Saturday, August 24, 2013

கருணாநிதி-அன்பழகன் நட்பின் ரகசியம்

தானும் பேராசிரியர் அன்பழகனும் இவ்வளவு காலம் ஒற்றுமையோடு இருப்பதற்கு ஆற்காடு வீராசாமி தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 

அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி சீனிவாசன் மகன் அசோக்குமார்-பத்மாவதி திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது: ஆற்காடு வீராசாமியை பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். 

தொண்டுள்ளமும், தியாக மனப்பான்மையும் உழைக்கும் திறமையும் கொண்டவர். இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக நினைக்கும் நெஞ்சம் கொண்டவர். இந்த இயக்கத்தில் என்.வி.என். மறைவுக்கு பிறகு யார் என்று நினைத்த நேரத்தில் கிடைத்த புதையல் தான் ஆற்காடு வீராசாமி. எறும்பின் சுறு சுறுப்போடு, தேனீயின் அக்கரையோடு இயக்கத்தை கட்டிக் காக்கும் தளகர்த்தர். 

வடஆற்காடு மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் அறியும் வகையில் அவர் கீர்த்தி பெற்று விளங்க அவரது உழைப்பும், தியாகமும், தான் முதலீடு. 

அவரது திருமணம் நடந்தபோது தந்தையார் எதிர்ப்பால் தனக்கு ஷாக் அடித்ததாக கூறினார். அதை வைத்தே புரிந்து கொண்டேன். வருங்காலத்தில் அவர் மின் துறை அமைச்சர் ஆவதற்குத் தான் என்று. அவரது வாழ்க்கையில் பொதுப்பணி பாதையில் அவருக்கு ஏராளமான ஷாக் அடித்து இருக்கிறது. அதற் கெல்லாம் ஈடு கொடுத்து வீர நடை போட்டு இயக்கத்தை சுட்டி காக்கும் தளகர்த்தர்களில் அவர் ஒருவர். 

வீராசாமி யார் மனமும் கோணாமல் நடந்து கொள்பவர். இந்த சுபாவமும், பன்பும் இயக்கத்தில் ஒவ்வொரு வருக்கும் வரவேண்டும். நானும், பேராசிரியர் அன்பழகனும் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதை, இன்று அரசியல் வட்டாரத்தில் அதிசயமாக பார்க்கிறார்கள். சம காலத்தில் வாழும் இரு தலைவர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பதை பார்க்க இயலாது. 

எங்கள் இருவரது நட்பையும், அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளையும் ஒட்டி பிணைத்துக் கொண்டிருப்பவர் வீராசாமி தான் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment