Monday, August 26, 2013

ஏக் துஜே கேலியே – மாற்றவேண்டிய கதை

ஒரு தமிழ் இளைஞன். ஹிந்தி இளைஞி. அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள். காலா காலத்தில் காதலில் விழவும் செய்கிறார்கள். சுற்றுலா மையமான கோவாவில்தான் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது என்றாலும், காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் சாலைகள் ஊரடங்கு போடப்பட்டதுபோல் வெறிச்சோடிவிடுகின்றன. கடற்கரைகூட ஜிலோ என்று இருக்கிறது. புல்வெளிகள், தோப்புகள், துரவுகள் ஆகிய இடங்களில் பாடல்கள்… ஆடல்கள்…

வழக்கம்போலவே இருவருடைய பெற்றோர்களும் காதலை எதிர்க்கிறார்கள். வழக்கம்போலவே காதலர்கள் தங்கள் பெற்றோர்களை எதிர்க்கிறார்கள். ஆனால், அதன்பிறகுதான் வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடக்கிறது. உலக சினிமா வரலாற்றிலேயே அதுவரை இல்லாத புதுமையாக, நாயகனின் பெற்றோர் காதலர்களை ஒருவருட காலம் பிரிந்திருந்து காதலின் வலிமையை நிரூபிக்கும்படிக் கேட்டுகொள்கிறார்கள்! காதலர்களும் சிறிது தயக்கத்துக்குப் பிறகு சம்மதிக்கிறார்கள். காதலன் வேறு ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகிறான்.

காதல் புறாக்கள் கடிதத் தொடர்போ, தொலைப்பேசிப் பேச்சோ இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனிடையில், காதலனுக்கு ஒரு கைம்பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே ஹிந்தி நன்கு பேசவும் லிஃப்டுக்குள் ஹிந்தி கவிதை பாடவும் தெரிந்திருந்தாலும் நாயகன் அந்தக் கைம்பெண்ணிடம் மீண்டும் முதலிலிருந்து ஹிந்தி கற்றுக்கொள்கிறான். அவள் நாட்டியத் தாரகையும்கூட என்பதால் நடனமும் கற்றுக் கொள்கிறான் (நல்லவேளை அவளுக்கு ஆய கலைகளில் அதைத்தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை).

ஒருநாள், காதலன் வேலை விஷயமாக மங்களூருக்குச் செல்கிறான். அந்த நேரம் பார்த்து காதலி தன் கல்லூரிச் சுற்றுலாவுக்கு அதே மங்களூர் வந்து சேர்கிறாள். சக மாணவர்களுடன்தான் வந்திருக்கிறாள் என்றாலும், தனியாகவே எல்லா இடங்களுக்கும் போகிறாள்; வருகிறாள். அப்படிப் போகும் வழியில், தன்னுடைய முறைப்பையனின் காரைப் பார்ப்பவள் அவன் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறாள். காதலியின் அம்மா, அவளை உளவு பார்ப்பதற்காக முறைப்பையனை அனுப்பி வைத்திருக்கிறார். அது தெரிந்த காதலி அவனைத் திட்டுகிறாள். அவன் மன்னிப்பு கோருகிறான்.

அந்த அறைக்கு பக்கத்து அறையில்தான் நம் காதலனும் தங்கியிருக்கிறான். காதலி படியில் இறங்கிச் செல்வதை யதேச்சையாகப் பார்த்தும் ஒப்பந்தத்தின்படி அவளிடம் பேசாமல் இருந்துவிடுகிறான். தன் வேதனையை மறக்க ஒரு பாட்டை எடுத்துவிடுகிறான். பக்கத்து அறையில் இருந்து கதாநாயகி அதைக் கேட்கிறாள். இருவரும் இரண்டு அறைகளைப் பிரிக்கும் கதவுக்கு இரு பக்கமுமிருந்து சத்தியம் தவறாமல் கண்ணீர் வடிக்கிறார்கள். பாட்டு முடிவதுவரை பொறுமையாக இருந்த நாயகி, அது முடிந்ததும் முறைப் பையனின் அறையிலிருந்து எங்கோ போய்விடுகிறாள். பாடல் நடக்கும் நேரம் முழுவதும் குளித்துக்கொண்டிருந்த முறைப்பையன், வெளியே வந்து பார்த்து நாயகி எங்கே போய்விட்டாள் என்று அறை முழுக்கத் தேடிப் பார்க்கிறான். அவளைக் காணவில்லை என்றதும் கொண்டுவந்த பொருள்களை பையில் அடைக்க ஆரம்பிக்கிறான் (அவனுடைய பையில் பிராவையும் புடைவையையும் எடுத்து வைக்கிறான். அவன் பிராவெல்லாம் போடுவதுண்டா என்று கிண்டல் செய்யாதீர்கள். ஏதோவொருவிதமாக யோசித்து வேறு ஏதோவொருவிதமாக எடுக்கப்பட்ட காட்சி இது).

