழிவு என்றால் எப்படி என்று விளக்கலாம்.

படைப்பாளிக்கோ அந்த காவியத்தின் கதாபாத்திரங்களுக்கோ உறவினராக இருப்பவருக்கு அவதூறு வழக்கு தொடர உரிமை உண்டு. மங்காத்தா என்ற பெயரால் மனம் புண்பட்டிருந்தால் வேறு விஷயம். ஒரு மங்காத்தாதான் அந்த வகையில் வழக்குரிமை படைத்தவர். அந்த பெயர் ஆளையல்ல விளையாட்டை குறிப்பது எனில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் ஆர்வம் காட்டலாமே தவிர எதிர்க்க முகாந்திரமில்லை. இதை தாண்டியும் ஆட்சேபிக்கும் உரிமை கொண்டவர்கள் யாரென்று தேடினால் அஜீத், வெங்கட்பிரபு வரலாம்.

தேசியக்கொடியை பயன்படுத்த அரசு விதித்த நிபந்தனைகள் குறித்து ஒரு வழக்கு வந்தது. ‘மூவர்ணக்கொடி இந்திய குடிமக்களின் கொடி. அதொன்றும் அரசாங்கத்தின் சொத்தல்ல. ஒவ்வொரு இந்திய பிரஜையும் தேசியக்கொடியின் உரிமையாளர்’ என்று சுப்ரீம் கோர்ட் பிரகடனம் செய்தது. மகாபாரதமும் அந்த ரகம்.

மத ரீதியிலும் எதிர்ப்புக்கு இடமில்லை. நாத்திகரையும் அங்கீகரிப்பது இந்து மதம். கடவுளை அவன், அவள் என குறிப்பிடுவதோடு நில்லாமல் இதயபூர்வமாக வசைபாடவும் அனுமதிக்கிறது. பக்தி இலக்கியத்தில் பல உதாரணங்கள் உண்டு. வினாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை ஊர்வலங்களில் கடவுளுக்கு எப்படியெல்லாம் உருவமும் வடிவமும் கொடுக்கிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது ம.பா.ம நாடகம் ஒரு பிரச்னையே அல்ல.

விபூதி குங்குமம் இல்லாமல் வெளியே தலைகாட்டாத சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினார் என்பதுதான் காமெடி. நீண்டகாலமாக நடிப்பவர், அரசியலும் செய்பவர் என்றால் அவர் மீது பலருக்கு விரோதம் ஏற்பட சந்தர்ப்பங்கள் அதிகம். அதை தீர்த்துக் கொள்ள மதத்தை கையிலெடுப்பது கண்டிக்கத்தக்க வீண் வேலை மட்டுமல்ல, விபரீதமான விளையாட்டும்கூட.

No comments:

Post a Comment