Monday, August 12, 2013

எல்லையில் தொடரும் பாகிஸ்தான் தாக்குதல்! விடிய விடிய துப்பாக்கி சண்டை!!


கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுட்டதில் 5 இந்திய வீரர்கள் பலியான பதற்றம் தணிவதற்குள் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அதே பூஞ்ச் மாவட்டத்தில் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததால் விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா, செய்தியாளர்களிடம்,”ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10.20 மணிக்குத் தொடங்கிய இந்த தாக்குதல் சனிக்கிழமை அதிகாலை வரை, அதாவது சுமார் 7 மணி நேரம் நடந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் 7,000 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டும், பீரங்கி குண்டுகளை வெடித்தும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.பாகிஸ்தானின் சமீபத்திய அத்துமீறல்களில் இதுவே மிகப் பெரியதாகும்.இந்தத் தாக்குதல்களால் இந்திய வீரர்களுக்கு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. எனினும், எல்லையில் கடும் பதற்றம் நிலவிவருகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் துப்பாக்கியால் சுடும் சப்தமும், பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சப்தமும் பூஞ்ச் நகரம் வரை கேட்டது என்றும் இதனால் உள்ளூர் மக்கள் கடும் பீதியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே கடந்த ஜனவரி 8-ம் தேதி பூஞ்ச் பகுதியில் இந்திய வீரரின் தலையைத் துண்டித்தும், மற்றொரு வீரரின் உடலை சிதைத்தும் பாகிஸ்தான் வீரர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை கூட்டத்தின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பேச்சுவார்த்தையைத் தொடர திட்டமிடப்பட்டது.ஆனால், இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் பிரதமருடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால் இரு நாட்டுப் பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் விமானப் படை முன்னாள் தளபதி அனில் டிப்னிஸ் தனியார் டி விக்கு அளித்த ஒரு பேட்டியில் ”அமெரிக்காவில் அதிபர் பதவி வகிப்பவர் அடிக்கடி தங்கள் ராணுவ கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்துவார். ஆப்கானிஸ்தான் அல்லது ஈராக்கில் பணியில் இருக்கும் கமாண்டர்களுடனும், அவர் அவ்வப்போது பேசத் தவறுவதில்லை. அதிலும் கமாண்டர்களை அவர் நேருக்கு நேர் சந்திப்பார்.ஆனால் நம் நாட்டில் முப்படை தளபதிகள் பிரதமரை சந்திப்ப தில்லை.

இனியாவது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து முப்படை தளபதிகள், பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சருடன், அடிக்கடி ஆலோசனை நடத்த வேண்டும். பிரதமரை அணுகி முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கும் உரிமை முப்படை தளபதிகளுக்கு உண்டு.எல்லை தாண்டாமலேயே தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அண்டை நாட்டில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படையினர் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், இதைச் செய்ய சரியான உளவுத் தகவல்கள் கிடைக்க வேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்க முடியும். பயங்கரவாதிகளை அழிக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியும்.”என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment