Tuesday, October 15, 2013

தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை!!

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் ஈத்கா திடல் அல்லது மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி பின்னர் ஏழை எளியவர்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்வர். 

புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர் இஸ்லாமியர்கள். பக்ரீத் பண்டிகையை ஒட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்.

குர்பானி ஏன் ?


இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத், இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள். இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பானி எனப்படும் வழிபாடு செய்கின்றனர். ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் வசதிக்கு தகுந்தவாறு பலியிட்டு அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானிக்காக பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தச்சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது. எனவே மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் ( ஸல்) கூறியுள்ளார்.

தியாகம் பிறந்த கதை...

நபி இப்ராஹீம் தனது காலத்தில் நடந்த கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும், அச்சமின்றி இறைக் கொள்கையை முழங்கியவர். அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார்.

'இறைவனே எல்லாம்; அவனுக்கு இணையாக எதுவும் இல்லை' எனும் இறைப் பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள். ஆயினும், குழந்தை பேறு கிடையாது.

இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹீம், இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். நபியின் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் இப்ராஹீமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் வாரிசாக அளித்தார். இதன்பின் வாழ்க்கைப் பயணம் இன்பமயகமாக தொடர்ந்தபோது, இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்கு நாள் பெருகியவண்ணம் இருந்தது.

தியாக திருவிளக்கு...


ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹீமுக்கு கனவொன்று வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்ட நபி, கவலையில் ஆழ்ந்தார். தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு அர்பணித்த இப்ராஹீம் நபி, தாம் கண்ட கனவை அன்பு மகனிடம் கூறினார். தியாகத் திருவிளக்குக்குக்குப் பிறந்தது, தியாக தீபமே என நிரூபிக்கும்வண்ணம், இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி தன்னுடைய தந்தையிடம் பணித்தார், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம். அவ்வாறு பணித்ததோடு மட்டுமின்றி, 'பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ?' என அஞ்சிய பாச மகன், தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார்...

ஆனால், அந்த நரபலியைத் தடுத்து, அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்து, இந்த நிகழ்வின் நினைவாக ஓர் ஆட்டினை பலியிட்டு, அனைவரையும் புசிக்குமாறு கூறினான் இறைவன்! குழந்தைச் செல்வங்கள் மலிந்திருப்போரும், தனது ஒரு குழந்தையை இழக்க சம்மதிக்காத இவ்வுலகில், ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்ராஹீமின் தியாகத்தை போற்றாமல் இருப்பது முறையா?.

இப்புனிதம் மிகுந்த தியாகத் பெருநாளில், இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து, உற்ற நண்பர்களுடன் உறவாடி, நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் இறையருளுடனும், தியாகத்தின் உன்னதத்தை உணர்ந்தும் நல்வாழ்க்கை வாழ்வோம்!

No comments:

Post a Comment