Monday, August 26, 2013

காதலை சொல்வது எப்படி?நீயா? நானா? சொல்லிக் கொடுத்தது


பள்ளிச் சிறுவன் முதல் பல்லு போன தாத்தா வரை காதல் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றுள்ளதாகத் திகழ்கிறது. அந்தக் காதல் ஒரு மந்திர வார்த்தை. சமீபத்தில் தந்திரமாக அதைக் கையில் எடுத்துக்கொண்டது விஜய் டிவி. நீயா? நானா? நிகழ்ச்சி. எதிர் பாலின ஈர்ப்பை காதல் என்று நினைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் மாணவர்களுக்கு காதலை சொல்வது எப்படி என்று ட்யுஷன் எடுத்தது போலிருந்தது நிகழ்ச்சி. டீன் ஏஜினரைக் கவர இன்னொரு உத்தியாகத்தான் இதை பார்க்க முடிந்தது. அதற்கு வெற்றி கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளையின்போது வெளியே வந்து பார்த்தால் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் இதைப் பற்றி பேசுவதை உணரமுடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் நம் வீட்டிலும் நிகழ்ச்சியைப் பார்ப்பார்களே என்ற அச்சமும் தயக்கமும் இல்லாமல் காதல் பற்றி பேசினர். பாவம் பையன்கள்தான் தயங்கித் தயங்கித் பேசியதாகத் தோன்றியது.
ஏற்கனவே விதம் விதமாக காதலை சொல்ல சினிமா போதாதென்று இப்படியெல்லாம் நிகழ்ச்சி தேவையா? என்ற எண்ணம் ஏற்பட்டாலும் சுவாரசியமாகத்தான் இருந்தது. இதில் கலந்து கொண்டவர்கள்(அனைவருமே மாணவர்கள்தான் என்று நினைக்கிறேன்) முகத்தில் ஒரு வித பரவச உணர்வு தெரிந்தது. கட்டாயம் காதலித்தே ஆக வேண்டும் என்று பையன்களும் , நிச்சயமாக காதலிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று பெண்ணும் விரும்புவதை உணர முடிந்தது. காதலை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவே பெண்கள் கருதிக் கொண்டதாகத் தெரிகிறது. பையன்களின் எண்ணமும் அதுவாகவே இருக்கிறது.. காதலை சொல்ல முடியாததையும் காதல் ஏற்கப் படாததையும் வாழ்வின் மிகப் பெரிய துயரமாகக் கருதினர் இந்த இளைஞர்கள்.

காதலை சொல்லும்போது லேசான மழை இருக்கணும். இருட்டா இருக்கணும் மெழுகுவத்தி வெளிச்சத்துல காதலை சொல்லணும்,யாரும் இல்லாத சாலையா இருக்கணும்,கடற்கையா இருக்கணும் போன்ற சினிமாத்தனங்களை இளைஞிகள் விரும்புவது புரிந்தது. காதலுக்காக எதை எழுதினாலும் அதை கவிதை என்று ஏற்க இந்த அம்மணிகள் தயாராக இருந்தனர்.

தான் சொல்வதை தனது அம்மா பார்த்துக் கொண்டிருப்பார் என்று லேசான குற்ற உணர்வோடு "அம்மா சாரி" என்று சொல்லிக்கொண்டே தான காதல் தவிப்பை, தன் உணர்வுகளை ஒரு பையன் அழகாகச் சொன்னது டீன்ஏஜ் பருவத்தினரின் உள்ளங்களை படம் பிடித்துக் காட்டியது

முன்பெல்லாம் காதலை சொல்ல கடிதம் ஒரு கருவியாய் அமைந்ததாக கோபிநாத் குறிப்பிட்டார்..அதை அப்போதைய பெண்கள் விரும்பவும் செய்தனர். காதல் நிறைவேறா விட்டாலும் கடிதங்களை இன்றும் பத்திரமாக பாதுகாத்து எப்போதாவது எடுத்துப் பார்த்து மகிழ்கிறவர்களும் உண்டு. ஆனால் கடிதத்தின் மூலம் காதலை வெளிப்படுத்துவது என்று ஒன்று இருப்பதாகவே இரு தரப்பினரும் நினைத்துப் பார்க்கவில்லை போலிருக்கிறது. கடிதங்கள் சுருங்கி குறுஞ்செய்தி ஆனதன் விளைவாக இருக்கலாம்

காதல் இயல்பானது;.சுவாரசியமானது; கடிதம் எழுதத் தெரியாதவனையும் கவிதை எழுதவைக்கும் இந்தக் காதல் படிப்பிலும் வாழ்க்கையிலும் எந்தவித நல்ல/எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது விவாதிக்கப் படவில்லை. பதின்ம வயதினருக்கு, அட! இப்படிக் காதலை சொல்லிப் பார்க்கலாம் என்றும், அதைத் தாண்டியவருக்கு நாம் காதலித்தபோது இப்படியும் நம் காதலை சொல்லி இருக்கலாமோ என்றும் நமக்கு இப்படி வாய்க்கவில்லையே என்று ஒரு சிலரையும் இந்நிகழ்ச்சி நினைக்க வைத்திருக்கக் கூடும்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரேடியோ ஜாக்கி ராஜவேலு "இந்தப் பெண்கள், காதல்ல எனக்கு சர்ப்ரைஸ் வேணும்; கேர் வேணும்; அட்டேன்ஷன் வேணும்னு கேட்டாங்க ஏன் எனக்கு ரெஸ்பெக்ட் வேணும்னு யாருமே கேக்கல?" என்று கேட்டது கொஞ்சம் சிந்திக்க வைத்தது.

அறிவுபூர்வமாக காதலை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதே காதலின் சிறப்பாகவும் இருக்கிறது. அதுவே குறைபாடாகவும் இருக்கிறது. தான் காதலிக்கும் பெண் வேறு ஒருவனை காதலிப்பதை அறிந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவனை அடிக்கத் தோணும் என்றும் அவளோட எதிர்காலம் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்கவும் தோன்றும் என்று ஒருவன் கூறியது சற்று பயத்தை விளைவித்தது. கோபிநாத், காதலை அவ்வளவு சீரியாசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கண்டித்தாலும் விடலைக் காதலை தூண்டுவதாகவே நிகழ்ச்சி அமைந்திருந்தது.

காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அமிலவீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் காதல் பற்றிய புரிதலை இந்நிகழ்ச்சி உணர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment