Tuesday, August 13, 2013

எண்பதுகளின் தமிழ் சினிமாவின் பிரம்மா


கோபி நாகையா தியேட்டரில் முந்தானை முடிச்சு படம் ரிலீஸ்! கிராமங்களில் இருந்து சாரை...சாரையாக இந்தப் படத்திற்கு வந்து கொண்டு இருந்தார்கள் படம் முடிந்து போனவர்கள் கையில் இலவசமாக இரண்டு முருங்கக்காய்களை கொடுத்தது தியேட்டர் நிர்வாகம். முருங்கக்காய் இலவசம் என்பதற்காக மக்கள் வரவில்லை! ஏழைகளின் வயாக்ராவை சாமர்தியமாக புகுத்தியிருப்பார் இந்த படத்தில். இப்போதைய இயக்குனர்கள் முதல் படம் ஹிட்டடித்ததும் இரண்டாவது படத்திலேயே கதை வரட்சி ஏற்பட்டு ஈரானிய மற்றும் கொரிய திரைப்படத்தை வுட்டாலக்கடி செய்து உலக திரைப்பட இயக்குனர்களைப் போல் மேடையில் பீத்தோ..பீத்தென்று..பீத்துகிறார்கள் அவர்கள் கொஞ்சம் பாக்கியராஜ் படங்களை பார்த்தாலே போதும், இவருடைய திரைக்கதை இரு வேறு பாதையில் பயணிக்கும் கதைகளை இறுதியில் அழகாக முடிச்சு போடுவார், வேறு இன்றைய இயக்குனர்களுக்கு பல தொழில்நுட்பம் இருக்கும் காலத்திலேயே குழப்பிவிடும் பொழுது தொழில் நுட்பம் வளராத காலத்திலும் துளி கூட பிசிறடிக்காத திரைக்கதையை வடிவமைத்து இயக்கி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த திரையுலக மாமேதை பாக்கியராஜ் அவரின் படங்களைப் பற்றி பார்ப்போம்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த போது சிகப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற திரைப்படங்களில் கதை வசனம் எழுதியிருந்தார் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.கன்னிப் பருவத்திலே படத்தில் வில்லனாக அறிமுகமானார், இயக்குனராக சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தை இயக்கி ஒரு கவுரவ வேடத்தில் நடித்தார்,சுதாகர் கதாநாயகன்.

அடுத்ததாக தன் சொந்த தயாரிப்பில் "ஒரு கை ஓசை" திரைப்படத்தை இயக்கினார் அவரே வாய் பேசமுடியாத ஊமை கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து இயக்கியிருந்தார், அஸ்வினி நாயகியாக நடித்த இத்திரைப்படம் பெரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது, அடுத்ததாக வெளிவந்த "மௌன கீதங்கள்" திரைப்படம் சரிதா நாயகியாக நடித்திருப்பார் சரிதா பாக்கியராஜை ஏமாற்றி வேலையில் சேர்ந்து கொள்வதும், அதே அலுவலகத்தில் மேனேஜராக சேருகிறார் பின்னர் நகைச்சுவையாக தாம்பத்தியத்தை அலசும் திரைப்படம். கேனத்தனமான இவர் செய்யும் செயல்கள் மனைவியை சந்தேகப்பட வைப்பதும் அதை இவர் புரியவைப்பதும் ரசிக்கும் காட்சிகள்.

அடுத்தாக சஸ்பென்ஸ் திரில்லராக பேசப்பட்ட "விடியும் வரை காத்திரு" எனும் திரைப்படத்தில் சொத்துக்காக திருமணம் செய்த மனைவியை கொலை செய்ய ரயிலில் ஊட்டியில் இருந்து குன்னூர் போகும் வழியில் இறங்கி கொலை செய்து விட்டு வெலிங்டன் ஸ்டேசனில் ஏறும் காட்சி சீட்டு நுனிக்கு வரவழைக்கும் காட்சி.

அடுத்தாக வந்த "தூறல் நின்னு போச்சு" வில்லன் நடிகர் நம்பியார் குணசித்திர வேடத்தில் பட்டைய கிளப்பியிருப்பார்! ஆட்டுபால் திருடி குடிக்கும் பயில்வானாக நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார்,சுலக்ஸனாவை பெண் பார்த்து விட்டு வந்த பிறகு மனதில் காதல் வளர்த்த பிறகு திருமண ஏற்பாடு நின்று போக சுலக்ஸனாவை திருமணம் முடிக்க நம்பியாருடன் கூட்டணி அமைத்துப் போராடுவார், கிராம முரட்டு மனிதர்களின் வரட்டுப் பிடிவாதத்தை வைத்து பின்னப்பட்ட மிகச்சிறந்த படம்! நான் பல தடவை ரசித்துப் பார்த்த படம்.