அதுவரை பாடல் பாடி மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்த நாயகன், பொறுத்ததுபோதும்… மனோகரா… பொங்கி எழு என்று தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டு முறைப்பையனின் அறைக்குள் புயல்போல் நுழைகிறான். அங்கு முறைப்பையனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைகிறான். அவன் யார் என்று நாயகன் கேட்கவே, அந்த முறைப்பையனோ தனக்கும் நாயகிக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாகச் சொல்கிறான். அதை நாயகன் அப்படியே நம்பிவிடுகிறான். கல்லூரி மாணவர்கள் சுற்றுலாவுக்குப் போகும் வண்டியை வழியில் மறித்து நாயகி எங்கே என்று தேடுகிறான். அவர்களும் அவள் தன் வருங்காலக் கணவருடன் காரில் ஊருக்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். சற்றுமுன்தான் என்னை ஏன் பின் தொடர்ந்து வருகிறாய் என்று நாயகி முறைப்பையனைத் திட்டியிருந்தாள். இருந்தும், கல்லூரி நண்பர்களைவிட்டுவிட்டு முறைப்பையனுடன் போய்விடுகிறாள் (கதை அப்பத்தான சூடு பிடிக்கும் பாஸ்).

நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நாயகனுக்கு ஆவேசம் வந்துவிடுகிறது. தனக்கு நாட்டியமும் ஹிந்தியும் கற்றுக்கொடுத்த கைம்பெண்ணைப் பார்த்து, வா, நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறான். அவளுக்கும் அந்த ஆசை மனதில் இருந்திருக்கவே உடனே சம்மதித்துவிடுகிறாள். திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் அடித்துவிடுகிறார்கள்.

இன்னும் சில நாள்களில் திருமணம் என்ற நிலையில் ஒருநாள் அந்தக் கைம்பெண், நாயகனின் அறைக்குப் போகிறாள். அங்கு, அவன் நாயகிக்கு எழுதி, போஸ்ட் செய்யாமல் வைத்திருக்கும் கட்டுக்கட்டான காதல் கடிதங்களைப் பார்க்கிறாள். மனம் சுக்கு நூறாக உடையும் அவள், தன்னைத் தேற்றிக்கொண்டு நேராக நாயகியைப் போய் சந்திக்கிறாள். நாயகனின் வருகைக்காக நாயகி வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பதையும் அவளுடைய காதல் தெய்வீகமானது என்பதையும் தெரிந்துகொள்ளும் அந்தக் கைம்பெண், திரும்பி வந்து நாயகனிடம் விஷயத்தைச் சொல்கிறாள்.

அவளுக்கு வேறொரு நபருடன் திருமணம் என்று யாரோ சொன்னதை ஏன் நம்பினாய்… ’அவளுடைய காதல்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? உன் வீட்டுக்காரர்களிடமோ அவர்கள் வீட்டுக்காரர்களிடமோ ஒரு போன் போட்டாவது கேட்டிருக்கலாமே… ஏன் இப்படி என்னைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தாய்’ என்று திட்டுகிறாள். நாயகன் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறான். இதனிடையில் ஒரு வருட காலம் முடிந்திருக்கவே நாயகியைச் சந்திக்க விரைந்து ஓடுகிறான்.

ஆனால், அந்தக் கைம்பெண்ணின் சகோதரன், தன் சகோதரியின் திருமணம் நின்றுபோனது பற்றித் தெரிந்ததும் அதற்குக் காரணமான நாயகனைக் கொல்லும்படித் தன் ரவுடி நண்பனிடம் குடிபோதையில் சொல்லிவிடுகிறான். இன்னொரு கிளைக்கதையாக நாயகியின் குடும்ப நண்பரான ஒருவன் ஆரம்பத்திலிருந்தே அவளை அடைய ஆசைப்பட்டிருப்பான். அதுவரை மிகவும் பொறுமையாக இருந்த அவன், படம் முடிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதால் தனது திட்டத்தை அமல்படுத்திவிடுகிறான். யாருமே இல்லாத சாலையில் போய், யாருமே இல்லாத கோயிலில் தொழுதுவிட்டு வெளியே வரும் நாயகியை அவன் மடக்கிப் பிடிக்கிறான். வேறு வழியில்லை என்பதால் நாயகியும் யாருமே இல்லாத பாழடைந்த மண்படம் ஒன்றில் அடைக்கலம் தேடி ஒளிகிறாள். அங்கு துரத்திக்கொண்டு வரும் வில்லன் சிலபல துரத்தல்களுக்குப் பிறகு அவளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான்.

இதனிடையில், நாயகனையும் ரவுடிகள் சுற்றி வளைத்து அடித்துக் கத்தியால் குத்திவிடுகிறார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் நாயகனும் நாயகியும் கடற்கரை ஓரத்தில் இருக்கும் மலை உச்சியில் சந்தித்துக் கொள்கிறார்கள். நாயகன் இறக்கப் போவது உறுதி என்பது தெரிந்ததும், நாயகி தன்னையும் அவனுடன் அழைத்துச் செல்லும்படி அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். இந்த உலகமே காதலுக்கு எதிராக இருப்பதைத் தெரிந்துகொள்ளும் அந்த இளம் காதலர்கள் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அப்படியாக காதலில் தோற்று, ஒருவருக்கொருவர் உயிரைத் தியாகம் செய்து அமர காவியம் படைத்துவிடுகிறார்கள்.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் வெளியாகி தாங்க முடியாத வெற்றியை எட்டிய காவியத்தின் கதைச்சுருக்கம்தான் மேலே சொல்லப்பட்டிருப்பது. இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், நாயகன் நாயகியின் காதல் விளையாட்டுகள் இடம்பெறும் முதல் பாதியும் உயிரை உருக்கும் பாடல்களும்தான். பொதுஅறிவில் சிறந்து விளங்கும் இன்றைய தலைமுறைக் குழந்தையிடம், தொப்புளில் பம்பரம் விட்டது யார் என்று கேட்டால் சின்னக் கவுண்டர்தான் என்று தெளிவாகச் சொல்லிவிடும். ஆனால், காதல் மன்னன் 1978லேயே இதைச் செய்துவிட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவேதான் இருக்கிறது. இன்று, நம் தமிழ் திரையுலகில் நடந்துவரும் பல்வேறு சாகசங்களின் மூலமுதல்வன் நம் காலத்து நாயகன்தான் என்று சிலர் சொல்வது பொய்யுரை அல்ல என்பது அந்த நிமிடத்தில் எனக்குப் புரிந்தது.

இந்தப் படத்துக்கான எனது திரைக்கதையைப் பார்ப்பதற்கு முன், படத்தில் இருக்கும் சில குறைகளைப் பட்டியலிட்டுவிடுகிறேன்.

முதலாவதாக, நாயகன் நாயகியின் வீடானது பாடல் காட்சியில் நடிகர்கள் காஸ்ட்யூம் மாற்றிக் கொள்வதுபோல் சகட்டுமேனிக்கு மாறுகிறது.

அடுத்ததாக, ஒரு வருட காலம் காதலர்கள் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இரண்டு காதலர்களும் தங்கள் காதல்மீது இருக்கும் நம்பிக்கையினால் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நாயகனோ அற்ப விஷயத்தை நம்பி அந்த அமர காதலையே தூக்கி எறிந்துவிடுகிறான். அதோடு நிற்காமல், அடுத்த நிமிடமே இன்னொரு திருமணத்துக்கும் தயாராகிவிடுகிறான். இது, கதையின் அடிப்படை உணர்வையே சிதைத்துவிடுகிறது. துணை-நாயகியான கைம்பெண், நாயகனைப் பார்த்து இது தொடர்பான கேள்விகளைக் கேட்கிறாள். ஆனால், உண்மையில் கதை டிஸ்கஷன்போது கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் அவை. அதோடு, அப்படியே நாயகனும் கைம்பெண்ணும் திருமணத்துக்குத் தயாராகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதை நாயகனின் பெற்றோருக்குத் தெரிவிக்கவே மாட்டார்களா… அதன் மூலம் அது நாயகிக்குத் தெரியவந்துவிடாதா என்ன?

ஓர் அருமையான கதை முடிச்சு கிடைத்திருக்கிறது. ஆனால், அதை சரியாக இறுக்கவோ நளினமாக அவிழ்க்கவோ இயக்குநருக்குத் தெரியவில்லை. வழக்கமான வில்லன், கற்பழிப்பு, கொலை என்று வீணடித்துவிட்டிருக்கிறார். இது ஒருவகையில் அரைக்கிணறு தாண்டியது போன்ற சாகசம்.

உண்மையில், ஒரு வருட காலம் சந்திக்கக்கூடாது என்று பெற்றோர் சொல்வதுதான் இந்தப் படத்தைப் பொறுத்தவரை வில்லன். அந்தத் தடையை அவர்கள் எப்படித் தாண்டுகிறார்கள். அதில் என்னென்ன சிக்கல்கள் வரக்கூடும் என்றுதான் திரைக்கதை ஆசிரியர் யோசித்திருக்க வேண்டும். இரண்டு வழக்கமான வில்லன்களைச் செயற்கையாக உருவாக்கி, அதன் அடிப்படையில் கதையை நகர்த்தியதால் படம் தேர்ந்த பார்வையாளர்களுக்கு உகந்ததாக ஆகாமல் போய்விட்டிருக்கிறது.

ஒரு கலைஞன் தன்னைவிட புத்திசாலியாக தன் வாசகர்களை நினைக்க வேண்டும். அப்போதுதான் அவனால் அற்புதமான படைப்பைச் சிருஷ்டி செய்ய முடியும். இது, எழுத்துத் துறைக்கு மட்டுமேயானது அல்ல. திரைத்துறையிலும் அதுவே இலக்காக இருக்கவேண்டும்.

அதிலும், கமல்ஹாசனும் பாலசந்தரும் பச்சைத் தமிழர்களாக இருந்த பிறகும், இந்தப் படம் தமிழில் இன்னும் வராமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒருவேளை, யாராவது இதைத் தமிழில் எடுக்க முன்வந்தால் ஒரிஜினலை அப்படியேதான் எடுப்பார்கள். அது, நிச்சயம் பெரிய வெற்றியை ஈட்டித் தரவும்கூடும். ஆனால், அதன் திரைக்கதை பலவீனமானது என்பதை அந்த வெற்றி ஒருபோதும் மாற்றி அமைத்துவிடமுடியாது. அதனால், இந்த காதலர் தினத்தின் சிறப்புப் பரிசாக, உலகில் இருக்கும் உண்மையான காதலர்களுக்கு எனது இந்தத் திரைக்கதையை சமர்ப்பிக்கிறேன்.

எனது திரைக்கதையில் ஏக் துஜே கேலியேவின் முதல் பாதி காதல் காட்சிகளை அப்படியே வைத்துக்கொள்வேன். ஒருவருட காலம் பிரிந்திருக்க வேண்டும் என்ற அந்த முடிச்சையும் அப்படியே வைத்துக்கொள்வேன். ஆனால், அதன் பிறகு, அந்த அற்புதமான முடிச்சையே மையமாக வைத்துக் கதையைக் கொண்டுசெல்வேன்.

உண்மையில், பெற்றோர்கள் அதை மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு செய்வதாகவே காட்டுவேன். படத்தில் மூன்றாவது நபர் ஒருவர் அந்த யோசனையைச் சொல்வதாக இடம்பெற்றிருக்கிறது. அது தேவையே இல்லை. காதலர்களின் பெற்றோருக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. எனவே, பிரிக்கத் திட்டமிடுகிறார்கள். கேக்காத கடன் கிடைக்காது. பாக்காத காதல் ஜெயிக்காது என்று அவர்கள் யோசித்து காதலர்களை ஒரு வருட காலம் பிரிந்திருக்கச் செய்கிறார்கள்.

நாயகனின் நினைவுகளை அழிக்க நாயகியின் அம்மா பல முயற்சிகளைச் செய்கிறாள். எதுவும் பலன் தராமல் போகிறது. ஏழெட்டு மாதங்கள் கழிந்துவிடுகிறது. இருவருடைய காதலும் ஃபெவிக்காலின் பிணைப்பைப்போல் படு உறுதியாக இருக்கிறது. அப்போது, நாயகனின் அப்பா அவனைச் சந்தித்து பேசுகிறார். ’ஒரு வருஷம் பாக்காம இருந்துட்டா மட்டும் உண்மையான காதல்னு ஆகிடாது. நாளைக்கே கல்யாணம் ஆகி நாலைஞ்சு வருஷம் ஆனதும் இப்ப இருக்கற காதல் எல்லாம் காணாமப் போயிடும். பிரிஞ்சு இருங்கன்னு சொன்னதுக்கு பதிலா உங்களை ஒரு வருஷம் தனியா சேர்ந்து இருங்கன்னு சொல்லியிருக்கணும். ச்சீ… இம்புட்டுத்தானான்னு சலிச்சிப் போயி பிரிஞ்சிருப்பீங்க. நாங்க தப்பு பண்ணிட்டோம். உண்மையான காதல் அப்படிங்கறது இது இல்ல. தன்னோட துணைக்கு என்ன துயரம், சோகம் வந்தாலும் தாங்கிக்கறதுதான் உண்மையான காதல். அது உங்களால முடியாது. வெறும் உடம்பைப் பார்த்து வர்ற வாலிபக் கிறுக்கு இது’ என்று திட்டுகிறார்.

நாயகனோ, ’மொதல்ல நாங்க பிரிஞ்சி இருந்தா காதல் காணாமப் போயிடும்னு சொன்னீங்க. இப்ப அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் வேற புது கதையை ஆரம்பிக்கறீங்களா?’ என்று சீறுகிறான். ’உண்மையான காதல்ன்னா எல்லாத்தையும் தாங்கிக்கணும். உனக்கு அல்லது அவளுக்கு ஒரு பெரிய வியாதி இருக்குன்னு வெச்சிப்போம். அதுக்குப் பிறகும் நீங்க இப்படி காதல், கத்திரிக்கான்னு சொல்லிக்கொண்டிருப்பீர்களா என்ன…! உனக்குப் புற்று நோய்ன்னு சொன்னா, ஒரு வாரம் அல்லது ஒரு மாசம் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுவாள். அதன் பிறகு, வேறொருவனை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவாள்’ என்று சீண்டுகிறார் அப்பா. இதைக் கேட்டதும் நாயகனுக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. ’இப்ப என்ன சொல்றீங்க… எங்க காதல் உண்மையானதுன்னு நிரூபிக்க இந்தச் சோதனையையும் செய்யணும் அவ்வளவுதான… நீங்க போயி அவ கிட்ட எனக்குப் புற்றுநோய் இருக்கு… இன்னும் ஐஞ்சாறு மாசத்துல செத்துப் போயிடுவேன்னு சொல்லுங்க. அவ என்ன சொல்லுவா தெரியுமா…? இருந்துட்டுப் போகட்டுமே… எத்தனை வருஷம் உயிர் வாழறோங்கறது முக்கியம் இல்லை. எப்படி வாழறோம் அப்படிங்கறதுதான் முக்கியம்… மனசுக்குப் பிடிக்காதவனோட ஆயுள் முழுக்க வாழ்றதைவிட பிடிச்சவனோட ஆறு மாசம் வாழ்ந்தாலும் போதும் அப்படின்னுதான் சொல்லுவா. நான் செத்ததும் உடன் கட்டை ஏறி உயிரை விடறேன்னுதான் சொல்லுவா’ என்று நாயகன் சவால் விடுகிறான். நாயகனின் அப்பா அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறார். நாயகியின் அம்மாவோ, எதுக்கு இப்படி ஒரு விஷப் பரீட்சை என்று கடிந்துகொள்கிறார். ஆனால், அந்த உண்மையை நாயகியிடம் சொல்லக்கூடாது என்று நாயகனின் அம்மாவிடம் அப்பா சத்தியம் வாங்கிக்கொண்டுவிடுகிறார்.

நாயகியிடம் போய் அதைச் சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் நாயகி, நாயகன் தன் கைப்பட எழுதிய கடிதத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறாள். போதாத குறையாக, போன் செய்தும் கேட்கிறாள். நாயகன் தன் தந்தையிடம் செய்த சவாலின்படி தனக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் சொல்கிறான். நாயகி அதன் பிறகு நாயகன் என்ன சொன்னானோ அதையே நாயகனின் தந்தையிடம் சொல்கிறாள். எங்களை எமனாலும் பிரிக்க் முடியாது என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

மேலும், ஓரிரு மாதங்கள் இப்படியே கழிகின்றன. இன்னும் பத்து நாள்களுக்குள் ஒப்பந்தம் முடியப் போகிறது என்ற நிலை வருகிறது. இத்தனை நாள்கள் மாறாத மனம் இந்தப் பத்து நாட்களிலா மாறப்போகிறது என்று காதலர்களின் பெற்றோர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள். ’தீர்க்க சுமங்கலியா இரு’ என்று நாயகனின் அம்மா நாயகியை உச்சிமோந்து ஆசிர்வதிக்கிறார். ’தீர்க்க ஆயுசா இருக்கணும்னு ஆசீர்வதியுங்கோ’ என்று நாயகியின் அம்மா கேட்டுக்கொள்கிறார். நாயகி பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு, ’அவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க. நான் தீர்க்க சுமங்கலியாதான் இருப்பேன். தீர்க்க ஆயுசு எனக்கு கிடையாது’ என்று சிரித்தபடியே சொல்கிறாள். ’ஏண்டி அசட்டுப் பெண்ணே… தீர்க்க ஆயுசும் உனக்கு உண்டுடி’ என்று நாயகனின் அம்மா கடிந்துகொள்கிறாள். ’உங்கள் மகனுக்கு தீர்க்க ஆயுசு இல்லாதபோது நான் எப்படி தீர்க்க ஆயுசு வாழ முடியும்?’ என்று கேட்பாள் நாயகி. ’நீ என்னடி சொல்றே’ என்று நாயகியின் அம்மா திடுக்கிடுவார். நாயகனுக்குப் புற்றுநோய் இருக்கிறது. இன்னும் ஆறேழு மாதத்தில் இறந்துவிடுவார் என்று நாயகி சொல்வாள்.

நாயகனின் அப்பா அதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரிப்பார். ’அடி அசடே… உன்னோட காதல் வலுவானதான்னு டெஸ்ட் பண்றதுக்காக நான் அப்படி ஒரு பொய் சொன்னேன். அதைப் போய் இன்னும் நம்பிண்டிருக்கியா’ என்று சொல்வார். இதைக் கேட்டதும் நாயகிக்குத் தூக்கிவாரிப்போடும். ஓவென்று அழுதபடியே மாடிக்குப் போய் அறைக்கதைவை தாழிட்டுக்கொள்வாள். நாயகனுக்கு நோய் இல்லை என்பது சந்தோஷத்தைத்தானே தரவேண்டும்… இவள் ஏன் அழுகிறாள் என்று எல்லாரும் குழம்பிப் போய் நிற்பார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஓர் உண்மை தெரியவரும்.

மருத்துவப் படிப்பு படித்து வந்த நாயகி, புற்றுநோயால் நாயகன் என்னவெல்லாம் துன்பத்தைப்படுகிறானோ அதையெல்லாம் தானும் படவேண்டும் என்று தீர்மானித்து புற்றுநோய்க்கு ஆளான நோயாளி ஒருவரின் ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டுவிட்டிருக்கிறாள். இது தெரிந்ததும் நாயகனின் அப்பா தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிடுகிறார். தாங்கள் செய்த ஒரு சோதனை இப்படிப் போய் முடிந்துவிட்டதே என்று பெற்றோர்கள் கதறி அழுகிறார்கள்.

ஒரு வாரம் கழிகிறது. நாயகனின் அம்மா நாயகியைத் தனியே சந்தித்துப் பேசுகிறார். ’உன்னோட காதலை நான் புரிஞ்சுக்கறேன். மதிக்கறேன். ஆனால், எனக்கு என் பையனை திருப்பிக் கொடுத்துடு. நீ நல்லபடியா இருந்தப்போ உங்க காதல் ஜெயிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆறேழு மாதத்துல சாகப்போற உன்னைக் கல்யாணம் பண்ணிண்டு என் பையம் காலம்பூரா அழறதை என்னால தாங்கிக்க முடியாது. நீ அவனை வெறுக்கற மாதிரி நடி… கொஞ்ச நாள் சோகத்துல அழுவான். அப்பறம், அவனை வேற எங்கயாவது கூட்டிண்டு போய் யாருக்காவது கல்யாணம் செஞ்சு வெச்சுடறோம். உன் காதலனோட நல்ல வாழ்க்கைக்காக உன் காதலை நீ தியாகம் செய்’ என்று கெஞ்சுகிறாள்.

‘நான் சாகற வரை அவர் கூட வாழ்ந்துக்கறேனே… அதுக்கு அப்பறம் நீங்க வேற கல்யாணம் பண்ணி வெசுக்கோங்களேன்’ என்று நாயகி அழுகிறாள். ’அது நடக்காதும்மா… நீ அவன் மனசுல காதலியா இருக்கறவரை அவனால உன்னை மறக்க முடியாது. நீ அவனை வெறுக்கணும். உன்னைப் போய் காதலிச்சோமேன்னு அவன் நினைக்கணும். அப்பத்தான் அவன் உன்னை மற்ந்துட்டு வேற ஒரு வாழ்க்கையை வாழ முடியும். அதுக்கு நீ அவனை வெறுக்கறமாதிரி நடிச்சுத்தான் ஆகணும். என் உயிர் போறதுக்குள்ள உன் தியாகத்தை என் பையன் கிட்ட நான் கட்டாயம் சொல்லுவேன். சொர்க்கத்துல உன்னைப் பார்க்க வரும்போது உன் மேல நல்ல எண்ணத்தோடதான் வருவான். இந்த பூமில அவனுக்கு இருக்கற வாழ்க்கையை நரகமா நீ ஆக்கிடாதே’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார். அதன்படியே, நாயகியும் நாயகனை வெறுப்பதுபோல் நடிக்கச் சம்மதிக்கிறாள்.

மறுநாள் பொழுது புலர்கிறது. நாயகன் படு உற்சாகத்துடன் நாயகியைப் பார்க்க வருகிறான். நாயகி அவனுக்கு ஒரு திருமண அழைப்பிதழைக் கொடுக்கிறாள். அதைக் கையில் வாங்கும் நாயகன், ஓ… அதற்குள் அழைப்பிதழே அச்சடித்தாயிற்றா என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான். மெளனமாக அவனை உற்றுப் பார்க்கும் நாயகி, ’அழைப்பிதழில் என்ன பெயர் போட்டிருக்கிறது’ என்று பார்க்கும்படிச் சொல்கிறாள். நாயகன், ’அது தெரியாதா என்ன… என் பெயரும் உன் பெயரும்தானே இருக்கப்போகிறது’ என்று அலட்சியமாகப் பார்க்கிறான். மணமகள் பெயராக நாயகியின் பெயர் இருக்கிறது. மணமகன் பெயராக அவளுடைய முறைப் பையனின் பெயர் இருக்கிறது. அதைப் பார்த்ததும் முதலில் திடுக்கிடும் நாயகன், பிறகு சிரித்தபடியே கேட்கிறான்: ’இது என்ன விளையாட்டு… உன் பேருக்குப் பக்கத்துல வேற எந்தப் பெயரும் இருக்கக்கூடாது’ என்று சொல்லி அந்த அழைப்பிதழைக் கிழிக்கப் போகிறான்.

‘என் பெயருக்குப் பக்கத்துல எந்தப் பெயர் வரணும்னு தீர்மானிக்க வேண்டியது நான். நீ இல்ல’ என்று நாயகி அந்த அழைப்பிதழை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறாள். முறைப்பையனின் பெயரை மென்மையாக முத்தமிடுகிறாள்.

நாயகனுக்குக் கோபம் வர ஆரம்பிக்கிறது. ’ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற’ என்று சீறுகிறான்.

‘இன்னும் கொஞ்ச நாள்ல சாகப்போற உன்னைக் கட்டிக்கிட்டு காலம்பூரா விதவையா இருக்க நான் தயாரில்லை.’

‘ஓ… இதுதான் சங்கதியா… நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன். எனக்குப் புற்றுநோய் இருக்குன்னு சொன்னது எங்க அப்பாவுக்கு நம்ம காதலோட பலம் என்னன்னு காட்டறதுக்காகத்தான். அது வெறும் ஒரு பொய்தான்.’

‘என்ன தைரியத்துல அதை நீ சொன்ன?’

‘நம்ம காதல் மேல் இருந்த தைரியத்துல சொன்னேன். உன் மேல் இருந்த நம்பிக்கைல சொன்னேன்.’

‘ஒருவேளை நான் அதைக் கேட்டு தற்கொலை பண்ணிட்டிருந்தா?’

‘நீ அப்படி செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஒரு நாள்ன்னாலும் நீ என் கூட வாழத்தான் விரும்புவ. அது எனக்குத் தெரியும்.’

‘இல்லை… உனக்கு நோய்ன்னதும் நான் செத்திடுவேன். இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழலாம்னு நீ நினைச்சிருப்ப. அதனால்தான் அப்படி சொல்லியிருக்க.’

‘ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா பேசற?’

‘அப்போ என் உயிரைப் பணயம் வெச்சு நீ செஞ்சது பைத்தியக்காரத்தனம் இல்லையா?’

‘நான் அப்படி என்ன செஞ்சிட்டேன். நம்ம காதலை நிரூபிக்க நாம ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்கறதா முடிவெடுத்தோமே. அதுமாதிரிதான் இந்த முடிவை எடுத்தேன்.’

‘அது நாம ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு. இது நீயாவே எடுத்த முடிவு…’

‘நானாவே எடுத்த முடிவாவே அது இருக்கட்டும். நாம ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு எடுத்த முடிவுகூட நீதான் முதல்ல எடுத்த. நான் வேண்டாம்னுதான் சொன்னேன். கடைசில உனக்காக நான் விட்டுக்கொடுக்கலையா?’

‘அதுலகூட எனக்கு சந்தேகம் இருக்கு. ஒரு வருஷம் பாக்காதேன்னு சொன்னதும் ஏதோ கொஞ்சம் டிராமா போட்டுட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே… உண்மையான காதல் இருந்தா யாராவது இப்படி செய்வாங்களா?’

