Saturday, August 24, 2013

ஓடம் நதியினிலே .. ஒருத்தி மட்டும் கரையினிலே ..

ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இவரே மாதிரி..(நடிப்பில்) 
எப்படி இருக்க கூடாது என்பதற்கு இவரே சாட்சி ..(நம்பி ஏமாறுவதில்..)

ஆந்திராவின் விஜயவாடா நகரில் 1937ல் பிறந்தார். பூரண சாஸ்த்ரி என்பவரிடம் நடனம் கற்று விஜயவாடாவில் நடன அரங்கேற்றம். ஆட்டோமொபைல் வியாபாரியான பெரியப்பா வளர்ப்பில் ஆந்திராவெங்கும் நடனம் ஆடினார். ஒன்பதாவது வரை படிப்பு. 1950-ல் தெலுங்கு சம்சாரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி திரை உலகில் நுழைந்தவர் சாவித்திரி. பெரியப்பா கே.வி.சௌத்ரி அவர்களின் முயற்சியால் சினிமாவில் நுழைந்து பட உலகில் வலம் வந்தார். தொடந்து தமிழ்,தெலுங்கில் நிறைய படங்கள். தேவதாஸ் என்ற ஒரு படமே சாவித்ரியை தென் இந்திய திரைப்படத்தில் மிகப்பெரிய நடிகையாக மாற்றிவிட்டது.
மிஸ்ஸியம்மா, அமரதீபம், என வெற்றி படங்களின் எண்ணிக்கை தொடர்ந்தது. 1953-ல் மனம் போல மாங்கலயம் படத்தில் தான் ஜெமினி கணேசனை முதலில் சந்தித்தார். படபிடிப்பிலேயே காதல் தொடங்கியது. மிஸ்ஸியம்மா படத்தில் காதல் உறுதியானது. எனினும் இருவரும் சொல்லி கொள்ளவில்லை. காரணம் அப்போது ஜெமினி இருமுறை திருமணம் செய்து இருந்தார். அலமேலு என்ற பாப்ஜியோடு நுங்கம்பாக்கத்தில் குடி இருந்தார். தன்னுடன் நடித்த நடிகை புஷ்பவல்லியையும் திருமணம் செய்து இருந்தார். நடிகை ரேகாவின் அம்மா புஷ்பவல்லி. இருப்பினும் சாவித்திரி மேல் இருந்த காதலையும் ஜெமினியால் மறக்க முடியவில்லை.

ஒருநாள் இரவு சாவித்ரியும், அவர் தோழி தாட்சாயணியும் ஜெமினியை தேடி அவர் வீட்டுக்கே சென்று விட்டார்கள் காரணம், ஜெமினியை சாவித்திரி விரும்புவதை தெரிந்து கொண்ட சாவித்ரியின் பெரியப்பா துப்பாக்கியோடு சாவித்ரியை மிரட்டி, ஜெமினியை சுட்டுவிடுவதாகவும் சொல்ல, அங்கிருந்து கெளம்பி விட்டதாக சாவித்திரி சொன்னார். இரவு அங்கேயே தங்கிய சாவித்திரி பெரியப்பாவின் பிடியில் தான் படும் கஷ்டங்களை சொன்னார். சாவித்ரிக்கு ஆதரவாக ஜெமினி இருப்பதாக ஜெமினி ஆறுதல் சொன்னார்.

தொடர்ந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஜெமினி-சாவித்திரி படங்களினால் அப்போது ரசிகர்களே அவர்களின் திருமணத்தை விரும்பினர். சாவித்திரி வேறு யாரோடு நடித்தாலும் அது ஓடுமா என்ற நிலை. ஒரே நேரத்தில் அவர்களுக்கு 10 படங்கள் ஒப்பந்தம் ஆகி வேறு இருந்தது. இந்நிலையில் தான் இந்த சம்பவம். ஒரு வழியாக திரை உலக பிரபலங்கள் உதவியோடு 1956 செப்டம்பரில் சாவித்திரி ஜெமினி திருமணம் நடை பெற்றது. அபிராமபுரத்தில் தனி வீடு வாழ்க்கை இனிமையாக மாறியது. தொடர்ந்து நடித்தார். பணம் கொட்டியது.

1958ல் கர்ப்பமானதால் படங்களில் நடிக்க முடியாமல் சில மாதங்கள் ஓய்வு எடுத்தார். நிறைய தெலுங்கு, தமிழ் தயாரிப்பாளர்கள் தவித்து போனார்கள். அப்போது அவர் நடிக்காமல் போன படங்கள் கல்யாண பரிசு, நல்ல தீர்ப்பு போன்றவை. முதல் குழந்தை பெண் சாமுண்டீஸ்வரி பிறந்தார். பிறகும் நடிப்பு தொடர்ந்தது 1959-ல் பாசமலர், பார்த்தால் பசி தீரும், பாவமன்னிப்பு என வெற்றி தொடர்ந்தது. 1960-ல் சின்னாரி பாப்பலு என்ற தெலுங்கு குழந்தைகள் படத்தை சாவித்திரி இயக்கினார். படம் அமோக வெற்றி. தமிழில் அந்த படம் குழந்தை உள்ளம் என்ற பெயரில் கூட வந்தது. சுமாரான வெற்றி. 100 படங்கள் முடித்த சாவித்ரிக்கு 1965-ல் சதீஷ் என்ற மகனும் பிறந்தார். நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் என குண்டு உருவத்திலும் இவர் வெற்றி தொடர்ந்தது. எம்.ஜி.யாரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி, என்.டி .யாரோடு ஏகப்பட்ட படங்கள் நடித்தார்.

ஒரு முறை வடநாட்டுக்கு சென்று இருந்த போது அங்கு இருந்த பத்திரிகையாளர் "இவ்ளோ குண்டாக இருக்கும் உங்களை எப்படி தென் இந்திய ரசிகர்கள் வெற்றி பெற செய்தார்கள் என்று கேட்க, உடனே சாவித்திரி "எங்கள் ஊரில் நடிப்பை கழுத்துக்கு மேலே தான் பார்ப்பார்கள்" என்று கோவமாக தெரிவித்தார். இயல்பான அழகு, காண்பவரை தம் வசம் இழக்க செய்யும் அற்புத நடிப்பு, குழந்தை உள்ளம், சட்டென்ற கோவம் என சாவித்திரி திரை உலகின் உச்ச நட்சத்திரமாய் வாழ்ந்தார். கண்ணதாசனின் சொந்த படமான ரத்த திலகம் படத்தில் நடித்த போது கால்ஷீட் விஷயத்தால் நிதானம் இழந்த கண்ணதாசன் மோசமாக சாவித்ரியை பேசி விட, அதை கேட்டு விட்ட சாவித்திரி அந்த படத்திலே நடிக்க மாட்டேன் என்று வேட்டைக்காரன் படத்துக்கு அந்த தேதிகளை கொடுத்து விட்டார். பின்னர் மனமிரங்கி நடித்தும் கொடுத்தார். வருபவர்க்கேல்லாம் வாரி வழங்கும் குணம் கொண்ட அப்போதைய நடிகை சாவித்திரி. மற்றொருவர் அஞ்சலிதேவி அவர்கள்.

1967வரை வெற்றி தொடர, புராண படங்களில் சக்தியாக, சரஸ்வதியாக வாழ்ந்தார். தனுஸ்கோடி புயலில் சிக்கி மறுஜென்மம் பெற்று வந்தார். 1970வரை வாழ்க்கை நல்லபடியாகவே சென்றது .. பிறகு மெல்ல புயல் வீச தொடங்கியது.. அது தெரியாமல் இந்த மென்மலர் சிரித்துக்கொண்டே இருந்தது.

ஏராளமான செல்வம், ஏகப்பட்ட புகழ், அழகிய குழந்தைகள் என்று மகிழ்ந்து இருந்த நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்வில் 1968 முதலே குழப்பங்கள் ஏற்பட்டன. குண்டான உடலை குறைக்க, நீந்தவென்று தன் ஹபிபுல்லா வீட்டில் தென் மூலையில் ஒரு நீச்சல் குளம் கட்டினார். வாஸ்து படி அது தவறு என்றும் அதனாலே வீழ்ச்சி என்றும் பலர் நம்பினார். தனுஷ்கோடி சென்ற சாவித்திரி தங்க கொலுசோடு அங்கு கடலில் கால் வைத்ததாலே அவருக்கு தொல்லைகள் வந்தன வென்றும் மக்கள் இன்றும் பேசிக்கொள்கின்றனர். சான்ஸ் குறைந்ததால் சிவாஜி அவர்களை வைத்து "பிராப்தம்" என்று சொந்த படம் எடுத்தார்.

படம் பெரும் தோல்வி. பொருள் நஷ்டம். சொத்து தொலைந்தது. கடன் பிரச்னை தொடர்ந்தது. ஜெமினி பிரிந்தார். கூடவே இருந்த பல "நல்லவர்கள்" அந்த அற்புத நடிகைக்கு வாய்ப்பு வர விடாது பார்த்துக்கொண்டார்கள். சோகம் மறக்க குடிக்க ஆரம்பித்தார். வருமான வரி தொல்லை வேறு தொடர்ந்து கொண்டிருந்தது. மிச்சம் மீதம் இருந்த சொத்துகளை உறவுகள் என்று சொல்லிக்கொண்டோர், பலதும் கூறி பிடுங்கிக்கொண்டு பரிதவிக்க விட்டனர். 1973ல் மகள் சாமுண்டேஸ்வரி திருமணத்தை நடத்தினார். வறுமை தொடர்ந்தது.

சக்கரை வியாதி, ரத்த அழுத்தம் என் 42 வயதிலேயே உடல் உருகி, மெலிந்து சீரழிந்து போனார், அந்த அழகு தேவதை. சில படங்களில் அம்மா,அக்கா வேடங்கள் கிடைத்தன. வாழ்ந்த காலத்தில் லட்சகணக்கில் ஏழைகளுக்கு வாரி கொடுத்த சாவித்திரி அப்போது சீந்துவார் யாருமின்றி வாழ்ந்தார். தன்னிடம் முன்பு கார் ஒட்டிய ஓட்டுனர் தன மகளுக்கு திருமணம் என்று அழைக்க வந்தபோதும், தன்னிடமிருந்த ஒரே பட்டு சேலையை பக்கத்தில் கொடுத்து விற்க சொல்லி அந்த பணத்தை கொடுத்து அனுப்பினாராம். நடித்த போது தராமல் போன அவரின் சம்பள பாக்கியே சில லட்சங்கள் தேறுமாம். எவரும் தரவில்லை.

சாவித்திரி பிரபலமாய் இருந்த காலத்தில் ஒரு ரசிகர் விலாசம் ஏதும் குறிப்பிடாமல் மாதம் தோறும் பத்து ரூபாய் அவருக்கு அனுப்பி வைப்பாராம். சாவித்ரியும் அதை அனுப்பியவர் நலமாய் இருக்க வேண்டி கோயிலுக்கு அனுப்பி விடுவாராம். காலத்தின் கோலம், சாவித்திரி கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலத்தில் அவரும் பார்க்க வந்து அவர் கஷ்டங்களை சொல்ல, கலங்கி போன சாவித்திரி, தன்னிடம் மிச்சம் மீதமீருந்த பித்தளை கோப்பைகள், ஷீல்டுகளை விற்று ஒரு தொகையை அவரிடம் கொடுத்து அனுப்பினாராம்.

"ராஜபார்வை படத்தின் தொடக்க விழா அழைப்பிதழ் கொடுக்க அம்மாவை தேடி போனேன், அவர் இருந்த சந்தில் என் கார் போகாது. நிறுத்திவிட்டு விசாரித்து போனேன், பத்துக்கு பத்து அறை. வாசலில் குத்துகாலிட்டு உக்கார்ந்து இருந்தார். அழகெல்லாம் வடிந்து போய், ஒல்லியாய், கருப்பாய். மிக கம்பீரமாய் காரை விட்டு இறங்கி எல்லோருக்கும் முதலில் சிரிப்பை பரிமாறும் அந்த நடிப்பு தேவதை என் கண்ணில் வந்து கண்ணீரை கொடுத்து விட்டு போனது. என்னை கண்டதும் மெல்ல தயங்கி, கண்டுகொண்ட பின், வா வா உள்ள என்று அழைத்து, இங்க உக்கார வக்க கூட இங்க வசதி இல்லன்னு சொன்னதும், இங்கயா இருக்கீங்க என்று கேட்டதும், அம்மா எனக்கு என்ன குறை நல்லாத்தான் இருக்கேன்.. கண்ணீரை மறைத்து கொண்டு என் சொந்த பட பூஜை உங்கள கூப்பிட வந்தேன் .. அழைப்ப வாங்கிட்டு முகம் நிறைய சந்தோசம்.. வெளியில போகும்போது, என் புள்ள சொந்தமா படம் எடுக்குறான், என்ன ஆக்ட் பண்ண கூப்பிட வந்தான், வரேன்னு சொல்லிரிக்கேன்.. விம்மி புறப்பட்டு வர இருந்த அழுகையை அடக்கி கொண்டு கெளம்பினேன்" ..
கமல்ஹாசன் ...

சில படங்களில் பெயருக்கு நடித்து கொண்டிருந்தார் கொடுமையான அந்த நாளும் வந்தது. 1980 மே மாதம் தெலுங்கு படபிடிப்பில் மைசூரில் இருந்த சாவித்திரி மயங்கி விழுந்தார். சக்கரை வியாதி முற்றி கோமாவில் விழுந்தார். அண்ணாநகரில் ஒரு உறவினர் வீட்டில் ஒன்றரை ஆண்டு காலம் கோமாவிலே கிடந்தார். சாவித்ரியின் எஞ்சி இருந்த சொத்துக்களை விற்று வைத்தியம் பார்த்தார் ஒன்று விட்ட அண்ணன். இறுதியில் எந்த பலனும் இன்றி 1981-ல் செப்டம்பர் மாத இறுதியில் இறைவனடி சேர்ந்தது அந்த பாசமலர். எல்லோரையும் நம்பிய அந்த தேவதை கடைசி வரை அந்த குணத்தை விடவே இல்லை. ஏதோ கஷ்டம் என்ன ஏமாத்திட்டாங்க விடுங்க" அந்த கள்ளமற்ற சிரிப்பு சினிமா உள்ளவரை மறக்க முடியாத சிரிப்பு .. 45 வயதில் ஒரு சகாப்தம் முடிந்து போனது.

No comments:

Post a Comment