"இன்று போய் நாளை வா!" இதுவும் என்பதுகளில் வேலையில்லாத இளைஞர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம், ஊருக்கு புதிதாக குடி வரும் பிகரான ராதிகாவை மூன்று நண்பர்கள் டாவடிப்பதும், அவர்களுடைய வீட்டு வேலைகளைச் செய்வதும் மிகவும் ரசிக்கப்பட்டத் திரைப்படம் அன்றைய இளைஞர்களை கவர்ந்தது. பயில்வான் தாத்தாவாக வரும் கல்லாப்பெட்டி சிங்காரமும் ஹிந்தி வாத்தியார் அப்பா ஜான் அவர்களிடமும் மாட்டிக் கொண்டு பிகருக்காக அடிவாங்குவதும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம்.

மற்றும் "எந்தா சாரே என்னுடைய காதலி நிங்களுடைய மனைவியாகலாம் !நிங்களுடைய மனைவி என் காதலியாக ஆக கூடாது சாரே!" என்று கிளைமாக்ஸ் காட்சியில் கூறும் காட்சியில் பலரை அழவைத்த அந்த ஏழு நாட்கள் பாலாக்காட்டு மாதவனாக பாக்கியராஜ் அரைகுறை மலையாளம் பேசி நடித்த படம்! பெறும் வெற்றி பெற்றது, இப்பொழுதும் சில நேரங்களின் என் பொழுதைக் கழிக்கும் படம்.

மனைவி குண்டாக இருக்கிறாள் என்று வேறு ஒரு மோசமான பெண்ணிடம் மாட்டிக் கொள்ளும் கணவனாக நடித்த "சின்னவீடு" பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் பில்லா-2வை இயக்கிய சக்ரி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் இது, ஊர்வசியின் அக்கா கல்பனா அறிமுகம் செய்யப்பட்ட படம்.

நடிகர் திலகத்துடன் இணைந்து எடுத்த "தாவணிக்கனவுகள்" திரைப்படம் பாக்கியராஜின் சொந்தக்கதை போலவே தோற்றமளிக்கும் ஐந்து தங்கைகளை வைத்துக் கொண்டு தவிக்கும் அண்ணனாக இருந்து சினிமாவில் நடித்து வாழ்க்கையில் உயர்ந்து தங்கைகளுக்கு திருமணம் முடிக்கும் கதை, அவர்களின் குடும்பத்துக்கு உதவும் மிலிட்ரி மேனாக நடிகர் திலகம் வாழ்ந்திருப்பார்!

தாயின் மடிக்காகவும் அன்பிற்கு ஏங்கும் ஒருவனை இரண்டாம்தாரமாக வந்த சரஸ்வதி தன் வசப்படுத்தி கொடுமை செய்யும் "எங்க சின்ன ராசா" ஆத்தா சொன்னாள் என்பதற்காக படிப்பையே தூக்கியெறிவதும் அதே கல்விக்காக ஏங்குவதும் ஒரு அப்பாவி கிராமத்து இளைஞனாக வாழ்ந்திருப்பார், அதில் ஒரு காட்சியில் மண்ணாங்கட்டி உள்ளூர் நாவிதரிடம் மொட்டையடித்துக் கொண்டு "ஆத்தா நல்லாருக்கோணும்ன்னு திருப்பதி போயி மொட்டையடிச்சுட்டு வந்தனுங்க.." என்று கூலி உயர்வு பெறுவதும், அடுத்த நாள் வயல் வேலைக்கு வருபவர்கள் அனைவரும் மொட்டையடித்துக் கொண்டு வருவதும்... பாக்கியராஜ் முழிப்பதும் நான் மிகவும் ரசித்த காட்சி.

பவுனுபவுனுதான் என்கிற படத்தில் ரோகினி அறிமுகம், ராணுவத்திற்கு சென்ற தன்னுடைய மாமனுக்காக காத்திருக்கும் வேடத்தில் ரோகினி கிராமத்து கிளியாக வாழ்ந்திருப்பார்,நான் உன்னுடைய மாமன் என்று பொய் சொல்லிக்கொண்டு ரோகினியை காதலிப்பதும் பிறகு உண்மை தெரிய வரும்போது அதை எதிர் கொள்வதும் பலர் மனதில் இடம் பிடித்த கிராமத்துக் காவியம் இத்திரைப்படம்!

இது நம்ம ஆளு திரைப்படம் எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய ஒரேபடம்! பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்தது, தானே இசையமைத்தார், நான் மிகவும் ரசித்த காட்சி திருப்பூர் ராமசாமி போலி அப்பாவாக நடிப்பார் சோமய்யாவிடம் குமரிமுத்து உண்மையை கூறிவிடுவார் கடுப்பில் இருக்கும் அவரிடம் ராமசாமி "என்ன வோய் லட்டு இவ்வளவு சின்னதா இருக்கு" என்று ரவுசு பண்ண பளார் என்று கண்ணத்தில் அறைவார்....ரசிச்சு சிரித்த காட்சிகள்!

பானுப்பிரியா இந்தியில் இருந்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு வந்த "ஆராரோ ஆரிராரோ" மனநலம் குன்றியவராக பானுப்பிரியாவும் காப்பகத்தில் வேலை செய்யும் கோபாலாக பாக்கியராஜ் நடித்து இயக்கிய இத்திரைப்படத்தில் சிரித்தது போல் வேறு எந்த படத்திற்காக நான் சிரித்தில்லை, தமிழில் சிறந்த நகைச்சுவை திரைப்படப் பட்டியலில் இந்தப் படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.

இளம் பெண்ணின் மனதில் நுழைந்த குருவின் மீதான காதலும்! அதை எப்படி எதிர்கொள்கிறார் குரு எனவும்! நகைச்சுவை இழையோட சிக்கலான திரைக்கதையாக அமைத்து, இறுதியில் அழகாக முடிச்சை அவிழ்க்கும் "சுந்தரகாண்டம்" பாக்கியராஜின் சிறந்த திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு, இதைப் போன்றே சிக்கலான திரைக்கதையான வீட்டுல விசேங்க....திரைப்படமும் அவரின் பட்டரையில் தீட்டப்பட்ட வைரமே!

எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட "ரத்தத்தின் ரத்தம்" என்கிற படத்தை "ரகசிய போலீஸ் 100" என்கிற பெயரில் தனது பானியில் நகைச்சுவை கலந்த துப்பறியும் சாம்பு சாயலில் வந்த படம் சிலுக்கு நாயகி இரட்டை வேடத்தில் இவர் நடித்த இந்த திரைப்படம் டபுள் மீனிங் அதிகம் இருக்கும் சிறந்த பொழுது போக்குப் படம்.

ஊதாரித்தனமாக ஊர்சுற்றித்திரியும் பணக்கார இளைஞன் ஒருவனுக்கு தான் ஒரு அனாதை தத்துதெடுக்கப்பட்டு வளர்த்தவன் எனத் தெரியும் போது ஏற்படும் உணர்ச்சிப் போராட்டமும் அழகான காதலும் நகைச்சுவையூடே வந்த "ராசுக்குட்டி" சிறந்த படம் அடுத்து வந்த "ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி" மீனா ராஜகுமாரியாகவும் நடித்த சுமாராக ஓடிய திரைப்படம். "அம்மா வந்தாச்சு" குஸ்புவுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஓரளவுக்குதான் ஓடியது "வேட்டிய மடிச்சுகட்டு" திரைப்படம் பொருளாதார ரீதியாக ஒரு கலைஞனை சற்று சறுக்கியது உண்மை! அதை "சொக்கத்தங்கம்" என்கிற திரைப்படம் விஜயகாந்தை வைத்து எடுத்து சரிபடுத்தினார் தன்னுடைய மகளை வைத்து இயக்கிய "பாரிஜாதம்" ஒரு சுமாரான படம்தான்,

ஒரு கலைஞனுக்கு ஏற்றமும் இறக்கமும் சகஜம்தான், ஆனாலும் ஒவ்வொரு படத்தின் கதையையும், கேரக்டர்களையும், வாழும் மனிதர்களில் இருந்து பெற்று, அதை சுவைபட, பிசிறு இல்லாத திரைக்கதை, நகைச்சுவையுடன் இலை மறை காயாக பாலியல் சமாச்சாரத்தையும் கலந்து இவர் தமிழ் திரையுலகிற்கு அளித்த திரைப்படங்கள் இத் துறையில் இருப்பவர்களுக்கும், வருகிறவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

1 comment:

  1. பாக்கியராஜ் படங்களை ஒரு அலசு அலசி விட்டீர். தெளிவான திரைக்கதை பாக்கியராஜின் பலம்

    ReplyDelete