‘என்ன பேசற நீ… நம்ம காதலை நிரூபிக்கத்தான அதைச் செஞ்சேன். அதையும் நீ சொல்லித்தான செஞ்சேன்.’

‘அப்படியா… சாப்பிடும்போது நீ வேண்டாம்னு சொன்னா இன்னும் கொஞ்சம் சாப்பிடுன்னு போடத்தான செய்வாங்க உங்க அம்மா… அதுதான் உண்மையான பாசம். எப்படா போதும்ன்னு சொல்வாங்கன்னு பாத்திரத்தை எடுத்துட்டு உள்ள போனா என்ன அர்த்தம்?’

‘எதை எதோட முடிச்சுபோடறதுன்னு தெரிஞ்சுதான் சொல்றியா?’

‘ஆமாம், தெரிஞ்சுதான் சொல்றேன். நான் பிரிஞ்சு இருப்போம்னு சொன்னா நீ என்ன செஞ்சிருக்கணும்… உன்னைப் பாக்காம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது… இவங்களுக்கு நாம எதுக்காக நம்ம காதலோட பலத்தை நிரூபிக்கணும் அப்படின்னு பேசி எதிர்த்திருக்கவேண்டாமா?’

‘நான் அப்படித்தான செஞ்சேன். நீதான் போயிடுன்னு சொன்ன?’

‘ஓ… நான் சொன்னதுனால போனியா… அப்ப சரி இப்பவும் அதையே சொல்றேன் போயிடு… திரும்பிப் பாக்காம போயிடு.’

‘ஐயோ சப்னா… என்னைக் கொல்லாத. உன்னைப் பாக்கணுங்கறதுக்காக ஓடோடி வந்திருக்கேன். இனியும் இந்தப் பிரிவை என்னால தாங்கிக்க முடியாது. என்னைச் சித்ரவதை செய்யாத.’

‘புற்றுநோய்ன்னு சொல்லி நீ என்னை சித்ரவதை செஞ்சியே அது மட்டும் நியாயமா…’

‘சரி… பழிக்கு பழி வாங்கியாச்சுல்ல… என்னை மன்னிசுடு… ஆனா மறந்துடுன்னு மட்டும் சொல்லாத சப்னா.’

‘உன்னை மன்னிக்க நான் யாரு… என்னை நினைச்சிட்டிருக்க நீ யாரு?’

‘ஏன் சப்னா இப்படிப் பேசற’

‘நான் பேசலை மிஸ்டர் வாசு… நீங்கதான் என்னைப் பேச வெச்சிட்டீங்க. குட்பை ஃபார் ஆல்’ – என்று சொல்லி கதவை முகத்துக்கு நேராக அறைந்து சாத்திவிட்டு உள்ளே போகிறாள். சத்தம் வெளியே கேட்காமல் அழுகிறாள்.

நாயகனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ஆத்திரத்தில் குடிக்கிறான். உடனே விமானம் பிடித்து பறந்து சென்று அந்த கைம்பெண்ணை அழைத்துவருகிறான். நாயகிக்குத் திருமணம் நிச்சயித்திருந்த அதே நாளில் ஒரு மணி நேரம் முன்னதாக தனது திருமணத்தை நடத்தத் தீர்மானிக்கிறான். அதன்படியே திருமணத்தை செய்துகொண்டு நாயகியின் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்துக்கு மணக்கோலத்துடன் போகிறான். அந்த மண்டபமோ வெறிச்சோடிக் கிடக்கிறது. நேராக நாயகியின் வீட்டுக்கு பைக்கில் விரைகிறான். அங்கும் யாரும் இல்லாமல் இருக்கவே, அருகில் இருக்கும் வீட்டில் விசாரிக்கிறான். நாயகி ரத்த வாந்தி எடுத்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் சொல்கிறார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடையும் நாயகன் நேராக மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கு அவனுக்கு நடந்த உண்மை தெரியவருகிறது. இடிந்துபோய் உட்கார்ந்துவிடுகிறான்.

சிறிது நேரம் கழித்து கண்களைத் துடைத்துக்கொண்டு சந்தியாவின் கையைப் பிடித்துக்கொண்டு சப்னா படுத்திருக்கும் வார்டுக்குச் செல்கிறான். சப்னா மணக்கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக வாழ்த்துகிறாள். ’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். வரும்போது எதைக் கொண்டுவந்தோம். போகும்போதுதான் எதைக் கொண்டு போகப் போகிறோம்’ என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

வாசு எதுவும் பேசாமல் அவளுக்கு அருகில் உட்காருகிறான். பிளாஸ்கில் இருக்கும் பாலை ஊற்றி அவளுக்குக் கொடுக்கிறான். மெள்ள அவளுடைய நெற்றியை வருடியபடியே புன்முறுவல் பூக்கிறான். அப்போது ஒரு நர்ஸ் சப்னாவுக்கு ஊசி போட வருகிறார். வாசு டிரேயில் இருக்கும் சிரிஞ்சை எடுத்துக்கொடுக்கிறான். மருந்து பாட்டிலை எடுத்து நர்ஸ் அதை நிரப்பிக் கொள்கிறாள். ’நான் போட்டுவிடட்டுமா?’ என்று நாயகியிடம் கேட்கிறான் நாயகன். ’ஐய்யோ… வேண்டாம்பா… நீ ஓங்கி குத்திடுவ. நர்ஸே போடட்டும்’ என்று சொல்கிறாள். ’இல்லை வலிக்காம போடறேன். நீ கண்ணை நல்லா மூடிட்டு முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கோ’ என்று சொல்கிறான். அதன்படியே அவள் செய்கிறாள். நாயகன் கைக்கு அருகில் கொண்டு சென்றதும் ஊசியில் இருக்கும் மருந்தை கீழே கொட்டிவிட்டு, வெறும் ஊசியை நாயகியின் நரம்பில் குத்தி ரத்தத்தை உறிஞ்சுகிறான். நாயகிக்கு எதுவும் தெரியவில்லை. நர்ஸுக்கு ஏதோ அசம்பாவிதம் நடப்பதுபோல் தோன்றவே என்ன என்று நெருங்கிப் பார்க்கிறார். ஊசி முழுவதும் ரத்தம் இருப்பது தெரிகிறது. அவர் அதிர்ச்சி அடைந்து கத்துவதற்குள் சட்டென்று அதை எடுத்து நாயகன் தன் உடம்பில் செலுத்திக்கொண்டுவிடுகிறான். நர்ஸ் அதைப் பார்த்ததும் அலறுகிறாள்.

நாயகியும் கண்ணைத் திறந்து என்ன நடந்ததென்று பதறியபடியே கேட்கிறாள். நாயகன் ரத்தச் சொட்டுகள் இருக்கும் ஊசியை முத்தமிட்டபடியே, ’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். வரும்போதுதான் எதையும் கொண்டு வரவில்லை… போகும்போதாவது எதையாவது கொண்டு செல்வோமே’ என்று சொல்லியபடியே சப்னாவை நெருங்கி அணைத்து முத்தமிடுகிறான். சப்னா அவன் செய்ததைப் பார்த்து அழுதபடியே அவனைக் கட்டித் தழுவுகிறாள். இருவரும் சட்டென்று ஏதோ நினைவு வந்தவர்களாக திரும்பிப் பார்க்கிறார்கள். சந்தியா இதழோரம் புன்னகையும் கண்களில் கண்ணீருமாக நின்றுகொண்டிருக்கிறாள். பிறகு நிதானமாக, எனக்கு இது பழகிப் போனதுதான் என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து நாயகனிடம் கொடுக்கிறாள். அதை அவன் நாயகியின் கழுத்தில் கட்டுகிறான். சந்தியா தன் கழுத்தில் கிடக்கும் மாலையை நாயகியின் கழுத்தில் போடுகிறாள். காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள். இருவருடைய பெற்றோர்களும் அவர்களுடைய நிலையைப் பார்த்து அழுகிறார்கள். நாயகன் தன்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லாரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்கிறான். முடியாமல் கடைசியில் அவனும் அழுகிறான்.

மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், என்ன பலனும் இல்லாமல் நோய் முற்றத் தொடங்குகிறது. இதனிடையில், சந்தியாவுக்கும் அந்த முறைப்பையனுக்கும் திருமணம் நடக்கிறது. நாயகனும் நாயகியும் அவர்களை வாழ்த்துகிறார்கள். இன்னும் சில நாள்களில் நாயகி இறந்துவிடுவாள் என்பது தெரியவருகிறது. நீ இறந்த பிறகு நான் இந்த உலகில் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டேன் என்று நாயகன் சொல்கிறேன். இருவரும் ஒன்றாக இறக்க முடிவெடுக்கிறார்கள்.

மருத்துவர்களின் அனுமதி பெற்று ஒரு நாள் வெளியில் செல்கிறார்கள். காதலித்தபோது போன இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். சந்தோஷமாகப் பாடப்பட்ட பாடல்கள் இப்போது சோகமாகப் பாடப்படுகிறது. கடற்கரையில் ஓடி விளையாடுகிறார்கள். பாழடைந்த மண்டபத்தில் விளையாடுகிறார்கள். மலைக் கோயிலுக்குப் போய் தொழுகிறார்கள். கடைசியில் மலை உச்சிக்குப் போகிறார்கள். காலா வா.. உன்னைக் காலால் எட்டி உதைப்பேன் என்ற பாரதியின் பாடலை நாயகன் வீராவேசமாகப் பாடுகிறான். நீ யார் எங்கள் உயிரை எடுக்க… எங்கள் வாழ்க்கையை நாங்கள்தான் தீர்மானித்தோம். எங்கள் மரணத்தையும் நாங்களே தீர்மானிப்போம் என்று சொல்லியபடி மேலிருந்து குதிக்கிறார்கள். அலைகள் உரசும் கடல் கரையை வந்து சேர்கின்றன அவர்களுடைய உடல்கள். அலை என்னதான் அடித்தாலும் இணைந்த அந்தக் கைகளை பிரிக்கவே முடியவில்லை.

காதல் பலரை வாழ வைத்திருக்கிறது. ஒரு சிலரே காதலை வாழ வைக்கிறார்கள்.

அன்று அம்பிகாவதி – அமராவதி

நேற்று ரோமியோ – ஜூலியட்

இன்று வாசு – சப்னா

காதலர்கள் இறக்கலாம்… காதல் ஒருபோதும் இறக்காது

No comments:

Post a Comment