Saturday, August 24, 2013

எண்பதுகளின் கிளியோபெட்ரா ..

இந்தியாவின் மர்லின் மன்றோ ..
எண்பதுகளின் கிளியோபெட்ரா ..
இளைஞர்களின் இமைகளை திருடி சென்ற பூலான் தேவி ..
காமனின் கரும்பு வில்...
மேனகையின் கருப்பு க்ளோனிங்....

சில்க்.. இந்த மூன்றெழுத்து 80களில் செய்த மாற்றங்கள் இன்றைய 50 வயது ஆட்களை கேட்டால் தெரியும்... இன்னமும் கிராமத்து டீ கடை, சலூன் கடைகளை பார்த்தால் சில்க் வாழ்வது புரியும்...

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம், சில்க் நடிக்காத படத்தை பார்க்க வேண்டாம் என்று, 80களில் இந்திய சினிமாவை ஆட்டி படைத்த செல்லுலாயிடு சொர்க்கம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை பார்ப்போம். ஹாலிவூட் நடிகை மர்லின் மன்றோ போலவே புகழப்பட்ட சில்க்கின் வாழ்வு, அவரைப்போலவே, புகழும், பணமும், போதையும், நம்பிக்கைகளும், கண்ணீரும் இறுதியில் மர்மமான மரணமும் என்று முடிந்து போனது. 1980-1990 பத்து ஆண்டுகளில் இந்திய சினிமாவை ஆட்சி செய்த நடிகர் கமல், நடிகை சில்க் என்று அப்போது இண்டியா டுடே பத்திரிகை புலனாய்வு செய்து வெளியிட்டது. அப்படியானால் அவர் சினிமா பிரபலத்தை தெரிந்து கொள்ளலாம்.

அது 1979 வண்டிச்சக்கரம் வெளியான ஆண்டு, ஸ்மிதா என்ற கருப்பான,குள்ளமான ஆனால் கிறக்கும் விழிகளும், கட்டுகோப்பான உடலுமாய் ஒரு நடிகை திரையில் தோன்றினார்.. "வா மச்சான் வா .. வண்ணாரபேட்டை .. சிலுக்கோட கையால வாங்கி குடி .. என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஜிவ்வென போதை போல பரவியது. ஸ்மிதா சிலுக்கு ஆனார். பெண்களுக்கும் பிடித்த கவர்ச்சி நடிகை என்று சில்க் பாராட்டபட்டார்.

வண்டிசக்கரம் படம் அடுத்து இணையே தேடி என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

வண்டிசக்கரம் பட வெற்றி ஏகப்பட்ட படங்களை அவருக்கு குவித்து விட்டது. எல்லோருக்கும் 8 மணி நேர கால்ஷீட் என்றால் சில்க் 4 மணி நேர கால்ஷீட் மட்டுமே அந்த கால கட்டத்தில் கொடுப்பாராம். அவ்வளவு அவருக்கு கிராக்கி. ஒரே நாளில் 5 படத்தில் நடித்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அலைகள் ஓய்வதில்லை, மூன்று முகம், சகல கலா வல்லவன் என தொடர் வெற்றிகள் இவரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி என மாற்றிவிட்டது.

ஒரு முறை படபிடிப்பின் இடைவெளியின் போது இவர் கடித்து வைத்த ஆப்பிள் விளையாட்டாக ஏலம் போட்டபோது, சில ஆயிரம் வரை ஏலம் போனதாம். அத்தனை ஈர்ப்பு அந்த நடிகையின் மீது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் நடித்தார். எந்த மொழியும் அவருக்கு பொருட்டல்ல, காரணம் அவர் கண் தான் படங்களில் பேசியது. எல்லா படங்களிலும் வெறும் கவர்ச்சி ஆட்டம் மட்டும் போடாமல், கதையோடு கூடிய நல்ல பாத்திரங்களும் செய்தார்.

இன்று இவரது வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இவர் வேடம் போட்டவருக்கு கூட தேசிய விருது கிடைக்கிறது. அப்படி என்ன அத்தனை சுவாரஸ்யமானதா சில்க்கின் வாழ்க்கை. ஆமாம், அவர் கடந்து வந்த வாழ்க்கை சவால்களும், அவமானங்களும், நம்பிக்கை துரோகங்களும் நிறைந்தவை தான். காண்போம்,

ஆந்திர மாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்த விஜயலட்சுமி (பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர்) தாங்க முடியாத வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. சிறு வயதிலேயே இவரது கவர்ந்திழுக்கும் தோற்றத்தின் காரணமாக பலரால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். திருமண வாழ்வும் சரியாக அமையாததால் இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடி ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார். இங்கும் வறுமை வாட்டியது.

முதன்முதலில் விஜயலட்சுமி தனது திரை உலக வாழ்க்கையை ஜூனியர் நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக தொடங்கினார். ஏக்கத்தோடே அவர்களுக்கு ஒப்பனை செய்து வருவார். ஒரு நேரத்தில் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்கிற ஒரு வேடத்தில் சாராயம் விற்பவராக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார். வண்டிச்சக்கரத்தில் நடித்த பின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது பெயராக ஆயின. விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவானார். அதிர்ஷ்ட லட்சுமியும் ஸ்மிதாவிடம் சேர்ந்து கொண்டாள்.

தொடர் வெற்றி, ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படம் கூட சில்க் நடித்து இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற நிலையே அப்போது ஏற்ப்பட்டது. தேசிய விருது பெற்ற மூன்றாம் பிறை படம் கூட சில்க் ஸ்மிதா பாத்திரத்தை இணைத்த பிறகே படம் விலை போனது. மூன்றாம் பிறை படத்தின் ஹிந்தி உருவாக்கத்தின் வழியே (சாத்மா) பாலிவூட்டில் சில்க் ஸ்மிதா நுழைந்தார்.

No comments:

Post a Comment