Monday, October 7, 2013

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

நான் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடி பெற்றவர்கள் எனக்கு வைத்த பெயர் கோபிசாந்தா.

என் தந்தை வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வசதி மிகுந்த ரோடு காண்ட்ராக்டர், தாயார், தந்தை கொண்டு வரும் வெள்ளி நாணயங்களை எண்ண முடியாமல், 'அரிக்கன்சட்டி'யில் கொட்டி துணியால் 'வேடு' கட்டி வைப்பார்களாம்.

அந்த அளவிற்கு வசதியும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். இந்த நேரத்தில்தான் எனத் தாயார் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டார். எனது அப்பாவுக்கு தன் கூடப் பிறந்த தங்கையையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்ததுதான் அந்தத் தவறு!

அதன் விளைவு -

என் அம்மாவின் வீட்டு நிர்வாகம் கைமாறியது. எனது சின்னம்மாவின் ஆதிக்கம் வலுத்தது.

பல வழிகளிலும் என் அப்பா என் அம்மாவை அவமானப்படுத்தவும் கொடுமைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்.

எந்தத் தங்கையை நல்லவாழ்க்கை வாழச் செய்யவேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையை பங்கு போட்டுக் கொடுத்தாரோ அந்தத் தங்கையே எங்கள் வாழ்க்கையின் எல்லா அவலங்களுக்கும் பாதை போட்டுக் கொடுத்து விட்டார்.

நாளுக்கு நாள் துன்பமும் கொடுமைகளும் அதிகரித்தன. பொறுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எதற்கும் ஒரு உச்சவரம்பு உண்டல்லவா?

எனது அப்பாவின் கொடுமைகளையும் அவமானப் பேச்சுக்களையும் இனி பொறுக்க உடல் வலிமையோ உள்ள வலிமையோ இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

அதன் முடிவு -

ஒருநாள் எனது தாயார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டிக் கொண்டுவிட்டார்.

பிறந்து ஒரு வருடம்கூட நிறைவு பெறாத நான் அருகிறே கதறிக்கொண்டிருந்தேன்.

இந்த நேரம் தற்செயலாக எனது அழுகைக்குரல் கேட்டு வந்து பார்த்தவர்கள், எனது அம்மா தூக்கு மாட்டிக் கொண்டு உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறி கயிற்றை அறுத்து காப்பாற்றினார்கள்.

அப்படிக் காப்பாற்றப்பட்ட அவருக்கு சரியாக பன்னிரெண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் உயிர் வந்தது.

இந்தத் துன்பச் சூழ்நிலைக்கப்பிறகும் மேலும் நெருக்கடிகளும் மன வெதும்பலுமே அதிகரித்தனவே தவிர குறைந்திடவில்லை. அத்துடன் என் அப்பா கூட என் அம்மவால் தொடர்ந்து குடும்பம் நடித்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

இனி என்ன செய்வது?

வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை!

அதுமட்டுமா? வீட்டை விட்டு வெளியேறினாலும் எங்கள் ஊரில் மட்டும் அல்ல, தஞ்சை மாவட்டத்திற்குள்ளேயே எங்கும் தலைகாட்டக்கூடாது என்ற கொடுமையான நிலையையும் உருவாக்கிவிட்டார்கள்.

அதனால் -

ஒரு நாள்-

என் தாயார் கைக்குழந்தையான என்னைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டு விட்டார்.

அப்படி அவர் வீட்டை விட்டு, சொந்த ஊரைவிட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு வந்து நின்ற ஊர்தான் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூர்.

முன்பின் தெரியாத ஊர்; பார்த்து பழகியிராத மக்கள்; முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை. பசித்து அழும் எனக்கு பால் வாங்கக்கூட கையில் காலணா (3காசு) இல்லாத வறுமை.

இப்படி பாவப்பட்ட சூழ்நிலையில் என் அம்மா பள்ளத்தூரில் தனது வாழ்க்கையைத் துவக்கினார்.

பலகாரம் சுட்டு விற்பது என் அம்மா எடுத்துக்கொண்ட தொழில்.

வியாபாரத்தன்மை பெருக்கம் இல்லாத சிறிய ஊர். அதிக முதலீடோ லாபமோ இல்லாத தொழில். அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது. ஆனால் மானத்தோடு வாழ அது வழி காட்டியது!

இந்த பள்ளத்தூர்தான் என்னை வளர்த்த ஊர்! ஏன்? எனது இன்றைய வாழ்க்கைக்கே வழிகாட்டிய ஊர்! அனாதையாக வந்த எங்களை ஆதரித்த ஊர்.

அப்போது எனக்கு இரண்டு வயது இருக்குமாம். திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய "உன்னழகை காண இரு கண்கள் போதாதே" என்ற பாட்டை நான் ஒரு பொம்மையை வைத்து பாடிக் கொண்டிருந்தேனாம். அதைக் கேட்ட என் அம்மாவுக்கு எல்லையில்லாத ஆனந்தம் பூரிப்பு!

இருக்காதா பின்னே!

வயதோ இரண்டு. மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை ஓரளவு நயத்தோடு பாடினால் எந்தத் தாய்க்குத் தான் மகிழ்ச்சி பொங்காது?

தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன்முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

ஏனென்றால் இதைப்பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் தனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருந்தாராம்.

ஒரு சின்னஞ்சிறிய ஊரில், எந்த வித வசதியும் இல்லாத ஏழையின் இரண்டு வயதுக் குழந்தை ஓரளவு இனிமை சேர்த்துப் பாடுவது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும் போலும்!

அதுமுதல் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே கூட்டி வைத்துக்கொண்டு "பாப்பா பாடு" என்று சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடுவேன்.

படிப்படியாக இந்தப் பாடும் வித்தை எப்படியோ என்னை பலமாக ஒட்டிக்கொண்டுவிட்டது. மற்றவர்களுக்குப் பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்துவிட்டது!

பிறகு எங்கள் ஊரில் யார் வீட்டில் என்ன விசேஷ நிகழ்ச்சி நடிந்தாலும், அங்கே என்னைத் தவறாமல் கூட்டிச் சென்று பாட வைப்பார்கள்.

இதே நேரத்தில் ரொம்பவும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கூடமும் போய் வந்தேன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்ற பாராட்டையும் பெற்று வந்தேன்.

என்னுடைய பெயர் கோபிசாந்தாவாக இருந்தாலும் எல்லோரும் என்னை "பாப்பா" என்று தான் கூப்பிடுவார்கள். ஒருமுறை எங்கள் பள்ளிச்கூட விழா ஒன்றில் எங்கள் வாத்தியார் என்னை அழைத்து "பாப்பா ஒரு பாட்டுப் பாடும்மா" என்று கேட்டுக் கொண்டார்.

நான் "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற பாட்டை மீரா படத்தில் வரும் "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டின் டியூனில் பாடினேன். இதற்கு பள்ளிக்கூட ஆசிரியர்களும், மற்றவர்களும் மிகவும் பாராட்டினார்கள்.

அதுமுதல் நான் பாடாத பள்ளிக் கூட விழாக்களே இல்லை என்றாகியது. அத்துடன் சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பாட வைத்தார்கள்.

எல்லாமே தேங்காய்மூடிக் கச்சேரி மாதிரிதான்.

No comments:

Post a Comment