Friday, August 23, 2013

எங்கே போகிறது தமிழனின் ரசனை?

தீர்க்கமான வரலாறும் காலத்தால் அழியாத ஆனால் மறக்கப்பட்டுக்கொண்டிருகின்ற உயரிய இலக்கியங்களுக்கும் நுட்பமான கலைகளுக்கும் சொந்தக்காரர் நாங்கள். அதாவது தமிழர்கள். உயர்மட்ட ரசனை உள்ளவர்களாக எங்கள் மூதாதையர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் உதாரணங்கள்.

ஆனால் எங்கள் தலைமுறையின் ரசனை எதனை நோக்கிப் போய்கொண்டிருக்கின்றது என்பதோ அல்லது எங்கள் அடுத்த தலைமுறை தமிழையும் அது சார்ந்த கலைகளையும் எவ்வாறு கையாளப் போகின்றதோ என்பவை கொஞ்சம் பயம்கலந்த கவலை தரக்கூடிய விடயங்கள் தான்.

நமக்கென தனித்துவமான கலைகள் எத்தனை இருப்பினும் அத்தனையையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது சினிமா. இன்றைய தமிழ் சினிமா எங்கள் ரசனையின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தவோ நடை, உடை, பாவனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவோ முன்னிலை வகிக்கின்றது. எங்கள் ஆரம்ப கால சினிமாவை ஆராயும் போது அவற்றுள் எங்கள் கலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. இசையும் தமிழும் சிதையாமல் கொஞ்சி விளையாடிய அத்திரைப்படங்களை இன்று பார்க்கும் போது எங்கள் மூத்த தலைமுறையினர் எத்தனை ரசனையோடு இருந்திருகின்றார்கள் என்று பெருமையாக இருக்கின்றது. ஆனால் காலம் போகப்போக சினிமா மசாலா வறுவலில் சிக்கி வெறும் காரசாரமாக இருந்தால் போதும் என்கிற நிலையில் இருக்கின்றது. இன்றும் ஈரானிய சினிமாவுக்கு உலக சினிமாவில் ஒரு தனியிடம் இருகின்றதென்றால் அது அவர்களது சினிமாவின் உயர்மட்ட ரசனை தாகம் தான். உலக விருது விழாக்களில் தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் அடிபடுவது கூட மிக அபூர்வமகவே இருக்கின்றது -எனக்குத் தெரிந்த வரை.

ஓர் இசைக் கலைஞனாக இன்றைய தமிழர்களின் இசை ரசனை பற்றி பேசியாகவேண்டும்போல தோன்றுகிறது. இதே சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கர்னாடக சங்கீதம் முறைப்படி தெரிந்தவர்கள் மட்டுமே கதாநாயகனாக, தானே பாடி, தானே நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அது மருவி வந்து - யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பாடலாம் - அதை நாங்கள் தரமானதாக கருதி உயர்த்தி விடுவோம் என்று, பச்சையாக சொன்னால் எங்கள் ரசனை மந்தமாகி விட்டது.

இப்படிச் சொல்வதால் நான் வரத்தக ரீதியான படைப்புகளுக்கு எதிரி என்று அர்த்தமல்ல. ஒரு சாதாரண இசையமைபாளனாக நானும் ஓர் இயக்குனரினதோ தயாரிப்பாளரினதோ கட்டளைக்கு இணங்க, என் மனது ஏற்காத ரசனை கெட்ட விடயங்களை வர்த்தக ரீதியான “படைப்பு“ என்ற பெயரில் வழங்கியிருக்கிறேன்- வழங்கத்தான்போகிறேன். இல்லை என்றால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விடுவேன். இது யதார்த்தம்.

ஆனாலும், அதையும் தாண்டி எல்லா இசையமைப்பாளனுக்குள்ளும் இருகின்ற ஆழ்ந்த இசை ரசனை எனக்குள்ளும் இருப்பதால் சில குப்பைகள் கோபுரம் ஏற்றப்பட்டு - அங்கீகாரம் அளவுக்கதிகமாக வழங்கபடுவதால் அப்படியான படைப்புகள் மட்டுமே இனி தமிழ் படைப்புகள் என்றாகிவிடுமோ என்கிற பயத்தில் கொட்டப்படும் உணர்வுகள் இவை.

தரமான படைப்புகளால் ஒஸ்கார் வரை சென்று தன் வர்த்தக இசைக்குள்ளும் முடிந்தவரை எம் தனித்துவங்களை புகுத்தி உலகையே ரசிக்க வைக்கும் ரஹ்மான்போன்றவர்களுக்கு ஸ்ருதி பிசகினாலும் ஓகே, தாளம் தப்பினாலும் ஓகே. எங்களுக்கு அந்தப் பாடலை ஹிட்டாக்கும் மந்திரம் தெரியும் என களமிறங்கி வெற்றி காண்பவர்கள், களங்கம் விளைவிக்கின்றார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த நிலையை எப்படி மாற்றுவது? அல்லது இதுதான் எதிர்கால தலை விதியா? மசாலா தூவலில் எங்கள் சமூகம் மொத்தமாய் மயங்கிக் கிடக்கப் போகின்றதா அல்லது காலம்மாற ரசனை மாறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-டிரோன் பெர்னாண்டோ (இசையமைபாளர்)

No comments:

Post a Comment