Saturday, September 7, 2013

17 வயது மாணவர் தன்னிச்சையாகவே 20 மொழிகளை கற்றுள்ளார்

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார். சந்திக்கும் பல தரப்பு மனிதர்களிடமும் அவர்களின் தாய் மொழியிலேயே உரையாற்றும் திறனுடன் திகழ்வதால், இவரது நண்பர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. பல மொழிகளை அறிந்தவர் என்ற பொருளில் பாலிகிளாட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் இவர்.

இந்த நபர் அமெரிக்காவின் நியுயார்க் நகரைச் சேர்ந்த 17 வயது மாணவர் திமோத்தி டோனர். இவர் தற்போது அமெரிக்கா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்று வருகிறார். காரணம், உலக கலாச்சாரங்களை அறியும் ஆர்வத்தில் தானாகவே முயன்று, இதுவரை 20 மொழிகளை பேசக் கற்றுக் கொண்டுள்ளார் இவர்.

தான் ஒரு அமெரிக்கராக இருந்தாலும், வேறுபட்ட மொழிகளில் உரையாற்றுவதால், அனைத்து கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களும் தன்னிடம் மிகுந்த நட்புணர்வு காட்டுவதாக கூறுகிறார் திமோத்தி. மொழியறிவின் மூலம் கலாச்சார வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்ள முடிவதால், இதன் காரணமாக எழும் பிரச்னைகள் தனக்கு தடையாக இருப்பதில்லை என்கிறார் இவர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் திமோத்தி டோனருடன் ஆன்லைனில் தங்கள் மொழிகளிலேயே உரையாடி மகிழ்கின்றனர். பல மொழிகளை கற்று நாடு, மொழி என பேதங்களை கடந்து நட்பு வளர்க்கும் திமோத்தியைப் போன்றவர்கள் தேசங்களுக்கு இடையே, கலாச்சாரப் பாலமாக திகழவும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment