Monday, August 26, 2013

சினிமா நடிகர்களும், அரசியலும்…

ரஜினியை தொடர்ந்து, விஜய்யும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். நம்புவோம். ஆனால் ஆசைக்கு விடை கொடுக்க கொடுத்த விலை தான் அதிகம். “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன். என் தந்தையோ வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்”. என்று தெரிவித்து இருக்கிறார்.

சில நடிகர்கள் – அரசியலில் இறங்கி மோதி பார்த்து, தோற்று போய் “சீ…சீ… இந்த பழம் புளிக்கும்” என்று ஓடிவிடுகிறார்கள். சில நடிகர்கள், “பிழைப்புக்கு வேறு இல்லாததால், அரசியலில் இருக்கிறார்கள்”. விஜய் மாதிரி சிலர் – “அலை ஓய்ந்த பிறகு குளிக்கலாம்” என்று கரையிலேயே காத்து கிடப்பர்களும், “எப்போ எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடுவேன்” என்றுரைப்போரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் சரி வராது.

தமிழக அரசியலில் குதித்த சில நடிகர்களை பார்ப்போம். டி.ராஜேந்தர் “உறவைக்காத்த கிளி” என்றொரு படத்தை இரட்டை வேடங்களில் நடித்து இயக்கி கொண்டிருந்தார். வேஷ்டி, சட்டை போட்டிருந்தால் அண்ணன் டி.ராஜேந்தர்… பேண்ட், சட்டை போட்டிருந்தால் தம்பி டி.ராஜேந்தர்… இந்த இரட்டை வேஷ படத்தை எடுத்து கொண்டிருந்த போது, பட தயாரிப்பாளரோடு மோதல் ஏற்படுகிறது. பஞ்சாயத்துக்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் முன் கூடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர், ராமாவரம் தோட்டத்தில் டி.ராஜேந்தரை எப்படி கவனித்தாரோ – மறுநாளே தி.மு.க.,வில் சேர்ந்தார். படம் ப்ப்படம் ஆனாலும், டி.ராஜேந்தரின் பேச்சு, பாட்டு திறன் தி.மு.க,வுக்கு பயன்பட்டது. அன்றைக்கு டி.ராஜேந்தர், கலைஞர் புகழ் பாடி எழுதிய பாடல்கள் – இன்றைக்கும் தி.மு.க பயன்படுத்தும் சாகாவரம் பெற்ற பாடல்கள். “கலைஞர் ஆட்சி மலர போகும் காலம் வருதடா” என்கிற தாலாட்டு பாட்டு, “காமாட்சி, காமாட்சி… நாளை வரும் நம்மாட்சி” மற்றும் “ஏறுது ஏறுது விலைவாசி, காரணம் யாரு நீ யோசி” போன்ற பாடல்கள்.

தி.மு.க.,வுக்கும் சினிமா நடிகர்களுக்கும் ஆகாதே. டி.ராஜேந்தர் கட்சியிலிருந்து விலகினார். தனிக்கட்சி துவங்கினார். பிறகு திரும்ப தி.மு.க.,வுக்கு திரும்பினார். மீண்டும் விலகி, மீண்டும் ஒரு கட்சி துவங்கி… பல காலம் கட்சியிலிருந்தோர் அப்படியேயிருக்க, டி.ராஜேந்தரை ஓரளவுக்கு கலைஞர் வளர்த்தார். அவ்வளவு தான் முடியும். இன்றைக்கு டி.ராஜேந்தரை “சிம்புவின் அப்பா” என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.

நாடார் சமூக பிரதிநிதியாக நடிகர் சரத்குமாருக்கு தி.மு.க.,வில் இடமளிக்கப்பட்டது. சரத்குமாரும், தி.மு.க,விலிருந்து விலகி நாடார் சமூக வாக்குகளை நம்பி, கட்சி துவங்கி ஒரு எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். விரலுக்கேத்த விக்கம் என்பது போல தகுதிக்கேற்ப்ப ஆசைப்பட்டதால் – ஏதோ அரசியலில் அவர் பிழைப்பு ஓடுகிறது. தி.மு.க நடிகர்கள் நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரித்திஷ் போன்றவர்களுக்கு பதவி கிடைக்கிறது என்றால் “அவர்கள் நடிகர்கள்” என்பதற்காக அல்ல. குஷ்புவும் அப்படி தான். தங்களை மீறி வளர்ந்தால் வெளியேற்றப்படுவார்கள்.

எம்.ஜி.ஆர் “தனது கலையுலக வாரிசு பாக்யராஜ்” என்று சொன்ன ஒரே காரணத்துக்காக – பாக்யராஜ்க்கும் அரசியல் ஆசை வந்து, அவரும் கட்சி துவங்கி “சீ… சீ… இந்த பழம் புளிக்கும்” என்று ஒதுங்கி கொண்டார். பாக்யராஜை போல “சீ… சீ… இந்த பழம் புளிக்கும்” என்று ஒதுங்கி கொண்ட மற்றொரு நடிகர் நம் நடிகர் திலகம். கட்சி துவங்கி பொருளை இழந்து, நிம்மதி இழந்து… “அரசியல் – அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்பார்கள். அது தெரியாமல் சிலர் உள்ளே போய் மீண்டு வந்தார்கள்.

அடுத்து வருகிறார் கேப்டன். ஆசைப்பட்டார். கட்சி துவங்கினோர். விஜய்காந்த் என்ற பெயருக்கு, தான் நின்ற தொகுதியில் மட்டும் ஜெயித்தார் 2006 சட்டசபை தேர்தலில். அது ஒன்று தான் – சென்ற சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தந்தது. தனித்து நின்று வை.கோவால் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத போது, ஒரு சினிமா நடிகர் ஒரே ஒரு தொகுதியில் பெற்ற வெற்றி “ஆட்டம் போட வைக்கிறது”. நாகரீக அரசியலின் உருவமாம் வை.கோவுக்கு கிடைக்காத மரியாதை, சட்டமன்றத்திலேயே நாக்கை துருத்தி பேசும் விஜய்காந்துக்கு கிடைக்கிறது.

விஜய்காந்த் கட்சி அலுவலகத்துக்கு சென்று – தங்கள் சுயமரியாதையை விட்டு பேசுகிறார்கள் இரண்டு கம்யூனிஸ்ட்களும். “தன் படத்தில் நடித்த விஜய்காந்தே அரசியலில் ஜெயிக்கும்போது, ஏன் தன் பிள்ளை விஜய்யால் அரசியலில் ஜெயிக்க முடியாது” என்று எஸ்.ஏ.சியின் மூளை சிந்தித்துள்ளது. பையனுக்கும் அரசியல் ஆசையை வளர்த்துள்ளார்.கடைசியில் தலைவாவின் தலை போனது தான் மிச்சம். இந்த விஷயத்துக்காக எல்லோரும் ஜெயலலிதாவை பழிக்கிறார்கள் – கலைஞர் உட்பட. அவருக்கு ஒரு உண்மை புலப்படவில்லை.

“ஜெ, தி.மு.க.,வினருக்கு முக்கியமாக கலைஞர் குடும்பத்தினருக்கு நன்மையே செய்திருக்கிறார்” எப்படி என்கிறிர்களா? விஜயாலோ அல்லது எந்த ஒரு நடிகரின் அரசியல் பிரவேசத்தாலோ என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது. ஜெக்கு வாரிசு இருந்து அவர்கள் என்ன முதலமைச்சர் பதவிக்கா கனவு காண்கிறார்கள். கிடையாதே. கலைஞர் குடும்பத்திலோ – தடுக்கி விழுந்தால் முதல்அமைச்சர்களின் மேல் தான் விழ வேண்டும் என்பது போல ஏகப்பட்ட முதலமைச்சர்கள்.

ஒரு எம்.ஜி.ஆரால் பத்து வருஷ தி.மு.க ஆட்சி போனது. ஒரு ஜெயலலிதாவால் பதினைந்து வருஷ தி.மு.க ஆட்சி போனது. ஒரு விஜய்யால்… தலைவாவுக்கு விழுந்த அடியால், “அரசியலில் இறங்குகிற எண்ணம் கிடையாது” என்று சொல்ல வைத்துள்ளது. எந்த காலத்திலும் அ.தி.மு.க. சினிமா நடிகரால் உடைந்ததில்லை. ஆட்சியை இழந்ததில்லை. ஆனால் தி.மு.க.,வுக்கு – அப்படியா? நடிகர்களால் தானே எல்லா தொல்லைகளும். அந்த வகையில் தி.மு.க.,வுக்கு மறைமுக நன்மையே கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment