Tuesday, August 27, 2013

Bobby தமிழ் நாட்டைப் படுத்திய பாடு

1973-74லில் தமிழ் நாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதலில் கடவுள் வாழ்த்தாக ”வினாயகனே வினை” (சில சமயம் பாதியிலேயே ரிக்கார்ட்பிளேட்டை புடுங்கி விடுவார்கள்) போட்டுவிட்டு அடுத்து அவசரமாக “பாகர் சே செய்க்கோ அந்தர்..... ஹம் தும் ஏக் கம்ரே மேன் பந்த் ஹோ” இதற்கடுத்து எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்கும் ”மே ஷாயார் தோ நஹி” ஷ்ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்துடன் ஆரம்பிக்கும்.

பாட்டைப் போட்டுவிட்டு சவுண்ட் சர்வீஸ்காரர் இடுப்பில் கைவைத்து எல்லோரையும் ஒரு முறைப் பார்த்து புன்னகைப்பார்.ஜனங்கள் பதிலுக்குப் புல்லரிப்பார்கள்.

செந்தமிழ் மாநாடு கொண்டாடிய தமிழ் நாடு புல்லரித்து,புளாங்கிதம் அடைந்து இரும்பூது எய்தது Bobbyயின் பாடல்களைக் கேட்டு.படத்தையும் பார்த்து. இந்தியாவே புரட்டியது?

நானும்பள்ளிமாணவனாக புல்லரித்தேன்.எங்கள் வீட்டு வேலைகாரியும் ஹம் செய்துக்கொண்டே பாத்திரம் தேய்ப்பார்.

பாட்டின் வரிகள்/வசனங்கள் யாருக்காவது புரிந்திருக்குமா?

அட Bobbyகளா..!

Bobby என்ற பெயர் ஜெர்மனி மூலம் என்று யூகிக்கிறேன்.

பாடல்களில் “அக்கார்டியன்”(Accordian) இசைக்கருவி நாதங்கள் நிறைய இருக்கும். (இது நம்மூர் ஹாண்டி digitalized ஹார்மோனியம் தான்) காரணம் படத்தின் நாயகி கோவா ஆங்கிலோ இந்திய பெண்.பெயர் Bobby Braganza.

ஏன் Bobby படுத்தியது?

காரணம் பிரஷ்னஸ்.

அப்போது “டக் டக் டக் இது மனதுக்குத் தாளம்” என்று பாடல் போட்டு நம்மவூர் இளசுகள்(சிவாஜி-வாணிஸ்ரீ/எம்ஜியார்-கே.ஆர்.விஜயா) நிறைய காதல் செய்துக் கொண்டிருந்தார்கள்.இதைத் தவிர இன்னும் சில இளசுகள் ”டோப்பா” வைத்துக்கொண்டு கருப்பு வெள்ளையில் பவுடர் அப்பிக்கொண்டு காதல் செய்தார்கள்.

கே.வி.மகாதேவன்/ விஸ்வனாதன் போன்றவர்களின் தேய்பிறை இசை அலுத்துப்போனவர்களுக்கு இதன் இசை பிடிததுப் போனது. அப்போதே கல்லூரி மாணவர்கள் இந்தி இசையைக் கேட்டு காலரைத் தூக்கி விட்டுகொள்வார்கள். தமிழ்ப் பாடல்கள் கேட்டால்அவமானமாக நினைத்தார்கள்.மன்சாயே கீத்,பினாகா கீத் மாலா, பூல் குலே குல்ஷன்... போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம்.

ஆனால இது...?

இளசு/தளிர் வயசு காதல்.ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா.இருவரும் பிஞ்சு தக்காளிப் போல இளசுகள்.(ரிஷிகபூரை டிம்பிள் கபாடியா முதன் முதலாக சந்திக்கும் இடம் மனதைக் கவரும் இடம்) சுண்டினால ரத்தச்சிவப்பு பஞ்சாபி வெள்ளைத் தோல் நாயகர்கள்.ரிஷிகபூர் சட்டையை மீறி தெரியும் புசு புசு முடி.கலர் படம்.ரிச் இசை.ரிச்சான கலர்.ரிச் லொகேஷன்ஷேன்.

மிக மிக மிக முக்கியமாக டிம்பிள் சீனுக்கு சீன் அணிந்த கவர்ச்சி உடைகள்.அதற்காகவே அவர் கோவா ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகப் படத்தில் படைக்கப்பட்டார்.படம் முடிந்ததும் ”அய்யோ அம்மா” என்று பல இளைஞர்கள் அலறிக்கொண்டு வெளியே வந்தார்கள்.
தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் பெரிதாக இருக்க வேண்டும் என்று ராஜ்கபூர் விரும்புவாராம்.ஜீனத் அமனும் (சத்தியம் சிவம் சுந்தரம்) அவர் கண்டுப்பிடிப்பு.

இதன் பின்னணி இசையும் ஒரு காரணம்.ஆட்டுக்கார அலமேலு படத்தில் சங்கர் கணேஷ் சுட்டு அடித்திருப்பார்.Mujhe Kuch Kehna Hai என்ற பாடல் எஸ்.ஏ.ராஜ்குமார் சுட்டு ஒரு படத்தில் போட்டிருப்பார்.ஆனால் இப்போது யோசித்தால் டிபிக்கல் இந்தி இசை.

இசை லஷ்மிகாந்த் பியாரிலால்.ராஜ்கபூரின் பெரிய தயாரிப்பு.இதில் பாடும் ஷைலேந்திரா சிங் புது முகம்.அருமையான குரல்.எனக்குப் பிடித்தப் பாடல்கள் மூன்று.

கதை?

ஒரு சாதாரண காதல் கதை.”முதல் பார்வைக் காதல்” கதை.ஒரு ஏழை பெண்ணுக்கும் பணக்கார இளைஞனுக்கும் மலரும் காதல்.வீட்டில் எதிர்ப்பு.கடைசியில் சேர்வார்கள்.

சென்னை மிட்லெண்ட் தியேட்டரில் ஓடு ஓடு என்று மராத்தான் ஓட்டம் ஓடியது.இத்ன் லாபத்தில்தான் “லியோ” மினி தியேட்டர் கட்டினதாக சொல்வார்கள்.படுத்திய படுத்தலில் குமுதம் இதன் கதையை தொடராக வெளியிட்டது. இதன் பாதிப்பில் லஸ் கார்னரில் ஒரு துணிக் கடையின் பெயர் Bobby.சட்டைக்கு Bobby காலர் (நாய் காது டைப்) அப்போது பேஷன்.ரிஷிகபூரின் ஹேர்ஸ்டைலை முக்கியமாக கிருதாவை வரவழைக்க முயன்று தோல்வி அடைந்தேன்.

சுஜாதா மிஸ் தமிழ் தாயே நமஸ்காரம் புத்தகத்தில் (பின்னாளில் படித்தது) ஒரு கவிதையை சுட்டி இருந்தார்.அது.....

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
”பாபி” பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)
அருமையாக நடித்தனர்...
என எழுதுகிறராம்

ரிஷிகபூரின் அடுத்தப் படம் “ரபூ சக்கர்”.கதாநாயகி நீட்டு சிங்.ஓடவில்லை.காரணம் பாபியின் ஹேங் ஓவர் தெளியாமல் இருந்ததுதான்.

இதற்கு பிறகும் இந்திப்பட மோகம் மூணு நாலு வருஷம் இருந்தது.

அப்போது மத்தியான வேளைகளில் தமிழ்(மலையாள?) டீக்கடைகளில் ட்ரான்சிஸ்டரில் இரைச்சலுடன் காற்றில் அலைந்துவரும் லதா மங்கேஷ்கரின் பாட்டு காதில் இன்னும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment