Friday, July 19, 2013

புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்


எளிமை!

மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக் கேட்டார். ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..'' என்று மறுத்தார்கள்.

""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம்!
அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான் அவர்தான் அந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.

அவர் யார் தெரியுமா? அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டினார்.

புத்தகம்!

ஒருசமயம், நேரு வெளியூர் பயணம் கிளம்பினார். போய் வரக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும். இதற்காக 50 புத்தகங்களை நேரு எடுத்து வைத்தார். இதைக் கவனித்த, அவரது மகள் இந்திரா காந்தி, ""அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் உங்களால் எப்படி இந்தப் பயணத்தில் படிக்க முடியும்?'' என்று கேட்டார்.

அதற்கு நேரு, ""உண்மைதான்... இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான். ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்கூட இருப்பதுபோல நான் உணர்வேன் அல்லவா? இந்தத் துணை அபார சக்தி கொண்டது. அதனால்தான் இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்'' என்று கூறினார். அந்தளவுக்குப் புத்தகப் பிரியர் நேருஜி.


துடிப்பு!

சென்னைக்கு காந்தியடிகள் வருகை தந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்துக்குத் திடீரென்று பாரதியார் வந்தார்.

""மிஸ்டர் காந்தி, இன்று மாலை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் நீங்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். வரமுடியுமா?'' என்று கணீரென்ற குரலில் கேட்டார்.

வந்தவர் யாரென்று தெரியாத காந்தி, சிறிதுநேரம் யோசித்துவிட்டு, ""இன்றைக்கு வர நேரமில்லை. நாளைக்கு வேண்டுமானால் நான் வர இயலும். கூட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமானால், நிச்சயம் நாளை வருகிறேன்'' என்றார்.

உடனே பாரதி, ""நான் கூட்டத்தை யாருக்காகவும் தள்ளி வைக்கமுடியாது. நான் வருகிறேன்'' என்று துடிப்புடன் கூறிவிட்டு அகன்றுவிட்டார்.

அருகிலிருந்தவரிடம் காந்தியடிகள் வந்தவர் யாரென்று விசாரித்தார்.

அவர் சிரித்தவாறே, ""அவர்தான் தமிழ்நாட்டின் ஒப்பற்ற கவிஞர் பாரதியார்'' என்றார்.
காந்தியடிகள் வியந்து போனார்.


திருடுகிறேன்!

பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம், அவர் பேசும் பேச்சில், நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி பேசுவார்.

இது எல்லாருக்கும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் அவரிடம் சிலர் கேட்டனர்.

""உங்கள் பேச்சுக்கள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உண்டு பண்ணுகின்றன. எதையாவது உங்களிடம் கேட்கும் போது நேரமில்லை என்று பதில் சொல்லும் நீங்கள், நிறையப் புத்தகங்களை மட்டும் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று சொல்லுங்களேன்!'' என கேட்டனர்.

நேரு அமைதியாகவும், புன்முறுவலோடும், ""திருடுகிறேன்!'' என்றார்.

இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போயினர்... அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
"பிரதமர் திருடுகிறேன் என்று சொல்லுகிறாரே... எதைத் திருடுகிறார்? யாரிடம் இருந்து திருடுகிறார்? ஒருவேளை தன்னுடைய சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் உதவியாளர்கள் எழுதி தரும் குறிப்புகளை வைத்து, உதவியாளர் மூலம் அறிக்கை பெற்று அதை அவர் பேசுகிறாரா?' என்று பேசிக்கொண்டனர்.

நேரு புன்னகையுடன் சொன்னார், ""நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும் என்பதை நான் நிர்ணயிப்ப தில்லை. அதை என் உதவியாளர் தான் தீர்மானிக்கிறார். நான் எப்போது எழ வேண்டும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார். ஒரு நாளைக்கு நான் ஐந்து மணி நேரம் உறங்கலாம். சில சமயம் ஆறு மணி நேரம் உறங்கலாம் என்று அவரே கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்.

இப்படி என் வாழ்க்கை நெறிமுறை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. என் செயலர் எனக்கு ஒதுக்கிய உறங்கும் நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து, நான் தினந்தோறும், இரண்டு மணி நேரத்தைத் திருடிக் கொண்டு விடுகிறேன். அந்த இரண்டு மணி நேரத்தை நான் பல்வேறு புத்தகங்கள் படிக்க செலவிடுகிறேன்,'' என்று நேரு சொல்லி முடித்தவுடன், கிசுகிசு பேசியவர்கள் வாயடைத்துப் போயினர்.

No comments:

Post a Comment