Wednesday, September 11, 2013

இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்…

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).

வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!

அவரை ஒரு மாபெரும் அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல், தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன் அவர். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் தலைவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

தலைவர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து சொன்ன அத்தனையும்… ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’ என்ற எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தியது!

அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய மகாத்மாவாய் தெரிந்தார், தெரிகிறார் எம்ஜிஆர். வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!

பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!

சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.

தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே தலைவரின் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.

எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது.

இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…

நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது தலைவரின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.


பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.

எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.

வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!

2 comments:

  1. ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’ என்ற எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தியது! What a biggest joke ????!!!!!!!!!!@#$%^&*

    ReplyDelete
  2. Among all the CM ,MGR was the useless idiot of Tamilnadu.

    ReplyDelete