Friday, August 23, 2013

மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை

இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள பள்ளி ஒன்று தனது மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுமத்ரா தீவின் பிரபுமுலிக் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று, தனது மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்ததையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.

திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவு கொள்வதைத் தடுக்கவும், விபச்சாரம் நடைபெறாமல் தடுக்கவும், இத்தகைய உத்தியைப் பின்பற்றப் போவதாக கல்வி அதிகாரிகளுள் ஒருவரான முஹம்மது ராஷித் என்பவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இப்பரிசோதனைக்கு எதிராக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கன்னித்தன்மை இழப்பு என்பது பாலியல் உறவால் மட்டுமல்ல; விளையாட்டு, நலக்குறைவு ஆகியவற்றாலும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் தேசிய குழந்தைகள் நல ஆணையர் ஏரிஸ் மெர்டேகா தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கான எத்தனையோ ஆக்கப்பூர்வத் திட்டங்கள் இருக்கும் போது, இத்திட்டம் தேவையற்றது. கடும் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது என்று மாகாண கல்வி அதிகாரி விடோடோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment