Friday, August 16, 2013

தங்கக்காசுகளுக்கு இனி குட்பை- யாம்..


‘தங்கத்தை வாங்காதீங்க, தங்கமும் பித்தளை, வெண்கலம் போன்ற ஒரு உலோகம் தான்’ என்று மேதாவித்தனமாக சொன்னதோடு கடந்த மாத அறிக்கையில் இனி அனைத்து வங்கிகளும் தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள் விற்கக் கூடாது என்று தடை போட்ட மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் அதோடு நில்லாமல் வியாபாரிகளும் இனி தங்கக்காசுகள், மற்றும் தங்க கட்டிகள் விற்கக்கூடாது என்ற உத்திரவையும் பிறப்பித்தார். அதன் விளைவாக இன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து தங்க நகை விற்பனையாளர்களும் தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள் இனி விற்பனை இல்லை என்று அறிவித்துவிட்டனர்.

தங்கத்தின் விலை அதளபாதாளத்திற்கு செல்லப்போகின்றது என்று கடந்த நான்கைந்து மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை ரூ.2400க்கும் கீழே ஒரு கிராமின் விலை சென்றபோது கையில் பணம் வைத்திருந்த பலர் தங்கக்காசுகளை அங்காங்கே உள்ள நகைக்கடைகளுக்கு சென்று க்யூவில் நின்று வாங்கிக்கொண்டு வந்தனர்.. ஒரு சிலர் தங்கம் விலை இன்னும் குறையும், கிராமின் விலை ரூ.2000த்தை தொடும் என்று நம்பியிருந்தவர் களுக்கு இப்போது இந்த தங்கக்காசு விற்பனை நிறுத்தம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தங்கக் காசுகள் விற்பனையை நிறுத்திவிட்டால் தங்கத்தின் விலை இதன் காரணமாக குறையுமா என்றால் நிச்சயமாக குறைய வாய்ப்பில்லை என்று சொல்கின்றார்கள் பொருளாதார மேதைகள்.. (ப.சிதம்பரம், மன்மோகன் சிங் தவிர) தங்கம் வாங்க நினைப்போர் தங்கம் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்.. தங்கக்காசுகள் வாங்கினால் சேதாரம் 1முதல் 2 சதவீதம் வரை இருக்கும்.. ஆனால் ஆபரணங்கள் வாங்கும் போது சேதாரம் சற்று கூடுதலாக இருக்கும். ஏற்கெனவே ஆபரண நகைகளுக்கு சேதாரத்தை சில நகைக்கடைகள் குறைத்துவிட்ட நிலையில் தங்கக்காசுகள் விற்பனை இல்லாமல் போகும் போது இன்னும் ஆபரண நகைகளில் மீது சேதாரத்தை குறைத்து விற்பனை செய்தாக வேண்டும். எனவே தங்கக்காசுகளுக்கு பதிலாக தங்க ஆபரணங்கள் வாங்கிக்கொள்வார் கள் முதலீட்டாளர்கள்.. ஆனால் இதனை திரும்பக்கொடுக்கும் போது அன்றைய மார்க்கெட் மதிப்பிற்கு தங்கக்காசுக்கு கிடைப்பதுபோல பணம் கிடைக்காது.

ஸ்விஸ் வங்கிககளில் பதுக்கிவைத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை கொண்டுவந்தாலே நம் நாட்டில் பொருளாதாரச் சரிவை சீர்தூக்கி நிறுத்தமுடியும். ஆனால் இதைப்பற்றி எந்த மந்திரியும் வாய்திறப்பதில்லை. மக்களைத்தான் சுரண்டுகின்றார்கள்.. மக்கள் மீதுதான் அனைத்து வரிகளையும் சுமத்துகின்றார்கள். தாங்கள் சேர்த்து வைக்கும் பணத்தை எதில் போட்டாலும் திரும்பிவராத சூழ்நிலையில் சிறுகச்சிறுக சேமித்து வைக்கும் பணத்திற்கு சற்றேனும் லாபம் கிடைக்குமா என்றெண்ணி தான் மக்கள் தங்கத்தின் மீது நம்பிக்கையோடு பணத்தை முதலீடு செய்கின்றார் கள். அதிலேயும் மக்கள் எந்தப்பயனையும் அடைந்துவிடக்கூடாது என்று முடிவு எடுத்துவிட்டார் ப.சிதம்பரம்.

கடந்த நான்கு மாதங்களில் அவ்வளவு ஏறுமுகமாக இல்லாத நிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்று திடீரென கிராம் ஒன்று ரூ.2904/- க்கு விற்கப்படுகின்றது. நேற்றைய விலையை ஒப்பிடுகையைல் கிராமுக்கு இன்று அதிரடியாக ரூ. 127 கூடி உள்ளது.

தங்கம் இறக்குமதி செய்யாமல் போனால் தங்கத்தின் விலை குறையும் என்று சொல்வது ஒரு பொருளாதார மேதையின் தவறான கணிப்பு.. இன்னும் சில மாதங்களில் தங்கத்தின் விலை கூடத்தான் செய்யும்.. எப்போது நமது நாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்கின்றதோ அப்போது தான் நாட்டின் பொருளாதாரம் தலை தூக்கும்.. அதுவரை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே சென்று கொண்டுதானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment