Saturday, August 24, 2013

ஓகோ... கோ... பாவுரமா

அஷ்டவதானி, என புகழப்பட்டவர் டாகடர். பானுமதி ராமகிருஷ்ணா. இவருடன் நடிப்பதென்றால் எல்லோருக்குமே சிம்ம சொப்பனம். ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர். ஆந்திர மாநிலம் உள்ள தெட்டாவரம் கிராமத்தில் 1925ல் பிறந்தவர் பானுமதி. தந்தையார் பெயர் பொம்மராஜி வெங்கடசுப்பையா. சிறு வயதிலேயே பாட்டிலும், நடிப்பிலும், பானுமதிக்கு ஆவல் ஏற்பட்டது.

பானுமதி தனது 13 வது வயதில் திரை உலகில் நுழைந்தார். ‘வரவிக்ரயம்’ என்னும் தெலுங்குப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அதில் அவர் பாடிய பாடல்கள் இசைத்தட்டுகளாக வெளியாகி வெற்றி நடை போட்டது. பின்னர், தெலுங்கு டைரக்டர் பி.புல்லையா அவர்களின் இயக்கத்தில், மாலதி மாதவம் என்ற படத்தில் பானுமதியை கதாநாயகியானார். தொடர்ந்து , பக்திமாலா, கருட கர்வபங்கம், தர்மபத்தினி, கிருஷ்ண பிரேமா போன்ற படங்களில் பானுமதி நடித்தார். புகழின் உச்சியை அடைந்தார். கிருஷ்ண பிரேமா படத்தில் நடித்த போது, பானுமதிக்கும், துணை இயக்குனர் ராமகிருஷ்ணாவுக்கும் காதல் உண்டானது. இருவரது வீட்டிலும் எதிர்ப்பும் உண்டானது.

எதிர்ப்பையும் மீறி, தடைகளை தாண்டி, 8.8.1943 ல் ராமகிருஷ்ணாவை பானுமதி தனது 18ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவை விட்டு விட வேண்டும் என்று பானுமதி எண்ணினார். ஆனால் விதி ஒரு நல்ல நடிகையை தான் உருவாக்கியது. திரை உலக பிரம்மாவான நாகிரெட்டியின் சகோதரர், பி.என்.ரெட்டி ராமகிருஷ்ணாவிடம், தான் தயாரிக்க இருக்கும் சொர்க்க சீமா படத்தில் பானுமதி நடிக்க கேட்டு கொண்டார்.

பானுமதி மீண்டும் நடிப்பதை அவர் கணவர் ராமகிருஷ்ணா விரும்பவில்லை. என்றாலும், பி.என்.ரெட்டியின் வேண்டுகோளுக்காக அந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்க பானுமதியிடம் கூறினார். படத்தின் கதை ஒரு நடிகை பற்றி தான், ஏழை பெண் பெரிய நடிகையாக ஒரு பெரிய டைரக்டரின் வாழ்க்கையில் நுழைகிறார். திருமணம் ஆன டைரக்டரின் வாழ்க்கையில் அதனால் குழப்பம். குடும்பப் பிரிகிறது. எண்ணற்ற சம்பவங்களுக்கு பிறகு, குடும்பம் ஒன்று படுகிறது. சித்தூர் வி.நாகையா டைரக்டராகவும், பானுமதி நடிகையாகவும் நடித்து படம் வெளியானது. படம் பிய்த்து கொண்டு ஓடியது, வரலாறு கண்டறியாத வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுதிலும் பானுமதி மிகப்பெரிய தாரகை ஆனார். எல்லா முன்னணி நடிகர்களும் பானுமதியின் ரசிகர் என்று ஆனார்கள்.

தமிழ்நாட்டிலும் வெளியாகி அந்த படம், தமிழ் படம் போல திரையிட்ட இடமெல்லாம் ஓடியது. கையில் வெள்ளைப் புறாவை வைத்துக்கொண்டு, ஓகோ... கோ... பாவுரமா என பானுமதி பாடும்போது திரையில் விசில் பறந்தது. காசுகள் இறைக்கப்பட்டது. தமிழ் ரசிகர்களும் அந்தப் பாட்டை ஜெபித்தனர். சொர்க்க சீமா பெற்ற வெற்றியால் சினிமாவுக்கு முழுக்கு போடும் எண்ணத்தை பானுமதி மறந்தார். பின்னர் எம்.கே. தியாகராஜா பாகவதர் ராஜமுக்தி என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தில் பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ் படமும் இதுவே. இந்த படத்தில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, எம்.ஜி. சக்ரபாணி போன்றோரும் நடித்து 9.10.1948ல் வெளியானது.

இந்த படம் படு தோல்வி அடைந்தது. பின்னர் பேரறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில், என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த நல்லதம்பி என்ற படத்தில் பானுமதி தோன்றினார். 4.2.1949ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து , பி.யு. சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்தில் பானுமதி நடித்தார். இரு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் மற்றொரு கதாநாயகி கே. மாலதி, இயக்கம் கிருஷ்ணன், பஞ்சு. 15.12.1949ல் வெளியான ரத்னகுமார் சுமார் வெற்றி.

அதன் பின்னர் வந்த ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படமே பானுமதியின் சிறப்பை காட்டிய படம். இதில் பானுமதியின் நடிப்பை அபாரம். இரட்டை வேடங்களில் ஜொலித்தார். எம்.கே. ராதா ஜோடி சேர்ந்தார். அபூர்வ சகோதரர்கள், தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியானது. மூன்று மொழிகளிலும் பானுமதியே கதாநாயகி. மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகைக்கான பரிசு வென்றார். வெற்றிகள் தொடர, சொந்தப் படம் எடுக்க தொடங்கினார். லைலா மஜ்னு கதையை, தெலுங்கில் தயாரித்தார், தமிழில் மொழி மாற்றம் செய்தார். இரண்டு மொழிகளிலும் கதாநாயகன் ஏ. நாகேஸ்வரராவ், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணாவே இப்படத்தை இயக்கினார். லைலா மஜ்னு வெற்றிகரமாக ஓடியது. இந்நேரத்தில் ஜெமினி பட நிறுவனர்கள் தயாரித்த ஒரிஜினல் தமிழ் லைலா மஜ்னு படம் படு தோல்வி அடைந்தது. பின்னர் பானுமதி சண்டி ராணி என்ற படத்தையும் தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்து, இயக்குனர் என்ற நிலையும் அடைந்தார். இப்படத்தின் கதாநாயகன்: என்.டி. ராமராவ். இப்படம் வெளியாகி தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் சுமார் வெற்றி அடைந்தது.

No comments:

Post a Comment