Monday, September 2, 2013

நான் ஒரு சிறந்த அண்ணனே இல்லை- சூர்யா!

முதன்முறையாக மனம் திறந்து தனது குடும்ப வாழ்க்கை குறித்தும், திரையுலக வாழ்க்கை பற்றியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான சூர்யா, பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் தனது வாழ்கை குறித்து அளித்த பேட்டி ஒன்றில்.

கேள்வி: உங்கள் மரியாதைக்குரியவர்..? 

பதில்: என்னுடைய தந்தை சிவக்குமார், அவர் 16வது வயதில் கோவையிலிருந்து சென்னை வந்தார். சினிமா துறையில் சேர்வதற்கு முன்பு எட்டு வருடங்களாக ஆர்ட் கோர்ஸ் பயின்றார்.

அவர் சினிமா துறையில் சூப்பர் ஸ்டார் கிடையாது. ஆனால், அவருடைய குணத்தால் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

எனது அம்மாவை திருமணம் செய்வதற்கு முன்னால் 25 பெண்களால் அவர் நிராகரிக்கப்பட்டார். ஏனெனில், சினிமா துறையில் இருப்பதால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. இறுதியாக என்னுடைய அம்மாவை திருமணம் செய்துகொண்டார்.


கேள்வி: உங்கள் குழந்தைப்பருவ வாழ்க்கை..? 

பதில்: என்னுடைய தந்தை ஒரு நடிகர், ஆனால் எனக்கு அந்த துறையை பற்றி தெரியாது, நான் அந்த பக்கமே போனது கிடையாது. படத்தை மட்டும் பார்க்கும் பழக்கம் உண்டு.


எனக்கு சிறுவயதிலிருந்தே தாழ்வு மனப்பான்மை உண்டு, எனக்கு பேச்சோ, படிப்போ, விளையாட்டோ எதுவும் நன்றாக வராது. ஆனால் என் தம்பி கார்த்தி எனக்கு நேர்மறையானவன்.

படிப்பு, விளையாட்டு, நடிப்பு என எல்லாவற்றிலும் சிறந்த மாணவனாக வருவான், நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் எல்லா இடத்திற்கும் செல்வோம்.

ஆனால் நான் ஒரு சரியான அண்ணனாக கார்த்திக்கு இதுவரை இருந்ததில்லை.

கேள்வி: நீங்கள் நடிகரானது எவ்வாறு..? 

பதில்: நான் லயோலா கல்லூரியில் வணிகத்துறை மாணவன், அப்பாவுக்கு நான் தொழில் செய்யவேண்டும் என்று விருப்பம். திடீரென்று ஒரு நாள் இயக்குனர் ஒருவர் நான் நடிப்பதற்கான எல்லா தகுதியும் உண்டு என்று கூறி அப்பாவிடம் கேட்டார்.

ஆனால், அந்த சமயம் அப்பா மறுத்துவிட்டார். பின்பு தொழிலில் நாட்டம் செலுத்தினேன், இருந்தாலும் அது எனக்கு சரியாக வரவில்லை.

ஒருநாள் என் தந்தை சிங்கப்பூரில் வைத்து இயக்குனர் வஸந்தை சந்தித்தார். அப்போது அவர் நேருக்கு நேர் என்ற படம் இயக்குவதாக இருந்தது. அந்த படத்தில் விஜய்யும், அஜித்தும் நடிப்பதாக இருந்தது.

பின்பு அதில் அஜித் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முதலில் நான் நடிக்கப்போகிறேன் என்ற செய்தியை என் நண்பர்களிடம் சொன்னதும் சிரித்தார்கள்.

ஆனால் என்னால் திறமையாக வர முடியும் என்று அவர்களிடம் சவால் விட்டேன். இயக்குனர் மணிரத்னம் சாரும், என்னை பார்த்து நீ 200% நல்ல நடிகனாக வருவ என்று வாழ்த்தினார். அந்த தருணம் மனதில் புதிய உற்சாகம் பிறந்தது.

கேள்வி: உங்கள் மனைவி ஜோதிகாவிடம் பிடித்தது என்ன..? 

பதில்: அவர் ஒரு கடின உழைப்பாளி, பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் நாங்கள் இருவரும் சினிமா துறையில் இணைந்தோம்.

நான் அப்போது வளர்ந்து வரும் நடிகன். ஆனால் மும்பையைச் சேர்ந்த அவர் பிரபல நாயகி பட்டியலில் இருந்தார். அவர் பெரிய நாயகி என்பதால் நான் அவ்வளவாக அவரிடம் பேசமாட்டேன்.
ஜோவுக்கு தமிழ் தெரியாததால் படப்பிடிப்பு தளத்தில் மற்றவர்களிடம் கேட்டு தமிழை தெரிந்து கொள்வார். எல்லோரிடமும் இயல்பாக பழகும் குணமுடையவர்.

கேள்வி: தற்போது நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ளீர்கள்! அது குறித்து சொல்லுங்கள்..?

பதில்: நான் இப்போதும் வளர்ந்து வரும் நடிகன் தான். என் அப்பா, நான் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்று நினைத்தார். ஆனால் நான் நடிகனாக மாறிவிட்டேன்.

இந்தத் துறையில் நான் பல சாதனைகளை செய்து எனது பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

என் தம்பி கார்த்தி, ஒரு இயக்குனராக வரவேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. ஆனால், கார்த்தி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஒத்துக்கொண்டார்.

இன்னும் என் அப்பாவுக்கு நம்பிக்கை உண்டு. கார்த்தி ஒரு நல்ல இயக்குனராக வருவான் என மனம் திறந்துள்ளார் சூர்யா

No comments:

Post a Comment